இரும்புச் சத்து

இரும்புச் சத்து (iron supplements) என்பது உடலின் நலத்திற்கு தேவையான ஒரு ஊட்டச்சத்து ஆகும். இரும்பு குறைந்த அளவில் தேவைப்படும், மிகவும் அவசியமான சத்து ஆகும். இது இயற்கையில் பெருமளவு கிடைக்கிறது.

முக்கியத்துவம் தொகு

பெரும்பான்மையான புரதங்கள், நொதியங்கள் போன்றவற்றிற்கு இரும்பு ஒரு இன்றியமையாத மூலப்பொருள் ஆகும். ஆக்சிசனை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு உடலில் எடுத்து செல்லும் ஈமோகுளோபின் , மயோகுளோபின் என்பவற்றின் உள்ளடக்கமாக இரும்பு உள்ளது. உடலில்   பகுதி இரும்பு ஈமோகுளோபின் ஆக இரத்தச் சிவப்பணுக்களில் இருக்கிறது. இவை ஆக்சிசனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதேபோல தசைகளில் உள்ள மயோகுளோபின் என்பது ஆக்சிசனை தசைகளுக்கு மாற்றும்.

உயிரணுக்களின் பெருக்கம், வளர்ச்சி போன்றவற்றிற்கு இரும்பு முக்கியமான மூலப்பொருள். இரும்புச்சத்து குறைவால் போதிய ஆக்சிசன் இல்லாமல் தளர்ச்சியும், வேலை செய்ய திறமை இல்லாமை போன்றவையும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையில் குறைபாடும் ஏற்படும். அதே சமயத்தில் இரும்பு அதிகமானால் நஞ்சாகி இறக்கவும் நேரிடலாம்.

இரும்பை உறிஞ்ச தேவையான புரதத்திலும் இரும்பு உள்ளது. அதேபோல அதிக இரும்பை சேகரித்து வைக்க உதவும் நொதியங்களில் இரும்பு இருக்கிறது. ஈம், ஈம் அல்லாத வகை என இரண்டு வகைகளில் இரும்பு உடலில் இருக்கிறது. ஈமோகுளோபின் எனப்படும் புரதத்திலிருந்து ஈம் இரும்பு பெறப்படுகிறது.

உலக சுகாதார மையம் இரும்பின் குறைவால் வரும் நோய்கள் தான் உலகில் உண்ணும் பழக்கத்தால் வரும் நோய்களில் முதன்மையானவை எனக் கூறுகிறது. உலகின் 80% மக்கள் இரும்பு குறைவாக கொண்டவர்கள். அதில் 30% மக்கள் இரும்பு குறைவதால் வரும் இரத்தச்சோகை கொண்டவர்கள் என உலக சுகாதார மையம் கூறுகிறது.

இரும்புச் சத்துள்ள உணவுகள் தொகு

ஈம் இரும்பு தொகு

இது பெரும்பாலும் புலால் உணவில் கிடைக்கும். ஆடு, கோழி, மீன், கருவாடு ஆகியவை இரும்புச்சத்து மிக்கவை. ஈரல், இறைச்சி, மீன் என்பன ஈம் இரும்பு கொண்ட உணவுகளாகும். பால், முட்டை முதலான புலால் உணவில் ஈம் அல்லாத இரும்பு காணப்படும்.

ஈம் அல்லாத இரும்பு தொகு

குழந்தைகளுக்காக கிடைக்கும் பாலில் சேர்க்கப்படும் இரும்பு இந்த வகையைச் சேர்ந்ததே. உணவிலிருந்து கிடைக்கும் இரும்புச்சத்து உடலில் உறிஞ்சப்பட வைட்டமின் சி சத்து தேவைப்படுகிறது. வைட்டமின் சி சத்து மிக்கவை: நெல்லிக்காய், எலுமிச்சை, முளைகட்டிய தானியங்கள், பச்சைக்காய் கறிகள் மற்றும் கீரைவகைகள்[1].

இரும்பு சத்து உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும் சில காரணிகள் தொகு

இரும்பு உறிஞ்சுவது என்பது நாம் தினம் உட்கொள்ளும் உணவில் உள்ள இரும்பு எவ்வாறு உடலுக்குள் உறிஞ்சப்பட்டு உபயோகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும். ஒரு நல்ல உடல் நலம் உள்ள மனிதன் உட்கொள்ளும் உணவில் 30% மட்டுமே உறிஞ்சப்படுகிறது. உடலில் சேர்த்து வைத்துள்ள இரும்பின் அளவு உறிஞ்சுவதை கட்டுப்படுத்தும். இது இரும்பு நச்சுப்பொருளாக மாறுவதை தடுக்க வல்லது. எந்த வகை இரும்பு உணவில் உள்ளது என்பதை பொறுத்தும் மாறும். புலால் உணவிலிருந்து ஈம் இரும்பு அதிவிரைவில் உறிஞ்சப்படும். ஈம் இரும்பு 35% வரை உறிஞ்சப்பட முடியும். ஆனால் ஈம் அல்லாத இரும்பு 2- 20% வரை மட்டுமே உறிஞ்சப்படுகிறது.

தூண்டும் காரணிகள் தொகு

இரும்பு அகத்துறுஞ்சப்பட உயிர்ச்சத்து சி, போலிக்கமிலம், உயிர்ச்சத்து பி12 போன்ற பிற உணவுப்பொருட்களின் துணை அவசியம். எலுமிச்சைப்பழம் இரும்புச்சத்து அகத்துறுஞ்சப்படுதலைக் கூட்டும். விலங்குப்புரதத்திலுள்ள சிஸ்டினும் இரும்புச்சத்து அகத்துறுஞ்சப்படுதலை அதிகரிக்கும்.

மந்தப்படுத்தும் காரணிகள் தொகு

தேநீரில் உள்ள தானின், கல்சியம் என்னும் சுண்ணம்பு சத்து, பாலிபீனால், பைற்றெற்று, ஒக்சலேற்று சில தானியங்களில் உள்ள வேதிப்பொருட்கள் இரும்பு உறிஞ்சப்படுவதை மந்தமாக்குகின்றன.

குறைந்த சக்தி உள்ள உணவு அதிக கலோரிகள் கொண்டிருக்கும். ஆனால் இவை வைட்டமின், மற்றும் தனிமங்கள் குறைவாக கொண்டிருக்கும். இவற்றை உண்ணுவது இரும்பு அளவை கணிசமாக குறைக்கிறது. கேக்குகள், உருளைக்கிழங்கு வறுவல் போன்றவை இதற்கு உதாரணங்களாகும். அதேபோல தாகம் தீர்க்கும் சில மென்பானங்களில் உள்ள செயற்கை சர்க்கரை கூட இரும்பின் உறிஞ்சும் அளவை குறைக்கும்.

இரும்பின் நாளாந்தத் தேவை தொகு

மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மூன்றுவகையான இரும்பின் நாளாந்தத் தேவை அளவுகள் உண்டு. ஒன்று போதுமான அளவு, இரண்டாவது அதிகமான அளவு மூன்றாவது இதற்கு மேலே இருந்தால் நச்சுப்பொருளாக மாறிவிடக்கூடிய அபாயத்தைக்குறிக்கும் அளவு.

பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடன் பிறக்கும் குழந்தைகள் முதல் 6 மாதம் வரை தேவையான இரும்பு உடலில் இருக்கும். தாய்ப்பாலில் உள்ள இரும்பை 50% வரை குழந்தைகள் உறிஞ்சிக்கொள்ளகூடிய தன்மை உடையவர்கள். பசும் பாலில் உள்ள இரும்பின் அளவு குறைவாக இருக்கும். அதனால்தான் ஒரு வயதாகும் வரை பசுவின் பாலை குழந்தைகளுக்கு கொடுப்பது கூடாது. 6 மாதம் வரை தாய்ப்பாலும் அதன் பின் இரும்பு சேர்த்த திட உணவையும் சேர்த்து தரலாம். சிறிய பருவத்தில் அதாவது ஒரு வருடத்திற்கும் முன்பாகவே தாய்ப்பால் நிறுத்தப்பட்ட குழந்தைகளுக்கு இரும்பு சேர்த்த பால் தர வேண்டியது அவசியமாகும்.

ஒரு நாளைக்கு தேவையான அளவை குறிக்கும் பட்டியல்

வயது ஆண் (mg/day) பெண் (mg/day) கரு உற்ற பெண் (mg/day) பாலூட்டும் அன்னை(mg/day)
7 - 12 மாதம் 11 11 - -
1 - 3 வயது 7 7 - -
4 - 8 வயது 10 10 - -
9 - 13 வயது 8 8 - -
14 - 18 வயது 11 15 27 10
19 - 50 வயது 8 18 27 9
51+ வயது 8 8 - -
  1. இரத்தசோகை நோயைத் தடுப்போம்,வளரிளம் பெண்களின் வாழ்வைக் காப்போம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்புச்_சத்து&oldid=2748355" இலிருந்து மீள்விக்கப்பட்டது