அமீதா பானு பேகம்

அமீதா பானு பேகம் (1527-1604) இரண்டாவது முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவிகளில் ஒருவரும், பேரரசர் அக்பரின் தாயும் ஆவார். தில்லியில் உள்ள புகழ் பெற்ற உமாயூனின் சமாதி இவரால் கட்டுவிக்கப்பட்டது. 1562 ல் தொடங்கி அடுத்த எட்டு ஆண்டுகள் முயன்று அதனை நிறைவேற்றினார்.

அமீதா பானு பேகத்தினால் கட்டுவிக்கப்பட்ட உமாயூனின் சமாதி. 1562 ல் அவரும் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.
உமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் பிற முகலாய அரச குடும்பத்தினரின் கல்லறைகளுடன் காணப்படும் அமீதா பானு பேகத்தின் கல்லறை.

வரலாறு தொகு

அமீதா பானு பேகம் 1527 ஆம் ஆண்டு, பாரசீகத்தைச் சேர்ந்த சியா முசுலிமான சேக் அலி அக்பர் ஜாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். அலி அக்பர் ஜாமி, முதலாவது முகலாயப் பேரரசரான பாபரின் கடைசி மகனான மிர்சா இன்டலின் நண்பரும் குருவும் ஆவார். அமீதா பானுவின் தாயார் மா அஃப்ராசு பேகம். இவர் அலி அக்பர் ஜாமியை சிந்தில் உள்ள பாத் என்னும் இடத்தில் மணந்து கொண்டார்.

உமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். அப்போது அவருக்கு 13 வயது. சேர் சா சூரியின் படையெடுப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய உமாயூன் நாடுகடந்து வாழ்ந்து வந்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். நல்ல சோதிட அறிவு பெற்றிருந்த உமாயூனே குறித்த 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார்.

இரண்டு ஆண்டுகள் கழித்துப் பாலைவனங்களூடாக மேற்கொண்ட கடுமையான பயணத்தின் பின்னர் 1542 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதி உமாயூனும், அமீதா பேகமும் உமர்கோட்டில் இருந்த ராசபுத்திரர் கோட்டைக்கு வந்தனர். அதன் ஆட்சியாளராகிய ராணா பிரசாத் சிங் அவர்களை வரவேற்றார். இங்கே இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் எதிர்காலப் பேரரசரைப் பெற்றெடுத்தார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீதா_பானு_பேகம்&oldid=2240364" இலிருந்து மீள்விக்கப்பட்டது