இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி

இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி (Internet Protocol television, IPTV) அல்லது ஐபி டிவி வழமையான புவிப்புற, செய்மதி மற்றும் கம்பி வடத் தொலைக்காட்சி வடிவங்களில் அல்லாது இணையம் போன்ற சிப்ப மாற்றுப் பிணையம் வழியே இணைய நெறிமுறை கட்டமைப்பில் பரப்பப்படும் தொலைக்காட்சி சேவைகளாகும்.

உலகில் ஐபி டிவி உள்ள நாடுகளைக் குறிக்கும் வரைபடம்.
  நாட்டின் சில பகுதிகளிலாவது ஐபி டிவி ஒளிபரப்பப்படும் நாடுகள்

இணைய நெறிமுறைத் தொலைக்காட்சியை மூன்று முதன்மை வகைகளாகப் பிரிக்கலாம்:

  • நேரலைத் தொலைக்காட்சி, நடப்பு நிகழ்ச்சித் தொடர்பான இடைவினைகளுடனோ இல்லாமலோ;
  • பிறிதொரு நேரத் தொலைக்காட்சி: விட்டதைப் பிடி தொலைக்காட்சி (சில நாட்களுக்கு அல்லது மணிகளுக்கு முந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மறு ஒளிபரப்பு), மீள்-பரப்பு தொலைக்காட்சி (தற்போதைய தொலைக்காட்சி நிகழ்ச்சியை முதலிலிருந்து மீள் ஒளிபரப்பு);
  • கோரிய நேரத்து ஒளிதம் (VOD): தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அல்லாது பிற ஒளிதங்களின் பட்டியல் மூலமாக பார்வையிடுதல்.

இணைய நெறிமுறைத் தொலைக்காட்சி இணையத் தொலைக்காட்சியிலிருந்து வேறுபட்டது; ஐரோப்பிய தொலைத்தொடர்பு சீர்தர நிறுவனம் போன்றவற்றால் வரையறுக்கப்பட்டு தொலைதொடர்பு பிணையங்களில் அதிவிரைவு அணுக்க அலைவரிசைகள் மூலம் பயனரின் வீட்டிற்கு தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி அல்லது பிற பயனர் இடத்து கருவிகளுக்கு பரப்பப்படுகிறது.

இந்தியாவில் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், ஏர்டெல் மற்றும் ரிலையன்சு தொலைதொடர்பு நிறுவனங்கள் நாட்டின் பெருநகரங்களில் இச்சேவையை வழங்கி வருகின்றன.

இணைய நெறிமுறைத் தொலைக்காட்சியின் அங்கங்கள் தொகு

  • தொலைக்காட்சி தலை-முனையம்: இங்கு நேரலை தொலைக்காட்சி அலைவரிசைகள் குறியீடு/மறையீடு இடப்பட்டு இணைய நெறிமுறை பன்முகப்பரப்புகை ஓடைகளாக (multicast stream) அனுப்பப்படுகின்றன.
  • கோரிய நேரத்து ஒளித தளம்: இங்கு கோரிய நேரத்து ஒளிதங்கள் சேமிக்கப்பட்டு பயனர் கோரும் நேரத்தில் இணைய நெறிமுறை ஓர்முகப் பரப்புகை ஓடையாக (unicast stream) அனுப்பப்படுகின்றன.
  • இடைவினை வாயில்: பயனர் தமக்கு வழங்கப்படும் பல்வேறு ஐபி டிவி சேவைகளிலிலிருந்து வேண்டிய சேவையை பட்டியல்களிலிலிருந்து தேர்ந்தெடுத்தல்.
  • பரப்புகை பிணையம்: இணைய நெறிமுறை (ஓர்முக மற்றும் பன்முக) சிப்பங்களை சிப்ப மாற்று பிணையம் ஒன்றின் மூலம் பரப்புதல்.
  • வீட்டு முனையம்: பயனர் வீட்டில் தரவு இணைப்பு முடிவுறும் கருவி.
  • பயனரின் தொலைக்காட்சி அணுக்கப் பெட்டி: பயனரின் வீட்டில் தொலைக்காட்சி மற்றும் கோரிய நேரத்து ஒளித அடக்கங்களை மறையீடு/குறியீடு நீக்கி தொலைக்காட்சிப் பெட்டியில் காட்டுதல்.

சேவைப் பொதி தொகு

வீட்டுப் பயனாளர்களுக்கு ஐபி டிவி கோரிய நேரத்து ஒளிதத்துடன் பெரும்பாலும் பிற இணையச் சேவைகளான இணைய அணுக்கம் மற்றும் இணைய நெறிமுறைவழி ஒலிச் சேவைகளுடன் பொதிந்து வழங்கப்படுகின்றன. ஐபி டிவி, விஓஐபி, இணைய அணுக்கம் மூன்றும் இணைந்த வணிக வழங்கல்கள் மும்மடி இயக்கச் சேவை எனப்படுகிறது. இவை நகர்பேசி சேவையுடன் வழங்கப்படின் நான்முறை இயக்கம் எனப்படுகிறது.

வெளி இணைப்புகள் தொகு