ஒப்பியல் முறை

மொழியியலில், ஒப்பியல் முறை என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளை எடுத்து, ஒவ்வொரு அம்சமாக ஒப்பிடுவதன் மூலம் அவற்றின் வளர்ச்சியை ஆய்வு செய்யும் ஒரு முறை ஆகும். இது ஒரு மொழியை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் உட்கட்டமைப்பைப் பகுத்தாய்வதன் மூலம் காலப்போக்கில் அதன் வளர்ச்சியை ஆய்வு செய்யும் முறையிலும் வேறுபட்டது. பொதுவாக மொழிகளின் வரலாற்றுக்கு முந்தியகால நிலைமைகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், அவை தொடர்பான வரலாற்றுப் பதிவுகளில் இருக்கும் இடைவெளிகளை நிரப்புவதற்கும், அவற்றில் ஒலிப்பு, உருமாற்றம் போன்ற மொழியியல் அம்சங்களில் ஏற்படும் வளர்ச்சிகளைக் கண்டறிவதற்கும் இரண்டு முறைகளையுமே கையாள்வது வழக்கம்.

ஒப்பியல் முறையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட, ரோமான்சு மொழிகளின் மரவுருவைக் காட்டும் இடப்படம். இங்கே குடும்ப மரவுரு ஒரு வென் வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.

ஒப்பியல் முறை, 19 ஆம் நூற்றாண்டில் உருவாகி வளர்ந்த ஒரு முறை. டேனிய அறிஞர்களான ராசுமுசு ராசுக் (Rasmus Rask), கார்ல் வெர்னர் (Karl Verner) என்போரும், செருமானியரான சேக்கப் கிரிம் (Jacob Grimm)என்பாரும் இத்துறையில் முக்கியமான பங்களிப்புக்களைச் செய்தவர்கள் ஆவர். இம்முறையைப் பயன்படுத்தி முந்து மொழியொன்றின் மீட்டுருவாக்கத்தைச் செய்தவர் ஆகஸ்ட் சிலெய்ச்சர் (August Schleicher) என்பவர்ராவார். இது தொடர்பில் அவர் எழுதிய நூல் 1861 ஆம் ஆண்டு வெளியானது.

இனவழித் தொடர்பு தொகு

இரண்டு அல்லது பல சான்றுள்ள மொழிகளின் இணையான சொற்களின் பட்டியலை ஒப்பிடுவதன் மூலம், அவை ஒரே முந்து மொழியிலிருந்து உருவானவை என நிறுவுவது ஒப்பியல் முறையின் ஒரு நோக்கமாகும். இச் சொற்களில் இருந்து ஒழுங்கு முறையான ஒலித்தொடர்புகளைக் கண்டறிவதுடன், தொடரான ஒலி மாற்றங்களை ஒப்புநோக்குவர். இவற்றை அடிப்படையாக வைத்து முந்து மொழியை மீட்டுருவாக்கம் செய்ய முடியும். ஒலித்தொடர்புகள் தற்செயலானவையாக இராமலும், பொது மூதாதை மொழியைப் பகுதியாகவேனும் மீட்டுருவாக்கம் செய்ய முடிந்தாலும் மட்டுமே அவற்றுக்கிடையேயான பொது மூலத் தொடர்புகளை உறுதியாகச் சொல்ல முடியும்.

இரண்டு மொழிகள் ஒரே மூதாதை மொழியிலிருந்து தோன்றியிருக்குமானால் அவை இனத் தொடர்புள்ளவை எனக் கூறலாம். எடுத்துக்காட்டாக, எசுப்பானியமும், பிரெஞ்சு மொழியும் இலத்தீன் மொழியிலிருந்து வந்தவையாதலால் அவ்விரு மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை எனலாம். இக் குடும்பம் ரோமன்சு மொழிக்குடும்பம் ஆகும்.

மொழிகளுக்கு இடையிலான தொடர்புகள் வெவ்வேறு அளவுகளில் இருக்கலாம். எடுத்துக் காட்டாக, ஆங்கிலம், செருமானியம், ரசிய மொழி ஆகிய இரண்டுடனும் தொடர்பு உள்ளது ஆனாலும், செருமானியத்துடனான தொடர்பு ரசிய மொழியுடனான தொடர்பிலும் நெருக்கமானது ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒப்பியல்_முறை&oldid=2743167" இலிருந்து மீள்விக்கப்பட்டது