இரேவந்தா

இந்து சமயக் கடவுள்

இரேவந்தா (Revanta) அல்லது இரைவதா (சமஸ்கிருதம்: रेवन्त, "புத்திசாலித்தனம்") இந்து சமயத்தைச் சேர்ந்த ஒரு சிறிய தெய்வமாகும். இருக்கு வேதத்தின்படி, இரேவந்தா சூரியனுக்கும் அவரது மனைவி சந்தியாவிற்கும் பிறந்த இளைய மகன். இமயமலையில் வனவாசிகளாக வாழ்வதாக நம்பப்படும் - இயக்கர்களைப் போன்ற - செல்வத்தின் கடவுளான குபேரனின் உதவியாளர்களாகவும், அவருடைய மறைந்திருக்கும் செல்வங்களைப் பாதுகாக்கும் குக்யர்களின் தலைவனாகச் சித்தரிக்கப்படுகிறார். [1] [2] இவரது உருவங்கள் மற்றும் சிற்பங்கள் பெரும்பாலும் வில் மற்றும் அம்புகளுடன் குதிரையில் வேட்டையாடுபவராக காட்டுகின்றன.

இரேவந்தா
கிழக்கு உத்தரபிரதேசத்தின் சாரநாத்தில் காணப்படும் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரேவந்தாவின் சிலை
வகைகுக்யர்கள்
இடம்இமயமலை
ஆயுதம்வாள்
சகோதரன்/சகோதரிஅஸ்வினிகள், யமன், யமி, சனீஸ்வரன், தபதி மற்றும் வைவஸ்வதமனு

இரேவந்தாவின் வழிபாடு குறிப்பாக மத்திய கால கிழக்கு இந்தியாவில் ( பீகார் மற்றும் வங்காளம் ) பொதுவானது. பல தொல்பொருள் கண்டுபிடிப்புகள் கி.பி 6 ஆம் நூற்றாண்டில் இவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வழிபாட்டு முறை இருந்ததைக் குறிக்கிறது.[3]

புராணக்கதைகள் தொகு

விஷ்ணு புராணம், மார்க்கண்டேய புராணம் போன்ற நூல்களில் இரேவந்தாவின் பிறப்புப் பற்றிய கதை கூறப்பட்டுள்ளது. ஒருமுறை, விண்ணுலக கட்டிடக்கலை நிபுணரான விசுவகர்மனின் மகளும், சூரியனின் மனைவியுமான சந்தியா ( சரண்யு ), சூரியக் கடவுளின் உக்கிரத்தை தாங்க முடியாமல், பெண் குதிரை வடிவத்தில் காடுகளுக்குச் சென்று துறவறத்தில் ஈடுபடுகிறார். தன்னைப் போலவே தோற்றமளிக்கும் சாயா என்பவளை அவள் நிழலாகக் காட்டினாள். சாயா உண்மையான சந்தியா அல்ல என்பதை உணர்ந்த சூரியன், சந்தியாவைத் தேடி கடைசியாக உத்தர குரு காடுகளில் அவளைக் கண்டுபிடித்தார். அங்கு சூரியன் குதிரை வேடமிட்டு சந்தியாவை அணுகினார். அவர்களின் சங்கமம் அஸ்வினிகள் மற்றும் இரேவந்தா என்ற இரட்டையர்களை உருவாக்கியது. [4] கூர்ம புராணம் மற்றும் மத்ச புராணத்தில், இரேவந்தாவின் தாயின் பெயராக சூரியனின் மற்றொரு மனைவியான இராத்திரி (ரஜினி) என்பதாக குறிப்பிடப்படுகிறது. மார்க்கண்டேய புராணத்தின் மற்றொரு அத்தியாயத்தில், இவர் சாயாவின் மகன் என்றும் இவரது சகோதரர்கள் சனி, தபதி மற்றும் சாவர்ணி மனு ஆகியோர் எனக் கூறப்பட்டுள்ளது. [5] [6]

மார்கண்டேய புராணம் மேலும் கூறுகையில், "காடுகள் மற்றும் பிற தனிமையான இடங்களின் பயங்கரங்கள், எதிரிகள் மற்றும் கொள்ளையர்களின் பயங்கரங்களுக்கு மத்தியில்" குக்யர்களின் தலைவராக பணி புரிய சூரியனால் இவருக்கு பணி வழங்கப்பட்டது. சில சமயங்களில், இரேவந்தா உருவங்களில் கொள்ளையர்களை எதிர்த்துப் போராடுவதாக சித்தரிக்கப்படுகிறார். [7]

தேவி பாகவத புராணத்தின் மற்றொரு கதை இவரைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டுள்ளது. ஒருமுறை உச்சைச்சிரவம் என்ற ஏழு தலை குதிரையின் மீது ஏறி விஷ்ணுவின் இருப்பிடத்திற்குச் சென்றபோது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி அந்த குதிரையின் அழகால் மயங்கி விஷ்ணு கேட்ட கேள்வியைப் புறக்கணித்தாள். இதனால், அவள் விஷ்ணுவால் சபிக்கப்பட்டாள். [8]

 
வங்காளத்தைச் சேர்ந்த இரேவந்தாவின் 11ஆம் நூற்றாண்டு சிலை

மார்கண்டேய புராணம் இரேவந்தாவை "வாள் மற்றும் வில் ஏந்தி, கவசத்தை அணிந்து, குதிரையின் மீது ஏறி, அம்புகள் மற்றும் அம்புகளை ஏந்தி" வர்பவராக விவரிக்கிறது. [9] காளிகா புராணம், இவர் வலது கையில் வாளையும், இடது கையில் சாட்டையையும் ஏந்தி, வெள்ளைக் குதிரையில் அமர்ந்திருப்பதை விவரிக்கிறது. இதனால் இவர் குதிரையில் சவாரி செய்பவராக அய -வாகனர் என்று அழைக்கப்படுகிறார். வராகமிகிரர் இவரை வேட்டையாட உதவியாளர்களுடன் வந்ததாக விவரிக்கிறார். [9]

பல சிற்பங்களில், வேட்டையாடும் காட்சிகளில், இரேவந்தா பெரும்பாலும் குக்யர்களுடன் சித்தரிக்கப்படுகிறார். வாள், வில் போன்ற நூல்களில் விவரிக்கப்பட்டுள்ள பண்புகளைத் தவிர; இவர் சில சமயங்களில் ஒரு கோப்பை மதுவையும் கையில் எடுத்துச் செல்கிறார். பெரும்பாலும் கணுக்கால்கள் வரை நீண்ட காலணிகளை அணிந்தபடி சித்தரிக்கப்படுகிறார். மற்ற இந்து தெய்வங்களைப் போலல்லாமல் - சூரியனைத் தவிர - அவர்கள் வெறுங்காலுடன் சித்தரிக்கப்படுகிறார்கள். [10] [11] இரேவந்தா ஒரு குதிரையில் அமர்ந்து வேட்டை நாயுடன் செல்வது போலவும் சித்தரிக்கப்படுகிறார். இவரது உதவியாளர்கள் ஈட்டிகள் மற்றும் வாள்கள் போன்ற பல்வேறு வேட்டையாடும் ஆயுதங்களுடன் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்களில் சிலர் சங்கு ஊதுவது அல்லது மேளம் முழங்குவது அல்லது குடையை தங்கள் ஆண்டவரின் தலைக்கு மேல் வைத்திருப்பது போல் காட்டப்பட்டுள்ளது. குடை அரசமரத்தின் சின்னமாக உள்ளது. [12] மேலும், அவர்களில் சிலர் பறப்பது அல்லது மது அல்லது தண்ணீர் குடுவைகளை வைத்திருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில், ஒரு உதவியாளர் இறந்த பன்றியை தோளில் சுமந்து செல்கிறார் அல்லது நாய் ஒரு பன்றியைத் துரத்துகிறது. [13]

வழிபாடு தொகு

இரேவந்தா போர்வீரர்கள் மற்றும் குதிரைகளின் காவல் தெய்வமாகவும், காடுகளின் ஆபத்துக்களில் இருந்து பாதுகாவலராகவும், வேட்டையாடுவர்களின் கடவுளாகவும் வணங்கப்பட்டார். [12] இரேவந்தாவின் வழிபாடு சூரிய வழிபாட்டு முறையான சௌரத்துடன் நெருக்கமாக தொடர்புடையது. பெரும்பாலும், விஷ்ணு தர்மோத்திரம் மற்றும் காளிகா புராணம் போன்ற நூல்கள் சூரியனுடன் அல்லது சூரிய வழிபாட்டின் சடங்குகளின்படி இரேவந்தாவை வழிபட பரிந்துரைக்கின்றன. [9] சபா-கல்ப-தருமம், சூர்யனுக்குப் பிறகு, இந்து மாதமான ஐப்பசியில், போர்வீரர்களால் இரேவந்தாவை வழிபட பதிவு செய்கிறது. [14] நான்காவது பாண்டவரான நகுலன் குதிரைப் பற்றி "அசுவசாஸ்திரம்" என்பதை எழுதியதாக நம்பப்படுகிறது. குதிரைகளை பேய்களிடமிருந்து பாதுகாக்க இரேவந்தா வழிபாட்டை அவர் பரிந்துரைக்கிறார். [14]

ஆரம்பகால இடைக்காலத்தில், குறிப்பாக இராசத்தானில் இரேவந்தா வழிபாடு பிரபலமாக இருந்தது. இரேவந்தா பெரும்பாலும் வைணவம் மற்றும் சூரியக் கோவில்களில் சித்தரிக்கப்படுகிறார். [15] காலச்சூரி மன்னன் இரண்டாம் இரத்னதேவனால் கட்டமைக்கப்பட்ட விக்ரானாபூரில் (நவீன கோட்காப், மத்தியப் பிரதேசம் ) இரேவந்தாவின் பிரதான தெய்வமான கோயில் பற்றி பேசும் ஒரு கல் கல்வெட்டு உள்ளது. [16]

சான்றுகள் தொகு

  1. Monier-Williams Dictionary: Revanta
  2. Monier-Williams Dictionary:Guhyaka
  3. Jash, Pranabananda (1978). "THE CULT OF REVANTA IN EASTERN INDIA". Proceedings of the Indian History Congress 39: 990-999. https://www.jstor.org/stable/44139448. 
  4. Singh 1997
  5. Danielou, Alain (1991), The Myths and Gods of India: The Classic Work on Hindu Polytheism, Inner Traditions / Bear & Company, p. 96, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89281-354-7.
  6. A Talaqdar of Oudh (2008), "XI", The Matsya Puranam: Part I, The Sacred books of the Hindus, vol. 18, Cosmo Publications, p. 32, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-307-0532-3
  7. Vibhuti Bhushan Mishra (1973), Religious Beliefs and Practices of North India During the Early Mediaeval Period, BRILL, p. 37, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-03610-5.
  8. Doniger O'Flaherty, Wendy (1980), Women, androgynes, and other mythical beasts, University of Chicago Press, p. 218, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-226-61850-1.
  9. 9.0 9.1 9.2 Singh 1997
  10. Singh 1997
  11. Kalia, Asha (1982), Art of Osian Temples: Socio-Economic and Religious Life in India, 8th-12th Centuries A.D., Abhinav Publications, pp. 119–120, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-391-02558-9.
  12. 12.0 12.1 A History of Zoroastrianism by Mary Boyce, Frantz Grenet, Roger Beck pp.485-6
  13. Singh 1997
  14. 14.0 14.1 Singh 1997
  15. Singh 1997
  16. Singh 1997

குறிப்புகள் தொகு

மேலும் படிக்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேவந்தா&oldid=3609386" இலிருந்து மீள்விக்கப்பட்டது