ஒல்மெக் நாகரிகம்

ஒல்மெக் நாகரிகம் என்பது, மெக்சிக்கோவில் நிலவிய, கொலம்பசுக்கு முற்பட்ட முதல் பெரிய நாகரிகம். இந்த நாகரிகத்தைச் சார்ந்த மக்கள் தென் மைய மெக்சிக்கோவில் உள்ள வெப்பமண்டலத் தாழ்நிலப் பகுதியில் வாழ்ந்தனர். இப் பகுதி இன்றைய மெக்சிக்கோவின் மாநிலங்களான வேராக்குரூசு, தபாசுக்கோ ஆகியவற்றில் அடங்கியுள்ளது.

"கிமு 1200 - 800 காலப்பகுதியைச் சேர்ந்த ஒல்மெக் மற்போராளியின் சிலை".
ஆண் அல்லது பெண் உருவம் மனிதக் கருஞ்சிறுத்தைக் குழந்தையைக் கையில் ஏந்தியிருப்பதைக் காட்டும் ஒரு சிற்றுருவம். இது ஒல்மெக் பண்பாட்டில் காணப்படும் ஒரு பொதுவான கருத்துரு.


ஒல்மெக் நாகரிகம், கிமு 1,500 க்கும் கிமு 400 க்கும் இடைப்பட்ட காலப் பகுதியுடன் பொருந்தும் இடையமெரிக்கப் பண்பாட்டின் தொடக்க காலத்தில் செழித்திருந்தது. கிமு 2,500 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இருந்தே முன்-ஒல்மெக் பண்பாடுகள் இப்பகுதியில் நிலவின. கிமு 1,600 - 1,500 காலப் பகுதியில், தொடக்க ஒல்மெக் பண்பாடு வேராக்குரூசு மாநிலத்தின் தென்கிழக்குக் கரைக்கு அண்மையில் உள்ள சான் லாரென்சோ தெனோச்தித்லான் பகுதியைச் சூழ்ந்த இடங்களில் உருவானது. இதுவே இடையமெரிக்காவின் முதல் நாகரிகமாக இருந்ததுடன், பின்னர் நிலவிய பல நாகரிகங்களுக்கு அடிப்படையையும் அமைத்துக் கொடுத்தது. "சடங்குசார்ந்த இரத்தம் வெளிவிடல்", "இடையமெரிக்கப் பந்துவிளையாட்டு" என்பனவும், இவர்கள் தொடங்கிய பல விடயங்களுள் அடங்கும் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இந்தப் பந்துவிளையாட்டு ஏறத்தாழப் பின் வந்த எல்லா இடையமெரிக்கச் சமுதாயங்களினதும் அடையாளமாக விளங்கியது.


ஒல்மெக்குகள் தொடர்பில் மிகவும் பழக்கமான அம்சம் அவர்களுடைய கலைப் படைப்புக்கள் எனலாம். குறிப்பாக, மிகப்பெரிய தலைச் சிற்பங்கள் மிகவும் புகழ் பெற்றவை. உண்மையில், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கப் பகுதியிலும், இடையமெரிக்கக் கலைப்பொருட் சந்தைகளில் வாங்கப்பட்ட பொருட்களை அடிப்படையாக வைத்தே முதலில் ஒல்மெக் நாகரிகம் வரையறுக்கப்பட்டது. ஒல்மெக் கலைப் பொருட்கள், பண்டைய அமெரிக்காவின் மிகக் கவர்ச்சியான கலைப் படைப்புக்களுள் அடங்குகின்றன.

மேலோட்டம் தொகு

மெக்சிக்கோ குடாவை அண்டிய தாழ்நிலப் பகுதியைச் சேர்ந்த ஓரிடமே பொதுவாக ஒல்மெக் நாகரிகத்தின் விளைநிலம் எனக் கருதப்படுகிறது. இப்பகுதி, தாழ்வான சதுப்பு நிலங்களையும், குறைவான உயரம் கொண்ட குன்றுகளையும், மலை முகடுகளையும், எரிமலைகளையும் கொண்டுள்ளது. மெக்சிக்கோக் குடாப் பகுதியில் உள்ள கம்பாச்சிக் குடா ஓரமாக துக்சுத்லாசு மலை உள்ளது. இப் பகுதியிலேயே ஒல்மெக்குகள் தமது நகரக் கோயில் தொகுதிகளை, சான் லாரென்சோ தெனோச்தித்லான், லா வெந்தா, டிரெசு சப்போர்ட்டெசு, லகுனா டி லொசு செரோசு ஆகிய இடங்களில் கட்டினர். இங்கேயே இடையமெரிக்க நாகரிகம் உருவாகி கிமு 1,400 தொடக்கம் கிமு 400 வரை செழித்திருந்தது.

தோற்றம் தொகு

 
கிமு 1400 தொடக்கம் 400 வரை ஒல்மெக்குகள் ஆண்ட ஒல்மெக் நிலப்பகுதி.

இன்று ஒல்மெக் என அழைக்கப் பெறுவது முதலில் சான் லாரென்சோ தெனோச்தித்லான் நகரில் தொடங்கியது. கிமு 1,400 அளவில் இப் பண்பாட்டின் தனித்துவமான அம்சங்கள் தோற்றம் பெறலாயின. இவ்விடத்தில் ஒல்மெக் நாகரிகம் வளர்வதற்கு, நல்ல பாசன வசதியுடன் கூடிய வண்டல் மண் கொண்ட சூழலும், கோட்சகோவால்கோசு ஆற்று வடிநிலம் வழங்கிய போக்குவரத்து வலையமைப்பும் உதவின. இந்தச் சூழல் ஏனைய பண்டைய நாகரிக மையங்களான நைல், சிந்து, மஞ்சள் ஆறு, இயுபிரட்டீசு, டைகிரிசு ஆகிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் சூழலுக்கு ஒப்பானது எனலாம். மிகுந்த உற்பத்தித் திறன் கொண்ட இச் சூழல், அடர்த்தியான மக்கள்தொகைப் பெருக்கத்தை ஊக்குவித்து, மேல்தட்டு வகுப்பினர் உருவாவதற்கும் வழி சமைத்தது. இந்த மேல்தட்டினரின் தோற்றமே, ஒல்மெக் பண்பாட்டின் அடையாளமாக விளங்குகின்ற குறியீட்டுத் தன்மையும், சிக்கல்தன்மையும் கொண்ட பகட்டான கலைப்பொருட்களின் உற்பத்திக்கு அடிப்படையாக அமைந்தது. பல பகட்டுப் பொருட்கள், சீனப் பச்சைக்கல் (jade), எரிமலைக் கண்ணாடி (obsidian), மக்னட்டைட்டு போன்ற தொலைதூரங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட பொருட்களினால் செய்யப்பட்டவை. ஒல்மெக் மேல்தட்டு வகுப்பினர் இடையமெரிக்காவில் விரிவான வணிக வலயமைப்புக்களைப் பெற்றிருந்தனர் என்பதை இது காட்டுகிறது. பெறுமதி வாய்ந்த சீனப் பச்சைக்கல் கிழக்குக் குவாத்தமாலாவில் உள்ள மொட்டகுவா பள்ளத்தாக்கில் கிடைக்கிறது. அதுபோல, எரிமலைக் கண்ணாடிகள் குவாத்தமாலாவின் உயர்நிலப் பகுதிகளான எல் சாயல், சான் மார்ட்டின் சிலொட்டபெக், புவெப்லா ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டவை. இவை ஒல்மெக்குகள் வாழ்ந்த இடங்களில் இருந்து முறையே 200 கிமீ, 400 கிமீ (120 மைல், 250 மைல்) தொலைவுகளில் உள்ளவை.

லா வெந்தா தொகு

 
நினைவுச்சின்னம் 1, லா வெந்தாவில் உள்ள நான்கு பெரிய ஒல்மெக் தலைச் சிற்பங்களுள் ஒன்று. இது ஏறத்தாழ 3 மீட்டர்கள் (9.8 அடி) உயரமானது.

முதலாவது ஒல்மெக் மையமான சான் லாரென்சோ கிமு 900 ஆண்டளவில் கைவிடப்பட்டது. ஏறத்தாழ அதே காலத்தில் லா வெந்தா முன்னிலைக்கு வந்தது. கிமு 950 ஆம் ஆண்டளவில் சான் லாரென்சோவில் இருந்த பல நினைவுச் சின்னங்கள் பெரும் எடுப்பிலான அழிவுக்கு உள்ளாயின. இது, உள்நாட்டில் ஏற்பட்ட குழப்பத்தினால் அல்லது வெளியில் இருந்து ஏற்பட்ட படையெடுப்பினால் நிகழ்ந்திருக்கலாம். எனினும் வெளியிலிருந்தான படையெடுப்புக்களுக்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. முக்கியமான ஆறுகளின் திசை மாற்றம் உட்பட, சூழல் மாற்றங்களினால் ஒல்மெக் மையம் மாறியிருக்கலாம் என்றும் தற்காலத்து ஆய்வாளர்களிடையே கருத்து நிலவுகிறது.


சான் லாரென்சோவின் வீழ்ச்சிக்குப் பின்னர் லா வெந்தா ஒல்மெக்குகளின் முக்கியமான மையம் ஆனது. இது கிமு 900 தொடக்கம் கிமு 400 ஆவது ஆண்டளவில் கைவிடப்படும் வரை தொடர்ந்து இருந்தது. லா வெந்தாவிலும் பழைய ஒல்மெக் மரபுகளே பேணப்பட்டன எனினும், லா வெந்தா வலிமையையும், செல்வத்தையும் வெளிக்காட்டும் வகையில் கண்ணைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. அங்கு கட்டப்பட்ட பெரிய பிரமிடு அதன் காலத்தில் மிகப் பெரிய இடையமெரிக்க அமைப்பாக விளங்கியது. 2500 ஆண்டுகள் ஏற்பட்ட அரிப்புகளுக்குப் பின்னரும் இன்றும் இப் பிரமிடு நிலத்திலிருந்து 34 மீட்டர்கள் உயரம் உள்ளதாகக் காணப்படுகிறது. 1000 தொன்கள் அளவுக்கு அடை கொண்ட மெருகூட்டிய பாம்புக்கற்கள்; கற்கள் பதித்த பெரிய பாவுதளங்கள்; மெருகூட்டிய சீனப் பச்சைக் கற்களினாலான மட்பாண்டங்கள், சிறிய சிலைகள் போன்ற பல பொருட்கள்; ஏமட்டைட்டினாலான ஆடிகள் போன்றன லா வெந்தாவில் அடிபாடுகளிடையே புதைந்து கிடந்தன.

வீழ்ச்சி தொகு

ஒல்மெக் பண்பாட்டின் வீழ்ச்சி எவ்வாறு ஏற்பட்டது, அதற்கான காரணங்கள் என்ன என்பன குறித்துத் தெளிவான விளக்கம் கிடையாது. கிமு 400 தொடக்கம் கிமு 350 வரையான காலப் பகுதியில் ஒல்மெக் மையநிலத்தின் கிழக்குப் பாதியில் மக்கள் தொகை பெருமளவில் வீழ்ச்சியுற்றது தெரிய வருவதுடன், 19 ஆம் நூற்றாண்டு வரை இப்பகுதியில் மிக ஐதாகவே மக்கள் வாழ்ந்தனர். மிகக் கடுமையான சூழல் மாற்றங்கள் இப் பகுதியைப் பெருமளவில் வேளாண்மை செய்வதற்குப் பொருத்தமற்றதாக ஆக்கியதாலேயே இப்பகுதியில் மக்கள்தொகை வீழ்ச்சியுற்றிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, ஒல்மெக்குகளின் வேளாண்மை, வேட்டையும் உணவு சேகரிப்பும், போக்குவரத்து என்பவற்றுக்கு அடிப்படையாக அமைந்திருந்த ஆறுசார்ந்த சூழலில் ஏற்பட்ட மாற்றங்களே இவ்வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கலாம் என்கின்றனர். புவிமேலோட்டு உயர்வு அல்லது தாழ்வு, வேளாண்மை நடவடிக்கைகளால் ஆறுகளில் வண்டல் படிந்தமை என்பன இம் மாற்ரங்களைத் தூண்டியிருக்கலாம் என்பது தொல்லியலாளர்களுடைய கருத்து.


இடையமெரிக்க நாகரிகத்தின் தொடக்க காலத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட மக்கள்தொகை வீழ்ச்சி தொடர்பான கோட்பாடு ஒன்றை சான்ட்லேயும் பிறரும் முன்வைத்தனர். எரிமலச் செயற்பாடுகளால் குடியிருப்புக்கள் வேறிடங்களுக்குப் பெயர்ந்தன என்பது இவர்களது கருத்து. எரிமலை வெடிப்புக்களால் உருவான சாம்பல் நிலங்களை மூடியமையால் மக்கள் வேறிடங்களுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கலாம்.

கலை தொகு

 
மீன் கொள்கலன், கிமு 12–9வது நூற்றாண்டு.
உயரம்: 6.5 அங். (16.5 சமீ).
 
ஒல்மெக் வெண்பாண்டம் "பொட்குழந்தை" உருவம் - தெற்குப் புவெப்லாவில் செய்யப்பட்டதாக இருக்கலாம்.

ஒல்மெக் பண்பாடு முதலில் ஒரு கலைப் பாணியாகவே அடையாளம் காணப்பட்டதுடன், தொடர்ந்தும், கலையே இப் பண்பாட்டின் முத்திரையாக விளங்குகிறது. சீனப் பச்சைக்கல், களிமண், எரிமலைப்பாறை போன்ற பல்வேறு வகையான பொருட்களில் உருவாக்கப்பட்ட ஒல்மெக் கலைப்பொருட்கள் ஆச்சரியப்படத்தக்க வகையில் இயற்கைத் தன்மை கொண்டனவாகக் காணப்படுகின்றன. "மற்போராளி" சிற்பம் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எனினும், வேறு சில கலைப் பொருட்கள் அருமையான மனித உருவம் கொண்ட விலங்குகளைக் காட்டுகின்றன. இவை பெரும்பாலும் சமயத் தொடர்பான பொருளை வெளிப்படுத்துகின்ற படிமவியல் முறைகளைப் பயன்படுத்தி மரபொழுங்கு முறையில் உருவாக்கப் பட்டுள்ளன. கீழ்நோக்கித் திரும்பிய வாய், பிளவுபட்ட தலை என்பன பொதுவாக ஒல்மெக் கலைகளுடன் தொடர்புடைய அலங்காரக் கூறுகளாக உள்ளன. இவை இரண்டுமே மனிதக்கருஞ்சிறுத்தையின் வெளிப்பாடுகளாக இருக்கின்றன.


மனிதரையும், மனிதரைப் போன்ற விலங்குகளையும் மட்டுமன்றி, விலங்கு உருவங்களைச் சித்தரிப்பதிலும் வல்லவர்களாக இருந்தனர். பறைவை, மீன் போன்ற உருவங்களில் செய்யப்பட்ட கொள்கலன்களை இத்தகையவற்றுக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.


அத்தோடு ஒல்மெக் உருவங்கள் தொடக்ககாலம் முழுவதையும் சேர்ந்த களங்களில் இருந்து ஏராளமாகக் கிடைத்துள்ளன. இவற்றுள், பெருந்தலைகளைப் போன்ற கல்லால் செய்யப்பட்ட உருவங்களே ஒல்மெக் பண்பாட்டு அம்சங்களைப் பெரிதும் வெளிக்காட்டுகின்றன. இத்தகைய நினைவுச் சின்னங்களை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

  • பெருந்தலைகள்
  • நீள்சதுரப் பலிபீடங்கள் - பலிபீடம் 5 போன்றவை
  • தனியாக நிற்கும் சிற்பங்கள் - எல் அசுசுலில் காணப்படும் இரட்டையர், சான் மார்ட்டின் பசாப்பன் நினைவுச்சின்னம் 1 என்பன இதற்கு எடுத்துக்காட்டுகள்.
  • நினைவுக் கற்பலகைகள் - லா வெந்தா நினைவுச்சின்னம் 19 போன்றவை.

பெருந்தலைகள் தொகு

ஒல்மெக் நாகரிகம் தொடர்பான அம்சங்களில் மிகவும் அதிகமாக அடையாளம் காணப்படுவது மிகவும் பெரிய அளவினதான கவசம் அணிந்த தலைச் சிற்பங்களே. இது குறித்து எந்தவொரு கொலொம்பசுக்கு முந்திய நூல்களும் விளக்கவில்லை ஆதலால், இந்தக் கவர்ச்சியான சிற்பங்கள் குறித்துப் பலவகையான கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இத்தலைகள் பந்தாட்டவீரர்களைக் குறிக்கின்றன என்கின்றனர். ஆனால், இப்போது இத் தலைகள் அரசர்களுக்கு உரியவை என்னும் கருத்தையே பொதுவாகப் பலரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஒருவேளை அரசர்களைப் பந்தாட்ட உடையில் காட்டியிருக்கலாம். தனித்தன்மையுடன் கூடிய இத் தலைகளில் எந்த இரண்டு தலைகளும் ஒன்றுடன் ஒன்று ஒத்திருப்பதில்லை. தலைக்கவசம் போன்று காட்சியளிக்கும் தலையணிகளைத் தனித்துவமான அலங்காரக் கூறுகள் அழகூட்டுகின்றன. இது இவை தனியாட்களின் அல்லது ஒரு குழுவினரின் அடையாளமாக இருக்கலாம் என்ற கருத்தை ஏற்படுத்துகிறது.


இதுவரை 17 பெருந்தலைகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

களம் எண்ணிக்கை பெயர்
சான் லாரென்சோ 10 பெருந்தலை 1 முதல் 10
லா வெந்தா 4 நினைவுச்சின்னம் 1 முதல் 4
இட்ரெசு சப்போட்டெசு 2 நினைவுச்சின்னம் A யும் Q வும்
ராஞ்சோ லா கோபாட்டா 1 நினைவுச்சின்னம் 1


இத்தலைகள் பல்வேறு அளவுகளைக் கொண்டனவாக உள்ளன. மிகப் பெரியதான ராஞ்சோ லா கோபாட்டாவில் உள்ள தலை 3.4 மீட்டர் உயரம் கொண்டது. இட்ரெசு சப்போட்டெசில் இருக்கும் தலையே மிகவும் சிறியது. இதன் உயரம் 1.47 மீட்டர். இத்தலைகள் 25 தொன்களுக்கும் 55 தொன்களுக்கும் இடைப்பட்ட நிறையுடையவை.

 
சீனப் பச்சைக்கல்லிலான "ஒல்மெக் பாணி" முகமூடி
 
நினைவுச்சின்னம் 6, சான் லாரென்சோ தெனோச்தித்லான்


தலைகள் ஒற்றை எரிமலைப் பாறைகளில் செதுக்கப்பட்டவை. இக் கற்கள் துக்சுத்லாசு மலையில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக இட்ரெசு சப்போட்டெசுத் தலைகள் துக்சுத்லாசின் மேற்குக் கோடியில் உள்ள செர்ரோ எல் வீசியா, என்னும் மலை உச்சியில் காணப்படும் எரிமலைப் பாறையில் செதுக்கப்பட்டவை. சான் லாரென்சோ, லா வெந்தா ஆகிய இடங்களின் தலைகளுக்கு உரிய கற்களை இம்மலையின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள செர்ரோ சின்டெப்பெக்கில் எடுத்திருக்கக்கூடும் எனக் கருதுகின்றனர். தலைகள் லனோ டெல் சிக்காரோ தொழிற்சாலையில் செய்யப்பட்டு, இவ்விடத்திலிருந்து பல மைல்கள் தொலைவுக்கு இழுத்துக்கொண்டோ அல்லது ஆற்றில் மிதக்கவிட்டோ கொண்டு சென்றிருக்கக்கூடும். இவ்வாறு பெருந்த் தலைகளைக் கொண்டு செல்வதற்கு மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு 1,500 பேர்கள் உழைத்திருக்கக்கூடும் என்று மதிப்பிடுகின்றனர்.


சில தலைகளும், பல பிற நினைவுச்சின்னங்களும், பலவாறாகச் சிதைத்தல், புதைத்தல் மீண்டும் தோண்டி எடுத்தல், புதிய இடத்தில் நிறுவுதல், மீண்டும் புதைத்தல் போன்ற பல மாற்றங்களுக்கு உள்ளாயின. குறைந்தது இரண்டு தலைகளையாவது மீளச் செதுக்கியுள்ளது தெரிகிறது. ஆனால் இது புதிய வேலைகளுக்குக் கற்கள் கிடைப்பது அரிதாகிய காரணத்தால் நிகழ்ந்ததா அல்லது இதற்கு சடங்கு தொடர்பான அல்லது வேறுவகைக் காரணங்கள் இருந்தனவா என்று தெரியவில்லை. சில ஆய்வாளர்கள், இவ்வாறான சிதைப்புக்களுக்கு வெறுமனே அழிப்பு நோக்கம் மட்டுமன்றி வேறு சிறப்புக் காரணங்கள் இருந்திருக்கக்கூடும் என்று நம்புகின்றனர். ஆனால், வேறு சிலரோ உள்நாட்டுக் குழப்பங்கள், அல்லது சிறுபான்மை வெளிப் படையெடுப்புக்கள் நிகழ்ந்திருக்கக்கூடிய வாய்ப்புக்களையும் முற்றாக மறுக்கமுடியாது என்கின்றனர்.


பெருந்தலைகள், தட்டையான முகம், தடித்த உதடுகள் போன்ற ஆப்பிரிக்க மக்களுக்குரிய இயல்புகளைக் கொண்டிருப்பதால், ஒல்மெக்குகள் புதிய உலகுக்குப் புலம்பெயர்ந்த ஆப்பிரிக்க இனத்தவராக இருக்கலாம் என்று சிலர் வாதிட்டனர். எனினும், கொலம்பசுக்கு முந்திய காலத்தில் இடையமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் தொடர்புகள் இருந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்று பெரும்பாலான தொல்லியலாளர்களும், இடையமெரிக்க வல்லுனர்களும் கூறிவிட்டனர். எரிமலைக் கற்களில் ஆழமாகச் செதுக்க முடியாமையே தட்டையான முக அமைப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்பது சிலரது விளக்கம். இன்னும் சிலர், அகன்ற மூக்கு, தடித்த உதடு என்பவற்றுடன் சில ஆசிய இனத்தவருக்கே உரிய இமை உட்புற மடிப்புக்கள் காணப்படுவதையும் குறிப்பிட்டு இந்த இயல்புகள் அனைத்தும் இப்போதும் தற்கால இடையமெரிக்க இந்தியர்களிடம் காணமுடியும் என்கின்றனர். 1940களில், ஓவியரும், கலை வரலாற்றாளருமான மிகுவேல் கோவாரூபியாசு என்பவர் வெளியிட்ட பல ஒல்மெக் கலைப்பொருட்களினதும், தற்கால மெக்சிக்க இந்திய மக்களதும் ஒளிப்படங்களை ஒப்பிட்டு அவற்றில் ஒத்த முக அமைப்புக்கள் காணப்படுவதைச் சான்றாக அவர்கள் காட்டுகின்றனர். மேலும், ஒல்மெக்குகளின் ஆப்பிரிக்கத் தோற்றம் குறித்த எடுகோள், குறித்த சிற்பங்கள் உண்மைத்தன்மையை நோக்கமாகக் கொண்டு செதுக்கப்பட்டவை என்ற கருதுகோளின் அடிப்படையில் உருவானவை. ஆனால், ஒல்மெக் சிற்பங்களை முழுமையாக ஆராயும்போது இந்தக் கருதுகோளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பது இந்த எடுகோளுக்கு எதிரானவர்களுடைய கருத்து. இவான் வான் சேர்ட்டிமா என்பவர் இட்ரெசு சப்போட்டெசு தலைகளில் காணப்படும் ஏழு பின்னல்கள், எத்தியோப்பியத் தலையலங்காரப் பாணியை ஒத்தவை என்று சுட்டிக்காட்டினார். இது எதியோப்பியப் பாணி என்பதற்கு அவர் சான்றுகள் எதையும் முன்வைக்கவில்லை. அத்துடன் எகிப்தியலாளர் பிராங்க் யூர்க்கோ என்பவர் ஒல்மெக் பின்னல்கள், எகிப்தியப் பின்னல்களையோ அல்லது நூபியப் பின்னல்களையோ ஒத்தவை அல்ல என்று கூறியுள்ளார்.

படங்கள் தொகு

குறிப்புகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Olmec
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்மெக்_நாகரிகம்&oldid=2520762" இலிருந்து மீள்விக்கப்பட்டது