இணுவில் இளந்தாரி கோயில்

இணுவில் இளந்தாரி கோயில் யாழ்ப்பாணத்தில் வீரர் வணக்கத்தின் அடியாகத் தோன்றி வளர்ந்த கோயில்களில் குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாண நகரிலிருந்து ஏறத்தாழ நான்கரை மைல்கள் தொலைவில் உள்ள இணுவில் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரை ஊடறுத்துச் செல்லும் யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை வீதியிலிருந்து, இணுவில் மக்லியொட் மருத்துவமனைக்கு அருகில், கிழக்குப் புறமாகச் செல்லும் ஒழுங்கையில் கால் மைல் தூரத்தில் இக் கோயில் உள்ளது.

இணுவில் இளந்தாரி கோயில். அருகிலுள்ள புளியமரத்தைக் கவனிக்கவும்.

வரலாறு தொகு

இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய 'கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது நூல்' கூறியதின்படி, யாழ்ப்பாண அரசர் காலத்தில் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கியவர் காலிங்கராயன் என்பவர். காலிங்கராயனின் மகனே இந்நூலின் பாட்டுடைத் தலைவனான கைலாயநாதன் ஆவான். இவனுக்கு 'இளந்தாரி' என்றொரு பெயரும் உண்டு. உடலுறுதி உள்ள துடிப்பான இளைஞர்களை இளந்தாரி என்று அழைப்பர். காலிங்கராயனுக்குப் பின் கைலாயநாதன் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கினான். இவனது வீரம், கொடை, விருந்தோம்பல், ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் இத்தூது நூலாலும் செவிவழிச் செய்திகளாலும் அறிய முடிகிறது.

இளந்தாரி, தாம் உலகு நீத்தலை மக்களுக்கு முன்பே குறிப்பாக உணர்த்தியிருந்தார் எனவும், ஒருநாள் ஒரு புளியமரத்தின் வழியே உருக்கரந்து விண்ணுலகு சென்றார் எனவும் கூறப்படுகிறது. அதனை அறிந்த மக்கள் அங்கு அவரைத் துதித்தனர் என்றும், இளந்தாரி அம்மக்கள் முன் தோன்றி அருளினார் என்றும் மேலும் கூறப்படுகிறது. அப்பொழுது அந்தப் புளியமரத்தடியில் ஆரம்பித்த 'நடுகல் வழிபாடு', இன்றைக்கு இணுவில் மக்களின் இதயம் நிறைந்த வழிபட்டுத் தலமாக "இளந்தாரி கோவில்" என்ற பெயருடன் பிரசித்தி பெற்று விளங்குகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணுவில்_இளந்தாரி_கோயில்&oldid=3737844" இலிருந்து மீள்விக்கப்பட்டது