ஏயர்கோன் கலிக்காம நாயனார்

சைவ சமய 63 நாயன்மார்களில், 'வேளாளர்' குலத்தைச் சேர்ந்த நாயன்மார்.

ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1][2]. "ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்" என்று திருத்தொண்டத் தொகை கூறுகிறது. சோழநாட்டில் காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்னும் பதியில் வேளாண்மையிற் சிறந்த ஏயர்கோக்குடியில் தோன்றியவர் கலிக்காமநாயனார். இவர் சிவபக்தியிலும் சிவ அடியார் பக்தியிலும் சிறந்து விளங்கினார். கலிக்காமனார் மானக்கஞ்சாறனாரது மகளைத் திருமணம் செய்தவர். ஏயர்கோன் கலிக்காமர் திருப்புன்கூர்ப் பெருமானிற்குப் பல திருப்பணிகள் புரிந்தார். "நிதியமாவன திருநீறுகந்தார் கழல்" என்று சிவபெருமானைத் துதியினாற் பரவித் தொழுது இன்புறுந்தன்மையராய் வாழ்ந்தார். அங்ஙனம் வாழும் நாளில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் சிவபெருமானை பரவையாரிடத்து தூதுவிட்ட செய்தியைக் கேள்வியுற்று, "ஆண்டவனை ஏவுபவனும் தொண்டனா? இது என்ன பாவம்! இப்பெரும் பிழையினைக் கேட்டபின்னரும் இறவாதிருக்கின்றேனே! பெண்ணாசை காரணமாக ஒருவன் ஏவினால் அவ்வேவலைச் செய்வதற்காக ஓரிரவெல்லாம் தேரோடும் வீதியில் வருவது போவதாகத் திரிவதோ? நான்முகன் மால் ஆகிய தேவரெல்லாம் தொழும் தேவாதி தேவன் தூதுசெல்ல இசைந்தாலும் அவ்வாறு ஏவலாமா? இப்பாவச் செயலைச் செய்தவனைக் காண்பேனாயின் என்ன நிகழுமோ? " என்று பலவாறு எண்ணி மனம் புழுங்கினார். இதனைக் கேள்வியுற்று தம்பிழையினை உணர்ந்த வன்றொண்டர் ஆரூரிறைவரை நாளும் போற்றிக் கலிக்காமரது கோபத்தைத் தீர்த்தருளும்படி வேண்டிக்கொண்டார். சிவபெருமான் அவ்விருவரையும் நண்பர்களாக்கத் திருவுளம் கொண்டார். ஏயர்கோன் கலிக்காமனார்க்குச் சூலை நோயினை சிவபெருமான் ஏவினார். அச்சூலை ஏயர்கோனை வருத்திற்று, வருத்தம் தாங்காது சிவபெருமான் திருவடியை நினைத்து சூலை நீங்கும்படி வேண்டினார். அப்போது சிவபெருமான் அவர் முன் எழுந்தருளி "உன்னை வருத்தும் சூலை வன்றொண்டன் தீர்த்தாலன்றித் தீராது" எனக் கூறினார். அதுகேட்ட கலிக்காமர் "வழிவழி அடியனான என் வருத்தத்தை வம்பனான அவ்வன்றொண்டனோ தீர்ப்பவன்? அவன் தீர்க்கத் தீர்வதைக் காட்டிலும் என்நோய் என்னை வருத்துதலே நன்று' என்றார். சிவபெருமான் வன்றொண்டர் முன் தோன்றி 'இன்று நம் ஏவலாலே ஏயர்கோன் உற்ற சூலைநோயை நீசென்று தீர்ப்பாய்' எனப் பணித்தருளினார். நம்பியாரூராரும் பணிந்து விரைந்து தாம் சூலைநோய் மாற்ற வருஞ் செய்தியை ஏயர்கோனார்க்குச் சொல்லியனுப்பினார். அதனைக்கேட்ட கலிக்காமர் 'மற்றவன் வந்து நீக்குதன் முன்னமே என்னை நீங்காப் பாதகச் சூலை தன் உற்ற இவ்வயிற்றினோடும் கிழிப்பேன் என்று உடைவாளாற் கிழித்திட உயிரினோடும் சூலையும் தீர்ந்தது.

ஏயர்கோன் கலிக்காம நாயனார்
பெயர்:ஏயர்கோன் கலிக்காம நாயனார்
குலம்:வேளாளர்
பூசை நாள்:ஆனி ரேவதி
அவதாரத் தலம்:பெருமங்கலம்
முக்தித் தலம்:பெருமங்கலம்

கலிக்காமர் இறத்தல் கண்டு மனைவியார் உடனுயிர் விடத்துணிந்தார். அப்பொழுது சுந்தரமூர்த்தி சுவாமிகள் அண்மையில் வந்துவிட்டார் என்று வந்தோர் சொல்லக் கேட்டார். தம் கணவர் உயிர் துறந்த செய்தியை மறைத்து நம்பியாரூரரை எதிர்கொள்ளும்படி சுற்றத்தார்களை ஏவினார். அவர்களும் நம்பியாரூரரை எதிர்கொண்டு அழைத்து வந்து ஆசனத்தில் இருத்தி வழிபட்டுப் போற்றினர். அவர்களது வழிபாட்டினை ஏற்ற சுந்தரர் 'கலிக்காமருடைய சூலைநோயை நீக்கி அவருடன் இருத்தற்கு மிக முயல்கின்றேன்' என்றார். அப்பொழுது கலிக்காமரது மனைவியார் ஏவலால் வீட்டிலுள்ள பணியாளர்கள் வணங்கி நின்று 'சுவாமி! அவருக்குத் தீங்கேதுமில்லை உள்ளே பள்ளிகொள்கின்றார்' என்றனர். அதுகேட்ட வன்றொண்டர், 'தீங்கேதுமில்லை என்றீர்கள், ஆயினும் என்மனம் தெளிவு பெறவில்லை. ஆதலால் அவரை நான் விரைந்து காணுதல் வேண்டும்' என்றார். அதுகேட்டு அவர்கள் கலிக்காமரைக் காட்டினர். கலிக்காமர் குடர் சரிந்து உயிர் மாண்டு கிடத்தலைக் கண்ட சுந்தரர் 'நிகழ்ந்தது நன்று; யானும் இவர் போல் இறந்தழிவேன்' என்று குற்றுடைவாளைப் பற்றினார். அப்பொழுது இறைவர் அருளால் கலிக்காமர் உயிர்பெற்றெழுந்து "கேளிரேயாக்கிக் கெட்டேன்" என்று சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக்கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார். கலிக்காமரும் வாளை விட்டெறிந்து நம்பியாரூரர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் அன்பினால் தழுவிப் பிரியாத நண்பராகித் திருப்புன்கூர்ப் பெருமான் திருவடிகளை வணங்கிப் போற்றினர். நம்பியாரூரருடன் சென்று திருவாரூர்ப் பெருமானை வழிபட்டு அங்குத் தங்கிய ஏயர்கோன் கலிக்காமர் ஆரூரர் இசைவு பெற்றுத் தம்முடைய ஊருக்குத் திரும்பினார். அங்கு தமக்கேற்ற திருதொண்டுகள் புரிந்திருந்து சிவபெருமான் திருவடியைச் சேர்ந்து இன்புற்றார்.

நுண்பொருள் தொகு

  1. சிவதொண்டர், சிவனைப் பணிசெய்ய ஏவும் பிழை புரிவரேனும் அவர் சிவபக்தியிற் சிறந்தோரால் பத்தி செய்தற்குரியவர்.
  2. சிவநிந்தை பொறாத சிந்தை பெரிது.
  3. அமங்கலம் நேர்ந்த விடத்தும் சிவதொண்டர் எழுந்தருள்வரேல் அவரை மங்கலமாக வரவேற்று உபசரித்தலே முறைமை.

மேற்கோள்கள் தொகு

  1. 63 நாயன்மார்கள், தொகுப்பாசிரியர் (22 ஜனவரி 2011). ஏயர்கோன் கலிக்காம நாயனார். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=1431. 
  2. மகான்கள், தொகுப்பாசிரியர் (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். https://m.dinamalar.com/temple_detail.php?id=39. 
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்