ஆளுமை என்பது என்ன என்பது பற்றி உறுதியான எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரையறை இல்லை. உளவியல் நோக்கில் ஆளுமை என்பது ஒருவரின் ஒழுங்கமைந்த, இயங்கியல் பண்புகளும், அவை தோற்றுவிக்கும் தோரண நடத்தைகள், உணர்வுகள், சிந்தனைகளையும் குறிக்கிறது.[1] பொது வழக்கில் ஆளுமை என்பது ஒருவரின் வெளித் தோற்றத்தைப் பெரிதும் குறிக்கிறது. ஆளுமை என்பதைச் சுருக்கமாக "ஒருவரைத் தனித்துவமானவராக ஆக்கும் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் என்பவற்றாலான ஒன்று" என வரையறுக்கலாம். அத்துடன் ஆளுமை ஒருவரின் உள்ளிருந்து உருவாகி அவருடைய வாழ்க்கைக் காலம் முழுதும் சீராக அமைகின்றது.

சொல்லும் கருத்தாக்கமும் தொகு

ஆளுமை என்னும் தமிழ்ச் சொல் "பர்சனாலிட்டி" (Personality) என்னும் ஆங்கிலச் சொல் குறிக்கும் கருத்துருவைக் குறிக்க ஏற்பட்டது. இலத்தீன் மொழியில் "பர்சனா" (persona) என்பது 'மறைப்பு', 'முகமூடி' என்னும் பொருள் தருவது. எனவே ஆளுமை என்பது "ஒருவர் அணிந்திருக்கும் முகமூடி" என்னும் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டுள்ளது.

ஆளுமையின் கூறுகள் தொகு

ஆளுமையின் அடிப்படையாக அமையும் சில இயல்புகள் இனங் காணப்பட்டுள்ளன. அவையாவன:[2]

  • சீராக இருத்தல் - தனியாட்களின் நடத்தையில் ஒழுங்கும் சீர்த்தன்மையும் காணப்படுகின்றது. குறிப்பாகப் பல்வேறு நிலைமைகளில் ஒரே மாதிரியாகவே ஒருவர் செயல்படுவதும் தெரிகிறது.
  • உளவியல், உடலியல் என்பவை சார்ந்து அமைதல் - ஆளுமை என்பது ஒரு உளவியல் உருவாக்கம் ஆகும். எனினும், உடலியல் செயல்முறைகள், தேவைகள் என்பவையும் இதைப் பாதிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன.
  • நடத்தைகளையும், செயல்களையும் பாதித்தல் - ஆளுமை என்பது ஒருவர் எவ்வாறு சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்கிறார் என்பது மட்டுமன்றி, ஒரு குறிப்பிட்ட முறையில் அவர் நடந்துகொள்வதற்கும் காரணமாக அமைகின்றது.
  • பன்முக வெளிப்பாடு - ஆளுமை என்பது ஒருவருடைய நடத்தை மூலம் மட்டும் வெளிப்படுவதில்லை. அது, அவருடைய எண்ணங்கள், உணர்வுகள், நெருக்கமான உறவுகள், பிற சமூகத் தொடர்பாடல்கள் போன்றவற்றிலும் வெளிப்படுகின்றது.

ஆளுமைக் கோட்பாடுகள் தொகு

ஆளுமை பற்றியும் அது உருவாகும் விதம் குறித்தும் பலவகையான கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட சிந்தனைக் குழுக்கள் இவ்வாறான கோட்பாடுகளின் உருவாக்கத்துக்குக் காரணமாக அமைந்தன. ஆளுமை குறித்த முக்கிய கோட்பாட்டு வகைகளாகப் பின் வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • வகைக் கோட்பாடுகள் - இவை ஆளுமை குறித்த தொடக்ககாலக் கோட்பாடுகளாகும். இக் கோட்பாடுகள் ஒரு குறிக்கப்பட்ட எண்ணிக்கையான ஆளுமை வகைகளே உள்ளதாகக் கூறின. அத்துடன், இவை உயிரியல் காரணங்களால் உருவாவதாகவும் கருதப்பட்டது.
  • இயல்புக் கோட்பாடுகள் - இக் கோட்பாடுகள் ஆளுமையை, மரபியல் அடிப்படையிலான உள்ளார்ந்த இயல்புகளின் விளைவாக நோக்கின.
  • உள இயக்கவியல் கோட்பாடுகள் - இவை ஆளுமை மீது நனவிலித் தன்மையின் செல்வாக்குக்கு அதிக அழுத்தம் கொடுத்தன. இக் கோட்பாடுகளில் பெரும்பாலும் சிக்மண்ட் பிராய்ட் செய்த ஆய்வுகளின் செல்வாக்குக் காணப்படுகின்றது.
  • நடத்தைக் கோட்பாடுகள் - தனியாளுக்கும், சூழலுக்கும் இடையிலான இடைவினைகளின் விளைவே ஆளுமை என இக் கோட்பாடுகள் கருதுகின்றன. இக் கோட்பாடுகள் அளக்கக்கூடியவையும் கவனிக்கத் தக்கவையுமான நடத்தைகளை மட்டுமே கருத்துக்கு எடுக்கின்றன. எண்ணங்கள், உணர்வுகள் போன்ற உளம் சார்ந்த விடயங்களை இவை கவனத்திற் கொள்வதில்லை.
  • மனிதநலக் கோட்பாடுகள் - இக் கோட்பாடுகள், ஆளுமையின் உருவாக்கத்தில் கட்டற்ற தன்விருப்பு, தனிமனிதப் பட்டறிவு என்பவற்றுக்கு அழுத்தம் கொடுக்கின்றன.

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. பாபரா ஈக்ளர். (2008). ஆளுமை கோட்பாடுகள். நியூ யோர்க்: Houghton Miffin Harcout Publlishing Company
  2. கென்ட்ரா வான் வாக்னர், ஆளுமை என்பது என்ன? பரணிடப்பட்டது 2009-10-14 at the வந்தவழி இயந்திரம் அபவுட்.காம் - 7 ஆகஸ்ட் 2009 அன்று பார்க்கப்பட்டது
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுமை&oldid=3730478" இலிருந்து மீள்விக்கப்பட்டது