கண்காணிப்புக் கால்கட்டு

கண்காணிப்புக் கால்கட்டு (ankle monitor) அல்லது பொதுவழக்கில் கட்டுக்கயிறு எனப்படுவது வீட்டுக்காவலில் வைக்கப்படும் நபர்கள் அணியுமாறு ஆணையிடப்படும் ஓர் கருவியாகும். குறிப்பிட்ட இடைவேளைகளில் கண்காணிப்புக் கால்கட்டு கருவி அதனுடன் தொடர்பிலுள்ள வாங்கிக்கு வானொலி அலைவெண் மூலம் தன்னுடைய இருப்பிடம் மற்றும் பிற தகவல்களை அனுப்புகிறது. வரையறுக்கப்பட்ட எல்லைக்கு வெளியே காவலில் உள்ள நபர் செல்கையில் காவலர்களுக்கு எச்சரிக்கைக் கிடைக்கிறது. இவற்றை கழற்றவோ செயலிழக்கச் செய்யவோ இயலாத வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது; அத்தகையச் செயல் எதுவும் காவலர்களின் கவனத்தை ஈர்க்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.

கடற்கரையில் பெண்ணொருவர் கண்காணிப்புக் கால்கட்டு அணிந்திருத்தல்.

பொதுவாகக் காணப்படும் அமைப்பில் வானொலி அலைவெண் அனுப்பி கைதியின் வீட்டில் நிலையான இடத்தில் வைக்கப்பட்டுள்ள வாங்கிக்கு தகவல்களை அனுப்புகிறது. வீட்டிலுள்ள கருவி ஓர் தொலைபேசியுடனோ நகர்பேசியுடனோ வழியே சேவைமைய கணினியுடன் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நேரங்களில் காவலிலுள்ளவர் வீட்டினுள் இல்லையெனில் சேவை மையத்தில் ஓர் எச்சரிக்கை எழுப்பப்படுவதுடன் கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள காவலதிகாரிக்கும் அஞ்சலாகிறது.

இத்தகைய கருவிகளை நீதிமன்றங்களில் முதலில் பயன்படுத்தியது 1983ஆம் ஆண்டில் நியூமெக்சிகோவில் அல்புகர்கின் நீதியரசர் ஜாக் லவ் ஆவார். ஸ்பைடர்மேன் சித்திரக்கதையினால் பாதிக்கப்பட்டு இந்தச் சோதனைக்கு உத்தரவிட்டார்.[1] இதன்மூலம் காவலில் வைக்கப்பட்டிருப்பவருக்கு வீட்டினுள் நடமாட முழு சுதந்திரம் கிடைக்கும் அதே நேரம் காவலர்களின் கண்காணிப்பிலும் இருப்பார். சிறையில் வைக்கப்பட வேண்டிய தேவையில்லை.

மேற்கோள்கள் தொகு