ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தமிழ் நாட்டின் மிகப் பழைய நாகரிகத்தைச் சேர்ந்த தொல்லியல் களங்களில் ஒன்று. தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள ஆதிச்சநல்லூர் எனுமிடத்தில் உள்ளது. இத்தொல்லியல் களம் திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையிலிருந்து ஏறத்தாழ 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இக்களம் கிமு 1600 க்கு முற்பட்ட நாகரிகத்தோடு தொடர்புடையது. தொல்லியல் துறையால் அகழ்வாய்வு செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஊர்களில் முதன்மையானதாக உள்ளது. இங்கு புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் வழியாக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தொல்லியல் களத்தை முதலில் 1903-04களில் பெருமளவில் அகழாய்வு செய்தவர் அலெக்சாண்டர் ரியோ ஆவார். பின்னர் 2004–2005 ஆண்டுகளில் தி. சத்தியமூர்த்தி என்பவர் அகழாய்வு மேற்கொண்டார்.

ஆதிச்சநல்லூர்
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் is located in தமிழ் நாடு
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்
Shown within India Tamil Nadu#India
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் is located in இந்தியா
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்
ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் (இந்தியா)
மாற்றுப் பெயர்ஆதிச்சநல்லூர்
இருப்பிடம்தூத்துக்குடி, இந்தியா
ஆயத்தொலைகள்8°44′N 77°42′E / 8.73°N 77.7°E / 8.73; 77.7
வகைSettlement
வரலாறு
கட்டப்பட்டது905 BC–696 BC
கலாச்சாரம்Ancient Tamils
பகுதிக் குறிப்புகள்
அகழாய்வு தேதிகள்1876–present
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் பொ.மு. 20 ஆம் நூற்றாண்டு மதிக்கத்தக்க இரும்பு கலன்கள்

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த இரண்டு பொருள்களை, அமெரிக்காவில் உள்ள தொல்லியல் ஆய்வகத்திற்கு அனுப்பி அங்கு கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு செய்யப்பட்டது. அதில் ஒரு பொருளின் வயது கி.மு. 905, மற்றொன்றின் வயது கி.மு. 791 என தெரியவந்துள்ளது.[1]

ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வு வரலாறு தொகு

ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருநெல்வேலி நகரத்திலிருந்து 24 கிமீ தொலைவில் தென்கிழக்காக, தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள "ஆதி தச்சநல்லூர்" எனும் ஆதிச்சநல்லூர்,உலக அளவில் பலமுறை அகழாய்வுகள் செய்யப்பட நகரங்களில் ஒன்று.

1876 ஆம் ஆண்டில் ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழ்வாய்வு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. ஆதிச்சநல்லூரில் முதன்முதலில் ஜெர்மன் நாட்டைச்செர்ந்த ஜாகோர் 1876ல் அகழாய்வுகள் நடத்தினார்.[2] பின்னர் 1896 இலும்[2] 1904 ஆம் ஆண்டிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அக்காலத்தில் ஆய்வுகளை நடத்திய பிரித்தானியத் தொல்லியலாளரான அலெக்சாண்டர் ரெயா (Alexander Rea) என்பவர், தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவற்றுள் மிகவும் பரந்த தொல்லியல் களம் இதுவெனக் குறிப்பிட்டுள்ளார்.[3] அப்போது ஆயிரக்கணக்கான தொல் பொருட்களை இவர் கண்டெடுத்து பதிவு செய்துள்ளார். இவற்றுள், மட்பாண்டங்கள், இரும்புக் கருவிகள், ஆயுதங்கள், நகையணிகள் என்பனவும், பொன், வெண்கலம், அரிய கல் முதலியவற்றாலான மணிகளும் (beads), எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பண்டைத்தமிழர் நாகரிகத்தின் தொல்பழங்காலத் தொட்டில் ஆதிச்சநல்லூரில் இருந்தது எனத் தொல்லியலாளர்கள் கருதுகிறார்கள்.[4][5] 2004 ஆம் ஆண்டில் இங்கே நடத்தப்பட்ட ஆய்வுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.3,800 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.[6][7]

அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்கள் தொகு

தாழிகள் தொகு

ஏறத்தாழ 114 ஏக்கர் பரப்பளவில் நடத்தப்படும் ஆய்வில் ஏராளமான ஈமத்தாழிகள் காணப்பட்டுள்ளன. இக்களத்திலுள்ள புதைகுழித் தொகுதி மூன்று அடுக்குகளாகக் காணப்படுகின்றது. பாறைகள் நிறைந்த மலைச் சரிவுகளில் குழி தோண்டப்பட்டுச் சுட்ட களிமண்ணினால் ஆன தாழிகள் புதைக்கப்பட்டுள்ளன. ஒன்றினால் ஒன்று மூடப்பட்ட இரண்டு தாழிகளைக் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. பண்டைத் தமிழ் எழுத்துக்களுடன்கூடிய பல தாழிகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.[8]

மற்ற பொருட்கள் தொகு

இங்கு கருப்பும் சிவப்பும் கலந்த பானையோடுகள், சிவப்பு, கருப்பு ஆகிய வகைப் பானைகள் கிடைத்துள்ளன. ஒருபானையில் மீது ஒரு பெண்ணுருவம், நெற்கதிர்கள், ஒரு மான் மற்றும் ஒரு பல்லி ஆகியவற்றின் உருவங்கள் ஒட்டுருவமாகக் காணப்படுகின்றன. தங்கத்திலான நெற்றிப்பட்டம், கத்தி மற்றும் வாள் போன்ற இரும்புப் பொருட்கள் மற்றும் வெண்கலப் பொருட்கள் கிடைத்துள்ளன.

தமிழ் எழுத்துக்கள் சர்ச்சை தொகு

மேலுள்ள படத்தில் தாழியில் உள்ள கீறல்கள் எழுத்துக்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அதை "கறிஅரவனாதன்" என்று படித்து நச்சுடைய பாம்பை அணிந்த மாலையாக கொண்ட சிவன் என்று பொருள் தருகிறார் நடன காசிநாதன்.[9]

ஆனால் அந்த தாழிகளை அகழாய்வு செய்த சத்திய மூர்த்தி அதை "கதிஅரவனாதன்" என்று படித்து அதற்கு கதிரவன் மகன் ஆதன் என்று பொருள் தருகிறார். ஆனால் அந்த தாழியில் இருப்பது வெறும் சாம்பல் கீறல்களே என்றும் அவை எழுத்துக்கள் அல்ல என்றும் சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.[10]

மனித எலும்புக்கூடுகள் தொகு

ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டையோடுகளில் ஆய்வாளர்கள் சேட்டர்ஜியும் குப்தாவும் பதிமூன்று எழும்புக்கூடுகளை ஆய்வுக்கு எடுத்து கொண்டு உள்ளனர். அந்த எலும்பு கூடுகளில் எட்டு ஆண்களின் மண்டை ஓடுகளும் ஐந்து பெண்களின் மண்டை ஓடுகளும் அடங்கும். அவற்றில் பெரும்பாலனவை உடைந்தும் சிதைந்தும் உள்ளன.[11] ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மனிதர்களே தென்னிந்தியாவின் பூர்வக்குடிகள் என்றும் அவர்கள் மத்திய தரை கடல் மக்கள் தென் இந்தியா வரும் முன்னர் இருந்தே தென் இந்தியாவில் வாழ்ந்து வருவதாகவும் கூறுகிறார் ஆய்வாளர் செரோம் சேக்கப்புசன். மேலும் செரோம் ஆதிச்சநல்லூர் எலும்பு கூடுகள் முந்து ஆசுத்திரோலாய்டு எலும்பு கூடுகள் என்றும் அவை மொனாக்கோ பகுதியில் கிடைத்த மேலை பழங்கற்கால ஆரிகனேசியன் பண்பாட்டு பெண்ணின் மண்டை ஓட்டுடன் ஒத்து வருவதாகவும் கூறியுள்ளார்.[12]

மண்டை ஓடுகள் தொகு

ஆதிச்சநல்லூரில் கிடைத்த எழும்புக்கூடுகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்த சூக்கர்மேனும் சுமித்தும் அவற்றுள் ஒரு மண்டை ஓடு முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாகவும் மற்றும் ஒரு மண்டை ஓடு மத்திய தரை கடல் மண்டை ஓடு என்றும் கணிக்கின்றனர்.[13] ஆதிச்சநல்லூரில் கிடைத்த மண்டை ஓடுகளை ஆராய்ந்த ஆய்வாளர்கள் சீவலும் குகாவும் அவை சிந்துசமவெளியின் மொகஞ்சதாரோவில் கிடைத்த முந்து ஆசுத்திரோலாய்டு மண்டை ஓட்டை ஒத்ததாக கூறி உள்ளனர்.[11]

ஆதிச்சநல்லூர் மக்களின் பண்பாடு தொகு

ஆதிச்சநல்லூரில் கிடைத்த தொல்லியல் பொருட்களை கொண்டு அங்குள்ள மக்களின் பண்பாட்டை கமில் சுவிலபில் கீழ்வருமாறு வகைப்படுத்துகிறார்.[14]

  1. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்கள் போர் வீரர்களாக இருந்தனர்.
  2. குதிரைகளை பயன்படுத்த கற்றிருந்தனர்.
  3. இரும்பை உருக்கவும் வார்க்கவும் அதை வைத்து போர் கருவிகள் செய்யவும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.இப்பகுதியில் இன்றும் இரும்பு கருவிகள் விவசாய தளவாடங்கள் கால்வாய் கிராமத்தில் இன்றளவும் நடைபெறுவது குறிப்பிடதக்கது.
  4. முருகனை தெய்வமாக வழிபட்டனர். ஆதிச்சநல்லூரில் கிடைத்த சிறிய வேல் முருகு வழிபாட்டின் எச்சம்.
  5. கொற்றவையை போரில் வெற்றி பெறவும் வெற்றியின் கடவுளாகவும் வழிபட்டனர்.
  6. ஆதிச்சநல்லூர் மக்களின் இயலும் இசையும் போரின் வீரச்செயல்களை போற்றிப்பாடும் வண்ணம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். போர்ப்பறையை சடங்குகளில் இசையாக வாசித்திருக்க வேண்டும்.
  7. ஆதிச்சநல்லூர் நாகரிகம் ஒரு நெல் நாகரிகம்.

கோட்டைச்சுவர் தொகு

ஆதிச்சநல்லூரில் கோட்டைச்சுவர் ஒன்று இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தை சேர்ந்த ஆய்வாளர் சத்தியமூர்த்தியின் மேற்பார்வையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கோட்டைச்சுவர் மக்கள் வாழ்ந்த இடமாகும்.[15] தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட தொல்லியல் களங்களான அமிர்தமங்கலம் போன்ற இடங்கள் இடுகாடுகளை மட்டுமே கொண்டன. ஆனால் ஆதிச்சநல்லூரிலேயே முதன்முதலாக இடுகாட்டையும் சேர்த்து மக்கள் வாழிடமும் கண்டறிப்பட்டது. இந்த மக்கள் வாழிடம் ஆதிச்சநல்லூரின் இடுகாட்டில் இருந்து 100 மீட்டர் தள்ளி வடக்கிலும் வடமேற்கிலும் உள்ள சரிவுகளில் உள்ளது.

ஆய்வாளர் சத்தியமூர்த்தி மக்கள் வாழ்ந்த இந்த கோட்டை குடியிருப்பின் கோட்டைச்சுவர் சீரான வடிவத்தில் இருப்பதையும் அக்கோட்டை குடியிருப்பில் குயவர்களின் சிறு குடியிருப்பையும் கண்டறிந்துள்ளார். மூன்று பானைச்சூளைகளும் பானைகளை சுட்ட சாம்பலும் கரியும் உடைந்த பானையோடுகளும் அக்குடியிருப்பில் உள்ளன. இரும்பு கத்தியும் பாசி மணிகளின் உருவாரங்களும் கார்னேலியன் மணிகளும் கோவக்சு மணிகளும் பெருங்கற்காலக் குறியீடுகளை கொண்ட பானையோடுகளும் எலும்பால் செய்யப்பட்ட கருவிகளும் இக்கோட்டைச்சுவர் இருந்த பகுதிக்குள் கிடைத்துள்ளன. சத்தியமூர்த்தியின் கருத்துப்படி ஆதிச்சநல்லூரின் இடுகாட்டின் காலமான கி.மு. 1000 ஒட்டியே இக்கோட்டை மக்களின் காலமும் இருந்திருக்க வேண்டும் என்கிறார்.[16]

ஆதிச்சநல்லூர் தொல்பொருட்கள் இருக்கும் அருங்காட்சியகம் தொகு

ஆதிச்சநல்லூரில் கிடைத்த பழம்பொருட்கள் பெரும்பாலானவை இந்திய தொல்லியல்துறை கூட்டமைப்பின் அருங்காட்சியகங்களிலும் சென்னை அருங்காட்சியகத்திலும் உள்ளன. அவற்றை அனைத்தையும் ஆதிச்சநல்லூர் அருகிலேயே புதிதாக அருங்காட்சியகம் அமைத்து அதில் வைக்க திட்டங்கள் போடப்பட்டுள்ளன.

தொடரும் அகழாய்வுப் பணிகள் தொகு

ஆதிச்சநல்லூரில் கடந்த 1876, 1902, 1905, 2004, 2005-ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டினர் மற்றும் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் சார்பாக 5 கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழாய்வு நடத்தக் கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு என்பவர் சென்னை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் 2017 ஆம் ஆண்டில் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையை வெளியிடவும், அறிக்கையின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைத்து பழங்காலப் பொருள்களைக் காட்சிப்படுத்தவும் உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார். [17] அதனைத் தொடர்ந்து அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன. மேலும், ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை பகுதிகளில் மாநில தொல்லியல் துறை சார்பில் 2020 ஆம் ஆண்டு அகழாய்வு பணி நடைபெற்றது.[18] அதன் பின்னர், ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2020 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்தது.[19] ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் கடந்த 2021ம் ஆண்டு அகழாய்வு பணிகள் தொடங்கியது. இந்த அகழாய்வுப் பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகள், இரும்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், தங்க நெற்றிப்பட்டயம் உள்பட பல்வேறு பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் பிறகு, ஆதிச்சநல்லூரில் இருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையின் ஓரத்தில் ஐந்தரை ஏக்கரில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர்.[20]

ஆதிச்சநல்லூர் தல அருங்காட்சியகம் தொகு

 
ஆதிச்சநல்லூர் தல அருங்காட்சியகம்
 
ஆதிச்சநல்லூர் தல அருங்காட்சியகத்தைப் பார்வையிடுபவர்கள்

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியாவிலேயே முதல் தல அருங்காட்சியகத்தையும் அவர் தொடங்கி வைத்தார். தற்போது, இந்தத் தல அருங்காட்சியகத்தைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் பார்வையிட்டு வருகின்றனர். [21]

ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை தொகு

ஆதிச்சநல்லூரில் 2004-இல் தொல்லியல் அகழாய்வு முடித்த 17 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் டாக்டர் சத்யபாமா பத்ரிநாத் வெளியிட்டுள்ளார்.[22][23][24]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. ஆதிச்சநல்லூர் நாகரிகம் 3,000 ஆண்டுகளுக்கு முந்தையது
  2. 2.0 2.1 முனைவர் வீ.செல்வகுமார் உதவிப் பேராசிரியர். "ஆதிச்சநல்லூர்". தமிழ்நாடு அரசு கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை. tamilvu.org. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. https://www.bbc.com/tamil/india-47828956
  4. Boulanger, Chantal (1993). In the Kingdom of Nataraja, a guide to the temples, beliefs and people of Tamil Nadu. சென்னை: தென்னிந்திய சைவ சித்தாந்தப் பதிப்புக் கழகம் (நெல்லை). பக். 2, 11. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-9661496-2-9. http://tamilnation.org/culture/Nataraja.pdf. 
  5. "Exclusive TV channel for Tamil culture sought". த இந்து (சென்னை). 2006-06-23 இம் மூலத்தில் இருந்து 2012-01-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120105063951/http://www.hindu.com/2006/06/23/stories/2006062304320600.htm. பார்த்த நாள்: சூலை 01, 2013. 
  6. "ஆதிச்சநல்லூர்" (html=ஜனவரி). 2006. பார்க்கப்பட்ட நாள் 2007-12-07.
  7. Skeletons dating back 3,800 years throw light on evolution
  8. `Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur
  9. குற்றால மலையில் புரியாத எழுத்துக் கல்வெட்டு (டிசம்பர் 2006). தமிழகம் அரப்பன் நாகரிக தாயகம். சென்னை: மெய்யப்பன் பதிப்பகம். பக். பப - 20 – 21. 
  10. http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4902:2010-03-19-12-18-09&catid=996:10&Itemid=253
  11. 11.0 11.1 Aloke Kumar Kalla (1994). The ethnology of India: antecedents and ethnic affinities of peoples of India. Munshiram Manoharlal Publishers. https://books.google.co.in/books?id=4cmAAAAAMAAJ&q=adichanallur+skulls+and+guha&dq=adichanallur+skulls+and+guha&hl=en&sa=X&ved=0ahUKEwi90b6ytYXaAhUS5o8KHfD8CdIQ6AEINzAE. 
  12. Jerome Jacaobson (1986). Studies in the Archaeology of India and Pakistan. American Institute of Indian Studies. பக். 290. https://books.google.co.in/books?id=GUoKAQAAIAAJ&q=adichanallur+skulls+zerome&dq=adichanallur+skulls+zerome&hl=en&sa=X&ved=0ahUKEwiTpbnltoXaAhUCN48KHWOwAXMQ6AEIJjAA. 
  13. Raj Kumar (2010). Early History of Jammu Region: Pre-historic to 6th Century A.D. Volume 1. Gyan Publishing House. பக். 100. https://books.google.co.in/books?id=swB-Ob_0Z1wC&pg=PA100&dq=adichanallur+skeletons&hl=en&sa=X&ved=0ahUKEwif89jos4XaAhXMNI8KHX07BVsQuwUIOTAD#v=onepage&q=adichanallur%20skeletons&f=false. 
  14. நசீர் அலி (2013). Classical Tamil Love Poetry: Ainkurunuru or Five Hundred Short Poems. Partridge Publishing. பக். xix. https://books.google.co.in/books?id=qzaVAgAAQBAJ&pg=PR19&dq=adichanallur&hl=en&sa=X&ved=0ahUKEwjZssW7sIXaAhUUbo8KHRd-A3E4ChDoAQglMAA#v=onepage&q=adichanallur&f=false. 
  15. Michael Wood (2015). The Story of India. Random House. https://books.google.co.in/books?id=cKubCAAAQBAJ&pg=PT66&dq=adichanallur+fortification+wall&hl=en&sa=X&ved=0ahUKEwiJh9j39q7aAhUS5o8KHcyVBp4Q6AEIJjAA#v=onepage&q=adichanallur%20fortification%20wall&f=false. 
  16. T.S. Subramanian (Apr 03, 2005). "Iron Age habitational site found at Adichanallur". thehindu.com. http://www.thehindu.com/2005/04/03/stories/2005040301931400.htm. பார்த்த நாள்: 10 ஏப்ரல் 2018. 
  17. ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை - மத்திய அரசுக்கு 4 வார காலஅவகாசம் (விகடன்.காம்
  18. ஆதிச்சநல்லூர், சிவகளையில் அகழாய்வுகள் துவங்கின
  19. ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியீடு: தொல்லியல் ஆர்வலர்கள், தமிழறிஞர்கள் மகழ்ச்சி (தி இந்து தமிழ்திசை)
  20. ஆதிச்சநல்லூர் அருங்காட்சியகம்: மத்திய அமைச்சர் அடிக்கல் நாட்டினார்...! (சமயம் - செய்தி)
  21. ஆதிச்சநல்லூர் ஆன் சைட் மியூசியத்தை ஆர்வமுடன் பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்!
  22. ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்
  23. ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியீடு
  24. "ஆதிச்சநல்லூரில் நெற்றிக்கண் மனிதன் இருந்தானா?" – 17 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான அகழாய்வு முடிவு

வெளி இணைப்புகள் தொகு