அட்டைகள்
கற்களின் மீது ஓர் அட்டை
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்குகள்உலகம்
தொகுதி: வளைத்தசைப் புழு
வகுப்பு: Clitellata
துணைவகுப்பு: Hirudinea
Lamarck, 1818
Orders

Arhynchobdellida or Rhynchobdellida
There is some dispute as to whether Hirudinea should be a class itself, or a subclass of the Clitellata.

அட்டைகள் ஈரமான பகுதியில் வாழக் கூடிய ஒட்டுண்ணிப் புழுக்களாம். அட்டைப் பூச்சி என்ற பொதுவழக்கு தவறானது. ஏனெனில் அட்டை மண்புழுவோடு தொடர்புடைய ஒரு வளையப் புழு (annelid) ஆகும். சில இனங்கள் குருதி குடிக்கும் ஒட்டுண்ணிகளாகச் (haemophagic parasite) செயல்படுகின்றன.[1][2]

வாழிடம் தொகு

அட்டை குளம் குட்டை ஆறு முதலிய நன்னீர் நிலைகளிலும், கடலிலும், ஈரத்தரை மீதும் வாழும் ஒருவகைப் புழு. அன்னெலிடா (Annelida) என்னும் வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அட்டையில் பல சாதிகளுண்டு. அவை பலவகையான வாழ்க்கை முறையுள்ளவை. சில அட்டைகள் மண்புழு, பூச்சிகளின் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்கின்றன. அசுத்தங்களை உண்டு துப்புரவாளர்கள் போல அவற்றைச் சில நீக்குகின்றன. பெரும்பாலான வகைகள் மற்றப் பிராணிகளின் உடம்பில் எப்போதும் அல்லது சிற்சில சமயங்களில் ஒட்டிக் கொண்டு அவற்றின் உடலிலுள்ள இரத்தத்தையோ சாற்றையோ உறிஞ்சி ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன. அட்டை நீரில் நன்றாக நீந்தும். அதன் உடலை மேலும் கீழுமாகச் செங்குத்தாக அலைபோல அசைத்து நீந்திச் செல்லும். நாம் கைவிரல்களால் ஓட்டை அல்லது சாண் அளப்பதுபோலத் தரையில் அட்டை ஊர்ந்து செல்லும் இயல்புடையன ஆகும்.

உடலமைப்பு தொகு

அட்டையின் உடல் சற்றுத் தட்டையாக இருக்கும். தோலின் மேலே குறுக்கே உடல்நெடுக மடிப்பு மடிப்பாக இருக்கும். மருத்துவத்தில் உபயோகப்படும் சாதாரண அட்டையின் உடலில் இந்தத் தோல் மடிப்புக்கள் நூற்றுக்குமேல் இருக்கும். இதன் உடல் 33 வளையங்களால் ஆனது. 26 வளையங்களை எண்ணலாம். பொதுவாக ஒரு உடல் வளையத்துக்கு 5 தோல் மடிப்புக்கள் இருக்கின்றன. முன்பக்கத்தில் 5 ஜதைக் கண்கள் இருக்கின்றன. அட்டையின் முன்முனையிலும் பின் முனையிலும் உறிஞ்சிகள் (Suckers) என்னும் உறுப்புக்கள் உண்டு. இவை வட்டமான அல்லது நீளவட்டமான சற்றுக் குழிந்த கிண்ணம் போன்றவை. இவற்றைத் தட்டையாக அமுக்கி ஓரத்தை அழுத்திக் கொண்டே நடுவிலுள்ள பாகத்தைச் சற்று உயர்த்துவதால் இவற்றிற்குள்ளே அழுத்தம் குறைவான ஓர் இடம் உண்டாகிறது.

இதன்மேல் அழுத்தம் மிகுந்திருப்பதால் இந்த உறிஞ்சி இடப்பட்ட இடத்திற்குக் கெட்டியாக ஒட்டிக்கொள்கிறது. உறிஞ்சியை விடுவிக்க வேண்டுமானால் ஓரத்தைச் சற்றுத் தூக்கினால் போதும்; உள்ளும் புறமும் அழுத்தம் ஒன்றாகி உறிஞ்சியின் பிடிப்பு விட்டுவிடும். முன்னுறிஞ்சியின் நடுவில் வாய் இருக்கிறது. அதில் மூன்று வளைவான தகடு போன்ற தாடைகள் உண்டு. ஒவ்வொரு தாடையின் விளிம்பிலும் கூரான பற்கள் உண்டு. இவையெல்லாம் கைடின் (Chitin) என்னும் பொருளாலானவை. உறிஞ்சியால் அழுத்திப் பற்றிக் கொண்டு இந்தத் தாடைகளை முன்னும் பின்னும் அசைவித்து அட்டை தான் ஒட்டிக்கொண்டிருக்கும் பிராணியின் தோலிலே முக்கோண வடிவான ஒரு காயம் உண்டாக்குகிறது. அதன் வழியாக அட்டை இரத்தத்தை உறிஞ்சும். அட்டையின் உமிழ்நீர் அதோடு கலக்கும். அந்த உமிழ்நீரில் ஹிருடின் என்னும் ஒரு சத்து இருக்கிறது. அது இரத்தம் உறைந்து போகாமல் திரவமாகவே இருக்கச் செய்கிறது. அட்டையின் தீனிப்பையில் (Crop) ஜதைஜதையாகப் பல பைகள் இருக்கின்றன. சாதாரண அட்டையில் 11 ஜதைகள் இருக்கின்றன. இவற்றில் இரத்தம் சேகரித்து வைக்கப்படுகிறது. அட்டை ஒரு தடவை நன்றாக இரத்தம் குடித்துவிட்டால் 10, 12 மாதம்கூட உணவின்றி உயிர் வாழ்ந்திருக்கும்.

அட்டைப் பூச்சி ஒரே நேரத்தில் தனது உடல் எடையைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக அளவு ரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கும் திறன் கொண்டது. இந்த நன்னீர் அட்டைகளின் உமிழ்நீரில் இருந்து சுரக்கும் இருடின் என்னும் நொதியானது பாலூட்டிகளின் இரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது[3]. இதன் மூலம் அட்டைகள் பாலூட்டிகளின் குருதியை எளிதாக உறிஞ்சிக் குடிக்கின்றன.

இனப்பெருக்கம் தொகு

அட்டை இருபால் உயிரினம் ஆகும். ஒரே அட்டையில் ஆணுறுப்பு, பெண்ணுறுப்பு இரண்டும் உண்டு. இரண்டு அட்டைகள் சேரும்போது ஒன்றின் விந்தணுக்கள் மற்றொன்றின் தோலின்மேல் இடப்படும். அவை உடம்பினுள்ளே தொளைத்துச் சென்று அண்டவணுக்களை நாடி அவற்றைக் கருவுறச் செய்கின்றன. உடம்பின் முற்பகுதியில் ஒரு பாகத்தின் மேல்தோல் பூண்போலக் கழன்றுவரும். அந்தப் பாகத்துக்குக் கிளைட்டெல்லாம் (Clitellum) என்று பெயர். இது கழன்று உடம்பின் முன்முனை வழியாக வெளிவரும். அப்படி வரும்போது அந்த அட்டையின் கருவுற்ற அண்டவணுக்கள் கிளைட்டெல்லத்துக்குள் சேரும். கிளைட்டெல்லம் வெளியே கழன்று வந்ததும் அதன் இரு முனைகளும் மூடிக்கொண்டு ஒரு கூடு (Cocoon) ஆகிவிடும். அட்டை இந்தக் கூட்டை நீர்மட்டத்துக்கு மேலேயுள்ள சேற்றிலே இடும். கூட்டுக்குள் கரு வளர்ந்து நாளடைவில் சிறு அட்டைகள் வெளிவரும்.

மனித உறவு தொகு

அட்டைகளால் மிகுந்த ஆபத்து விளைவதுண்டு. நீரில் இறங்கும் கால்நடைகளின் மூக்கு தொண்டை முதலிய வீடங்களில் புகுந்து கொள்ளும். குளிக்கும்போதும், நீர்குடிக்கும்போதும் மனிதனுடம்பிலும் அவ்வாறு புகுந்துவிடும். மூச்சுக் குழாய்களிலும், மூக்கின் உள்ளேயிருக்கும் சந்துகளிலும், கன்ன எலும்பின் புழைகளிலும் இருந்துகொண்டு பெருந்துன்பமும் இரத்தப் பெருக்கும் விளைவித்துவரும். முடிவில் சாவும் நேர்வதுண்டு. மழை மிகுதியாகப் பெய்யும் காடுகளில் நிலத்தின்மேல் கணக்கற்ற எண்ணிக்கையில் சில அட்டைகள் உண்டு. அவை அங்குச் சஞ்சரிக்கும் விலங்குகளுக்கும் மனிதருக்கும் மிக்க இடர் செய்யும்.

அட்டைப் பூச்சி மருத்துவம் தொகு

2800 ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்து நாட்டில் அட்டைப் பூச்சியை மருத்துவத்தில் பயன்படுத்தியுள்ளதாக அறியப்படுகிறது.[4] அட்டைப் பூச்சி மருத்துவச் சிகிச்சைக்கு ஹிருடோதெரபி என்பர். இந்தியாவில் குறிப்பாக கேரள மாநிலத்தில் ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சையில் அட்டைப் பூச்சிகளை பயன்படுத்துகின்றனர்.[5][6]

உடலில் உள்ள இரத்தக்கட்டிகளை கரைப்பதற்கும், முகப்பருக்களை நீக்கப் பயன்படுத்தப்படுகிறது. அட்டைபூச்சியின் எச்சில் இரத்தத்தின் அடர்த்தியை குறைக்கிறது. ஆறாத காயங்களை குணப்படுத்துகிறது. முக்கியமாக அறுவை சிகிச்சைக்கு பின் உண்டாகும் ரணங்களை வெகுவிரைவில் ஆற்றுகிறது. தோல் வியாதிகள் ( Psoriasis),, வெளி மூலம், மூட்டு வலி குணப்படுத்தவும் அட்டைபூச்சி பயன்படுத்தப்படுகின்றன[7]

மருந்துக்களாக தொகு

அட்டைப்பூச்சியின் எச்சிலில் புரோடியேஸ் தடுப்பு என்ற என்சைம் மற்றும் ரத்த உறைதலை எதிர்க்கும் மூலக்கூறுகள் உள்ளதால், அட்டைகளைப் புற்று நோய் மருந்துகளாக மருத்துவத்துறையில் பயன்படுகின்றன.

அட்டைப்பூச்சியின் எச்சிலில் இருக்கும் கிலான்டென் என்ற பொருள் பல்வேறு புற்றுநோய்கள் உருவாவதை தடுக்கின்றன என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அட்டைப்பூச்சியில் ஹிருடின் என்ற புரதம், புற்று நோயை எதிர்க்கும் மருந்தாக செயல்படுகிறது.

அட்டையைச் சமீபகாலம் வரையில் சில நோய்களில் இரத்தம் உறிஞ்சுவதற்காக மருத்துவர் உபயோகித்து வந்தனர். இக்காலத்திலும் சில சமயங்களில் அவ்வாறு செய்கின்றனர். இதற்காக அட்டைகளைச் சேகரித்து நீர்த்தொட்டிகளிலிட்டு வைத்திருப்பார்கள். அட்டையிலிருந்து எடுக்கும் ஹிருடின் என்னும் பொருளை ரணசிகிச்சையில் இரத்தம் கட்டிப் போகாதபடி ஊசி போடுவதுண்டு.

காட்சியகம் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. http://www.jstor.org/stable/2388511?origin=crossref&seq=1#page_scan_tab_contents
  2. "Study on Leech" (PDF). Archived from the original (PDF) on 2017-02-21. பார்க்கப்பட்ட நாள் 2016-08-05.
  3. அறிவியல் பாடநூல் ஒன்பதாம் வகுப்பு. தமிழ்நாடு அரசு. 2011. 
  4. Some Docs Latching Onto Leeches
  5. Leech Therapy Draws the First Blood
  6. APPLICATION AND IMPORTANCE OF LEECH THERAPY
  7. http://www.leechestherapy.com/about-leeches/benefits

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்டை&oldid=3540685" இலிருந்து மீள்விக்கப்பட்டது