ஒமஹா உறவுமுறை

ஒமஹா உறவுமுறை, எஸ்கிமோ, ஹவாய், இரோகுவாயிஸ், குரோ, ஒமஹா, சூடான் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ள உறவு முறைகளுள் ஒன்றாகும். இது, ஒமஹா இனத்தவர் மத்தியில் காணப்பட்டதால், 1871 ஆம் ஆண்டில் உறவுமுறைகளைப் பற்றி ஆராய்ந்து நூலெழுதிய லூயிஸ் ஹென்றி மார்கன் (Louis Henry Morgan) என்பார், ஒமஹா என்னும் பெயரை இம்முறைமைக்கு இட்டார்.

உறவுமுறைகளுக்குப் பெயரிடும் ஆறு முறைகளில் ஒன்றான ஒமஹா முறையை விளக்கும் படம்.

செயற்பாட்டுத் தன்மையில் இது, குரோ உறவுமுறைக்கு மிகவும் நெருங்கியது. எனினும், குரோ உறவுமுறை தாய்க்கால்வழியைச் சார்ந்தது. ஒமஹா முறை தந்தைக்கால்வழியோடு ஒட்டியது. இம்முறையில், பேசுனரின் தந்தையும், அவர் சகோதரர்களும் ஒரே உறவுமுறைப் பெயரால் குறிக்கப்படுகின்றார்கள். அதேபோல, தாயும், தாயின் சகோதரிகளும் ஒரே உறவுப் பெயரால் அழைக்கப்படுகின்றார்கள்.

எனைய பல உறவுமுறை முறைமைகளைப் போலவே ஒமஹா முறையிலும், பெற்றோரின், ஒத்த பால், எதிர்ப் பால் உடன்பிறந்தாரின் மக்களிடையே வேறுபாடு காட்டப்படுகின்றது. ஆனால், இங்கே தாயின் சகோதரனின் பெண் பிள்ளைகள், தாய், தாயின் சகோதரிகள் ஆகியோரைக் குறிப்பிடப் பயன்படும் பெயர் கொண்டே குறிப்பிடப்படுகின்றார்கள். அதேவேளை தாயின் சகோதரனின் ஆண்பிள்ளைகள், தாயின் சகோதரனின் உறவுப் பெயர்கொண்டே அழைக்கப்படுகின்றார்கள். இதன்படி இரண்டு பரம்பரையைச் சேர்ந்தவர்களுக்கு ஒரே உறவுப் பெயர்கள் பயன்படுகின்றன. இன்னொரு வகையில் சொல்வதானால் தாயின் பக்கத்தில் உறவு முறையில் பால் வேறுபாடுகள் கட்டப்படுகின்றது, ஆனால் தலைமுறை வேறுபாடு காட்டப்படவில்லை.

தந்தையின் பக்கத்தில், தந்தையின் சகோதரியின் பிள்ளைகள் வேறு பெயர்கள் கொண்டே குறிக்கப்படுகிறார்கள். ஆகவே தந்தையின் பக்கத்தில் பால் வேறுபாடும், தலைமுறை வேறுபாடும் காட்டப்படுகின்றது. இது தந்தைவழி உறவினருக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாகக் கருதப்படுகின்றது. ஒமஹா முறை, குரோ முறையின் ஒரு கண்ணாடி விம்பத்தைப் போன்றது.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒமஹா_உறவுமுறை&oldid=1342093" இலிருந்து மீள்விக்கப்பட்டது