அழற்சி (Inflammation, இலத்தீன், inflammare) என்பது காயங்கள், தீப்புண்கள், அடிபட்ட இடங்களில் திசுக்களின் சேதம் மற்றும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும். நோய்க்காரணிகள் தொற்றுவதால் அல்லது திசுக்கள் சேதமடைந்தால் அவ்விடத்தில் உள்ள உயிரணுக்களிலிருந்து புரதங்கள் மற்றும் எதிர்ப்பாற்றலூக்கிகள் வெளிப்படும். இது தன்னிச்சையாக தொடங்கி அவசரக்காலத்தில் வேலை செய்வது போல் உடம்பில் நோயெதிர்ப்புக் காரணிகளான இரத்த வெள்ளையணுக்கள், அவ்விடத்தில் சீக்கிரமாக குவிய ஆயத்தமாக்கும். அவ்வாறு குவியும்போது இரத்தத்தில் வழக்கமாக உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை விட, தேவையைப் பொறுத்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இவ்வாறு ஊக்குவிக்கும் போது அவ்விடத்தில் இரத்த நுண்குழாய் மூலம் குவியும் உயிரணுக்களான வெள்ளையணுக்கள், (இரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் மிகவும் பெரியவை) திசுக்களின் அடர்த்தி, இரத்தக்குழல்களின் விரிப்பு ஆகியவற்றையும் சேர்த்து இயங்கச்செய்யும். அதுவே நமக்கு வீக்கமாக காட்சியளிக்கும். இதில் தசை சிவப்படைதல், எரிச்சல், வலி மற்றும் சூடு அதிகரித்தல் ஆகியன இணைந்து நிகழும். இவ்வாறு ஏற்படும் நோயெதிர்ப்பு செயலே அழற்சி என அழைக்கப்படுகிறது.

அழற்சியின் பண்புகளான வீக்கம் மற்றும் சிவத்தலைக் காட்டும் விதமாக தோலில் ஏற்பட்ட ஓர் சீழ்பிடித்த கட்டி. நடுவில் சீழ் பிடித்துள்ள பகுதியைச் சுற்றி கரும்வளையங்களாக இறந்த திசுக்கள்

இவ்வாறு குவியும் வெள்ளையணுக்களை நாம் காயமாறியவுடன் வெளிப்படும் வெள்ளைநிற சீழ்களின் வடிவில் காணமுடியும். இது ஆங்கிலத்தில் லீசன்சு என அறியப்படுகிறது. இவ்வாறு வெளிப்படும் சீழ்களில் நிணநீரும் மிகுந்திருக்கும்.

நோய்க்காரணிகள் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய காரணிகள், அடிப்பட்ட அல்லது பாதிப்புக்குள்ளான உயிரணுக்கள், தீங்கு விளைவிக்கும் தூண்டுகைகள் மற்றும் எரிச்சல் தரக்கூடியப் பொருள்களுக்கு தமனி (அல்லது நாடி), சிரை (அல்லது நாளம்) ஆகிய இரத்தக்குழாய்களில் நிகழும் ஒரு சிக்கலான உயிரியல் எதிர்வினையாகும்.[1] இந்த எதிர்வினை தனக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய தூண்டுகையை நீக்கவும் பாதிக்கப்பட்ட திசுக்கள் குணமடைதலை துவக்கவும் உயிரினங்கள் மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கை ஆகும். அழற்சியும் நோய்த்தொற்றும் (infection) ஒன்றல்ல. பல நேரங்களில் நோய்த்தொற்றினால் அழற்சி ஏற்படலாம். நோய்தொற்று ஒரு புறவழிப் பெருக்க நுண்ணுயிரினால் ஏற்படுவது; அழற்சி அந்த நோய்க்காரணிக்கு எதிராக உடலானது மேற்கொள்ளும் எதிர்வினை.

அழற்சி என்ற எதிர்வினை இல்லாதிருக்குமேயானால் ஓர் உயிரியின் புண்களும் தொற்றுநோய்களும் குணமடையாது திசுக்கள் உயிர்வாழ்வதையே பாதிக்கும். ஆனால், நீண்டநாள் அழற்சி பல நோய்களுக்கு வித்தாக அமைகிறது. தும்மல், சுரம், தமனித் தடிப்பு, முடக்கு வாதம் போன்றன நீடித்த அழற்சியால் உண்டாவன. ஆகவே உடல் தன்னிடத்தே காண்கின்ற அழற்சியை விரைவில் சரிப்படுத்த விழைகிறது.

அழற்சியை கடுமையான, நாட்பட்ட என இருவகையாகப் பிரிக்கலாம். கடுமையான அழற்சி தீங்குதரும் தூண்டுகைக்கு உடல் ஆற்றும் துவக்க எதிர்வினையாகும். பாதிக்கப்பட்டத் திசுக்களுக்கு குருதி நீர்மம் (blood plasma) மற்றும் இரத்த வெள்ளையணுக்களை கூடுதலாக அனுப்புகிறது. படிப்படியான உயிரியல் நிகழ்வுகள் அழற்சிக்கெதிரான வினைகளைப் புரிந்து குணமடையச் செய்கிறது. இதில் குறிப்பிட்ட இடம் சார்ந்த சுற்றோட்டத் தொகுதி, நோய் எதிர்ப்பாற்றல் முறைமை மற்றும் காயமடைந்த திசுவின் பல உயிரணுக்கள் இணைந்து செயல்படுகின்றன.

நெடுங்கால அழற்சி அல்லது நீடித்த அழற்சி அல்லது நாட்பட்ட அழற்சியில் காயமடைந்த திசுக்களின் அருகாமையில் உள்ள உயிரணுக்களின் வகை வளர்முகமாக மாறுகிறது. திசுக்கள் அழிதலும் குணமாதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.

தூண்டுகைகள் தொகு

முக்கிய அறிகுறிகள் தொகு

கடுமையான அழற்சியின் காரணமாக அழற்சி ஏற்படும் இடத்தில் தோன்றும் முக்கியமான ஐந்து அறிகுறிகளாவன:

  • சிவந்திருத்தல்
  • வீக்கமடைந்திருத்தல்
  • சூடாக இருத்தல்
  • வலி இருத்தல்
  • தொழிற்பாட்டை இழந்திருத்தல்[2]

ஆரம்பத்தில் முதல் நான்கு அறிகுறிகளுமே செல்சசு (Celsus) என்பவரால் குறிப்பிடப்பட்டிருந்தன[3]. அழற்சி ஏற்படும் இடத்திற்கு அதிகளவு குருதி செல்வதால் அவ்விடம் சிவந்து காணப்படுவதுடன், சூடாகவும் இருக்கும். அதிகளவில் திரவம் அவ்விடத்தில் சேர்வதனால் வீக்கம் ஏற்படுகின்றது. அவ்விடத்தில் வெளியேற்றப்படும் சில வேதிப் பொருட்கள் நரம்புகளில் ஏற்படுத்தும் தூண்டுதலால் வலி ஏற்படும். பின்னரே ஐந்தாவது அறிகுறி சேர்த்துக் கொள்ளப்பட்டது.
பொதுவாக உடலின் மேற்பரப்பில் ஏற்படும் அழற்சியே இந்த ஐந்து அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்சிகள் எல்லா அறிகுறிகளையும் கொண்டிருப்பதில்லை.

அழற்சியை விளைவிக்கின்ற சீர்கேடுகள் தொகு

அழற்சியை விளைவிக்கின்ற அசாதாரணமான பெரும் சீர்கேடுகள் பலதரப்பட்ட மனித நோய்களின் அடிதளமாக உள்ளன. இத்தகு அழற்சி சீர்கேடுகளில் (உதாரணமாக ஒவ்வாமை, சில தசையழிவு நோய்கள்) நோயெதிர்ப்பு அமைப்பானது சாதாரணமாக ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான நோயெதிர்ப்பு அமைப்புச் சீர்கேடுகளில் அசாதாரணமான அழற்சி விளைகின்றது. அழற்சி நிகழ்முறைகள் புற்றுநோய், தமனித் தடிப்பு, ஆக்சிசன் குறைபாடுடைய இதயநோய் ஆகிய நோயெதிர்ப்புச்சாரா நோய்களிலும் ஆரம்பக் காரணிகளாகக் காணப்படுகின்றன[4].

பல்வேறு புரதங்கள் அழற்சி வினைகளில் ஈடுபட்டுள்ளன. எனவே, இவற்றில் எந்தவொரு புரதத்திலும் திடீர் மரபியல் மாற்றம் நிகழ்ந்து அப்புரதத்தின் சாதரணமானப் பணிகளிலோ அல்லது அப்புரத வெளிபாட்டிலோ பிறழ்வுகளையும், பழுதுகளையும் ஏற்படுத்த முடியும்.

அழற்சியுடன் தொடர்புடைய உடல்நலச் சீர்கேடுகளுக்கான சில உதாரணங்கள் கீழ்வருமாறு:

எடுத்துக்காட்டுகள் தொகு

பெரும்பாலான அழற்சிகள் மருத்துவ உலகில் இலத்தீன் மொழியொட்டாக டிசு (-tis) என்று முடிகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. Ferrero-Miliani L, Nielsen OH, Andersen PS, Girardin SE (February 2007). "Chronic inflammation: importance of NOD2 and NALP3 in interleukin-1beta generation". Clin. Exp. Immunol. 147 (2): 227–35. doi:10.1111/j.1365-2249.2006.03261.x. பப்மெட்:17223962. 
  2. A Massage Therapist Guide to Pathology Ruth Werner (2009). A massage Therapist Guide to Pathology (4th ). Philadelphia, PA and Baltimore, MD: Wolters Kluwer. 
  3. Wolfgang H. Vogel, Andreas Berke (2009). "Brief History of Vision and Ocular Medicine". Kugler Publications. p.97. ISBN 90-6299-220-X
  4. Cotran; Kumar, Collins (1998). Robbins Pathologic Basis of Disease. Philadelphia: W.B Saunders Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-7335-X. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அழற்சி&oldid=3730317" இலிருந்து மீள்விக்கப்பட்டது