அ. வேங்கடாசலனார்

அ. வேங்கடாசலனார் (1888 - 1955) என்பவர் ஒரு தமிழறிஞர் ஆவார். இவரைக் கரந்தைக் கவியரசு வேங்கடாசலனார் என அறிஞர் அழைப்பர்.

பிறப்பும் கல்வியும் தொகு

இவர் பழைய தஞ்சை மாவட்டம் கந்தர்வக் கோட்டைக்கு அருகில் மோகனூர் என்னும் கிராமத்தில் அரங்கசாமிப் பிள்ளைக்கு 1888 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கரந்தையிலிருந்த தூயபேதுரு பள்ளியில் கல்வி பயின்றார். தமிழ் ஆர்வத்தால் கரந்தையில் வாழ்ந்த புலவர் வேங்கடராம பிள்ளையிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களை முறையாகப் பயின்றார். இந்நிலையில் இவரது தந்தை எதிர்பாராது திடீரென்று காலமானதால், குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டி, ஊரின் கணக்கப்பிள்ளை என்னும் மணியக்காரர் என்னும் பணியிலமர்ந்தார். இருப்பினும் தமிழ்க் கல்வி மீதான காதலால் கரந்தைக்குச் சென்று, தூயபேதுரு கல்லூரியில் தமிழ்ப் புலவராயிருந்த சுப்பிரமணிய ஜயரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முறையாகக் கற்றார். பின்னர், ‘இலக்கணப்புலி’ எனப் போற்றப்பட்ட, கந்தர்வக்கோட்டை காவல் நிலையப் பொறுப்பாளராக இருந்த ம. நா. சோமசுந்தரம் பிள்ளையிடம் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களை முறையாகப் பயின்றார்.

ஆசிரியர் பணி தொகு

தமிழ் மீது கொண்டிருந்த ஆர்வத்தால், கொஞ்ச காலத்திற்கு பிறகு தமது மணியக்காரர் பணியை உதறி விட்டு, செட்டிநாட்டின் கோனாபட்டு என்னும் ஊரிலிருந்த கற்பக விநாயக கலாசாலையில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்தார். அங்கு செட்டிநாட்டின் பெரும் புலவர் பண்டிதமணி கதிரேசன் செட்டியார், உ. வே. சா, அரசஞ்சண்முகனார், மு. இராகவையங்கார் முதலிய சிறந்த தமிழறிஞர்களின் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. கரந்தைத் தமிழ்ச் சங்கம் துவக்கிய கரந்தை தமிழ்க் கல்லூரியில் சிறிது காலம் தமிழாசிரியராகப் பணியாற்றினார். [1] பின்னர் 1922 ஆம் ஆண்டு முதல் பீட்டர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்து பணியாற்றினார்.

பதிப்புப் பணிகளும், புத்தாக்கப் பணிகளும் தொகு

தெய்வசிலையார் உரைகொண்ட தொல்காப்பிய ஏட்டுச்சுவடியை தமிழ்த்தாத்தா உ. வே. சா. விடம் பெற்று, பதிப்பித்து கரந்தைத் தமிழ்ச்சங்க வெளியீடாகக் கொண்டு வந்தார். ஆசானாற்றுப் படை, சிலப்பதிகார நாடகம், மணிமேகலை நாடகம், அகநானூறு உரை முதலிய நூல்களைப் படைத்துள்ளார்.

குறிப்பிடத்தக்க செய்திகள் தொகு

  • டாக்டர் மா. இராசமாணிக்கம், முத்தானந்த அடிகள் முதலிய புகழ்மிகு தமிழ் அறிஞர்களை உருவாக்கியவர்.
  • கரந்தைத் தமிழ்ச் சங்கம், இவரின் தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, கரந்தைக் கவியரசு என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தது.
  • தமிழ்த் தென்றல்’ திரு. வி. க. கவியரசு வேங்கடாசலனார் பற்றி தம் வரலாற்றில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ்ப் பெரும்புலவர் கரந்தை வேங்கடாசலத்தை 1935 ஆம் ஆண்டு திருவையாற்று அரசர் கல்லூரியில் கண்டேன். பின்னர் சென்னை சிந்தாரிப்பேட்டையில் அகநானூற்று மாநாட்டுத் தலைவராகப் பார்த்தேன். அம்மாநாட்டில் அவர் ஆற்றிய உரையை முதன் முதலாக முழுவதுமாகக் கேட்டேன். அவரது தலைமையுரை என்னை மயக்கியது. பெரும்புலமை வாய்ந்த ஒருவர் எங்கோ மூலையில் கிடக்கின்றாரே என்று எண்ணினேன். வேங்கடாசலத்தின் புலமை, சங்க இலக்கியங்களுக்கு விரிவுரை காண்பதற்குப் பயன்பட்டால், பிற்காலத் தமிழுலகம் பெரிதும் ஆக்கமுறும்”[2]

மேற்கோள்கள் தொகு

  1. "கரந்தை தமிழ் கல்லூரி". பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. பி. தயாளன் (3 சூன் 2016). "கரந்தைக் கவியரசு' வேங்கடாசலனார்!". கீற்று. பார்க்கப்பட்ட நாள் 3 சூன் 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._வேங்கடாசலனார்&oldid=3576354" இலிருந்து மீள்விக்கப்பட்டது