கலாத்தியருக்கு எழுதிய திருமுகம்

திருவிவிலிய நூல்

கலாத்தியர் அல்லது கலாத்தியருக்கு எழுதிய திருமுகம் (Letter [Epistle] to the Galatians) என்னும் நூல் கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் எட்டாவதாகவும், தூய பவுலின் திருமுகங்கள் வரிசையில் நான்காவதாகவும் அமைந்துள்ளது. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole pros Galates (Επιστολή προς Γαλάτες) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula ad Galatas எனவும் உள்ளது [1]. இம்மடலைத் தூய பவுல் [2] கி.பி. 52-53ஆம் ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்து [3].

திருத்தூதர் பவுல் கிறித்தவ சபைகளுக்குத் திருமுகம் எழுதுகிறார். ஓவியர்: வலந்தன் தெ புலோஞ்/நிக்கொலாசு தூர்னியே. காலம்: 16ஆம் நூற்றாண்டு. காப்பிடம்: ஹூஸ்டன், அமெரிக்கா.


தூய பவுல் எழுதிய திருமுகங்களின் பட்டியல்
பெயர்
கிரேக்கம்
இலத்தீன்
சுருக்கக் குறியீடு
தமிழில் ஆங்கிலத்தில்
உரோமையர் Προς Ρωμαίους Epistula ad Romanos உரோ Rom
1 கொரிந்தியர் Προς Κορινθίους Α Epistula I ad Corinthios 1 கொரி 1 Cor
2 கொரிந்தியர் Προς Κορινθίους Β Epistula II ad Corinthios 2 கொரி 2 Cor
கலாத்தியர் Προς Γαλάτας Epistula ad Galatas கலா Gal
எபேசியர் Προς Εφεσίους Epistula ad Ephesios எபே Eph
பிலிப்பியர் Προς Φιλιππησίους Epistula ad Philippenses பிலி Phil
கொலோசையர் Προς Κολασσαείς Epistula ad Colossenses கொலோ Col
1 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Α Epistula I ad Thessalonicenses 1 தெச 1 Thess
2 தெசலோனிக்கர் Προς Θεσσαλονικείς Β Epistula II ad Thessalonicenses 2 தெச 2 Thess
1 திமொத்தேயு Προς Τιμόθεον Α Epistula I ad Timotheum 1 திமொ 1 Tim
2 திமொத்தேயு Προς Τιμόθεον Β Epistula II ad Timotheum 2 திமொ 2 Tim
தீத்து Προς Τίτον Epistula ad Titum தீத் Tit
பிலமோன் Προς Φιλήμονα Epistula ad Philemonem பில Philem

கலாத்தியர்: பவுலின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய மடல் தொகு

கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் தூய பவுல் தம் வாழ்க்கைக் குறிப்புகள் சிலவற்றைத் தருகிறார். வழக்கமாக, பவுல் எழுதிய திருமுகங்களில் முதலில் கடிதத்தை எழுதுபவர் யார், அதைப் பெறுபவர் யார் என்னும் குறிப்புக்குப் பிறகு, வாழ்த்தும், நன்றியுரையும், கடவுளுக்குப் புகழுரையும் அமைந்திருக்கும். ஆனால் கலாத்தியருக்கு எழுதிய மடலில் பவுல் சுருக்கமாக வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, உடனடியாகக் கலாத்தியரிடம் குற்றம் காணுகின்றார். உணர்ச்சிவசப்பட்டவராக அவர்களைக் கடிந்துகொள்கின்றார். அவர்களைப் பார்த்து, "அறிவிலிகளான கலாத்தியரே" என்று வசைமொழி கூறுகின்றார் (கலா 3:1).

கடிதத்தின் இறுதியில் வாழ்த்துரை கூறுவது வழக்கம். ஆனால் இங்கோ பவுல் "இனிமேல் எவரும் எனக்குத் தொல்லை கொடுக்கவேண்டாம்" என்று ஒருவித மனச்சலிப்போடு கூறி, கடிதத்தை முடித்துவிடுகிறார் (கலா 6:17).

கலாத்தியர் திருமுகம் எழுதப்பட்ட சூழலும் நோக்கமும் தொகு

கலாத்திய சபையில் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்கள் சிலர் புகுந்து பவுல் எடுத்துரைத்த போதனைக்கு எதிராகப் பேசினர். அவர்கள் திருச்சட்டத்தினால்தான் மீட்புப் பெற இயலும் என வாதிட்டனர். அவர்கள், பிற இனத்துக் கிறிஸ்தவர்கள் மோசேயின் சட்டமாகிய விருத்தசேதனம் போன்றவற்றைக் கடைபிடித்தாக வேண்டும் என்றனர். மேலும், வேற்றினத்துக் கிறிஸ்தவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக சில சட்ட எதிர்பார்ப்புகளைப் பவுல் நீக்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் யூதமயமாக்கும் கிறிஸ்தவர்களின் போதனையை முறியடிக்கக் கடுமையான முறையில் பவுல் இத்திருமுகத்தை எழுதுகிறார். இதனை கி.பி. 52-53 ஆண்டுகளில் எழுதியிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. எனினும் ஒரு சிலர் இத்திருமுகம் எருசலேம் சங்கத்துக்கு முன்பே, அதாவது கி.பி. 49 க்கு முன்பே எழுதப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

உள்ளடக்கம் தொகு

இத்திருமுகத்தின் முதற்பகுதியில் பவுல் தம்மைக் குறித்துப் பேசுகிறார். தாம் இயேசு கிறிஸ்துவின் திருத்தூதர் என்பதை ஆதாரங்களோடு நிலைநாட்டுகிறார்; தம் திருத்தூதுப் பணிக்கான அழைப்பு எந்த மனித அதிகாரத்திடமிருந்தும் வரவில்லை, மாறாகக் கடவுளிடமிருந்தே வந்தது என்று வலியுறுத்துகிறார்; யூதரல்லாதோர்க்கும் நற்செய்தி போதிப்பதே தம்முடைய பணி என அடித்துச் சொல்கிறார் (அதிகாரங்கள் 1-2).

நம்பிக்கையால் மட்டுமே நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகிறோம் என்கிறார் பவுல்; கிறிஸ்தவர் தூய்மையாக்கப்படுவது சட்டம் சார்பான செயல்களால் அல்ல, மாறாக நம்பிக்கையால் விளையும் கீழ்ப்படிதலால் என்கிறார்; கிறிஸ்துவைச் சார்ந்தோர் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டவர்கள் என்பதை அழுத்தந்திருத்தமாகக் கூறுகிறார் பவுல் (அதிகாரங்கள் 3-4).

கிறிஸ்தவ வாழ்வு கிறிஸ்துவின் மீது கொண்ட நம்பிக்கையால் விளையும் அன்பின் அடிப்படையில் உள்ளது என பவுல் விளக்குகிறார் (அதிகாரங்கள் 5-6).

கலாத்தியர் திருமுகத்தின் விரிவான பகுப்பாய்வு தொகு

அதிகாரம் 1:

  • கலாத்திய மாநிலத்தின் நிலைமை: கலா 1:1 -- இக்கடிதத்தைத் தாமே எழுதுவதாகப் பவுல் தம்மை அடையாளம் காட்டுகிறார்; கடவுளிடமிருந்து தாம் திருத்தூதர் நிலை பெற்றதாகக் கூறுகிறார்.
  • கலா 1:2 -- கலாத்திய திருச்சபை இக்கடிதத்தின் பெறுநர் என்னும் குறிப்பு. அன்றைய உரோமை மாநிலமாகிய கலாத்தியா இது என்று கொண்டால், பவுல் இருமுறை ஏற்கனவே அங்குச் சென்றிருந்தார். அச்சபை மக்களோடு நெருங்கிய உறவு கொண்டிருந்தார்.
  • கலா 1:3 -- வழக்கம்போல, "நம் தந்தையாம் கடவுளிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக" என்று வாழ்த்துகின்றார்.
  • கலா 1:4 -- பவுல் எழுதிய பிற மடல்களில் காணப்படாத ஒரு கருத்து இங்கே வாழ்த்துப் பகுதியில் உள்ளது. "பொல்லாத காலம்" என்னும் குறிப்பு வழியாக பவுல் இக்கடிதத்தின் உள்ளடக்கத்தை ஓரளவு இங்கே முன்னறிவிக்கிறார்.
  • கலா 1:11-18—பவுல் தம் வாழ்க்கையில் நிகழ்ந்த சில அனுபவங்களை இங்கே நினைவுகூர்கின்றார். அவர் திருத்தூதராக அழைப்புப் பெற்ற வரலாறு குறிக்கப்படுகிறது. திருச்சபையைத் துன்புறுத்திய பவுல் தமஸ்கு செல்லும் வழியில் உயிர்பெற்றெழுந்த இயேசுவைச் சந்தித்தார். அவருடைய வாழ்வில் ஒரு வேரோட்டமான மாற்றம் ஏற்பட்டது. உடனே அவர் அரேபியா சென்றதாகவும் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னரே எருசலேம் சென்று கேபாவைப் பார்த்துப் பேசியதாகவும் கூறுகிறார். ஆனால், திருத்தூதர் பணிகள் நூல் தரும் தகவல்படி, பவுல் தம் மன மாற்றத்திற்குப் பிறகு உடனடியாக எருசலேம் சென்றார் என்னும் குறிப்பு உள்ளது (திப 9:26-30). பவுல் பிற திருத்தூதர்களிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுகிறார். லூக்கா திருத்தூதர்களிடையே நிலவிய ஒற்றுமையை வலியுறுத்துகிறார்.
  • கலா 1:19—எருசலேம் சபையின் தலைவராயிருந்த யாக்கோபை பவுல் சந்தித்த செய்தி. யாக்கோபு "ஆண்டவரின் சகோதரர்" என அழைக்கப்படுகிறார். யாக்கோபு "திருச்சபையின் தூண்கள்" என்று அழைக்கப்பட்ட மூவருள் (கேபா [பேதுரு], யோவான், யாக்கோபு) ஒருவர் (கலா 2:9).
  • அதிகாரம் 2:
  • கலா 2:11-14—அந்தியோக்கியாவில் பவுல் பேதுருவைக் கடிந்துகொண்ட செய்தி குறிக்கப்படுகிறது. யாக்கோபின் ஆள்கள் யூத பழக்கங்களை ஆதரித்தவர்கள். அவர்கள் வருமுன் பேதுரு பிற இனத்தாரோடு உணவருந்தியதுண்டு. ஆனால் யூத ஆதரவாளர்களைக் கண்டு அஞ்சிய பேதுரு பிற இனத்தாரோடு உணவருந்தியதை நிறுத்திவிட்டார். இது ஒரு வெளிவேடம் என்று பவுல் பேதுருவைக் கடிந்துகொண்டார்: "நான் பேதுருவை நேருக்கு நேராய் எதிர்த்தேன்" என்று பவுல் கூறுகிறார் (கலா 2:11).
  • அதிகாரம் 3:
  • கலா 3:1-5 -- இயேசுவிடத்தில் நாம் கொள்கின்ற நம்பிக்கையே நம்மைக் கடவுளுக்கு ஏற்புடையோர் ஆக்கும். இவ்வாறு நம்புவோருக்குக்க் கடவுளின் தூய ஆவி கொடையாக வழங்கப்படுகிறது.
  • கலா 3:6-20 --- யூதருக்கு வழங்கப்பட்ட சட்டத்தின் வெளி ஆசாரம் என்பது நமக்குக் கடவுளின் ஆசியைப் பெற்றுத் தராது.
  • கலா 3:15-20—கடவுள் ஆபிரகாம் வழியாக மனுக்குலம் முழுவதற்கும் தம் வாக்குறுதிகளை அளித்துள்ளார்.
  • கலா 3:27-28 -- "கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகளளென்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்"

அதிகாரம் 4:

  • கலா 4:4-7 -- "பெண்ணிடம் பிறந்தவராகவும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவராகவும் தந்தையால் அனுப்பப்பட்ட" இயேசு நம்மைக் கடவுளின் பிள்ளைகளாக்கியுள்ளார். நம் உள்ளங்களில் கடவுளின் ஆவி பொழியப்பட்டுள்ளதால் நாம் கடவுளை அப்பா, தந்தையே என்று உரிமையோடு அழைக்கலாம்.

அதிகாரம் 5:

  • கலா 5:1-15—கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வு அளித்துள்ளார். உரிமை வாழ்வைப் பெற்றுள்ள நாம் அன்புக் கட்டளையைக் கடைப்பிடிப்பதன் வழியாகப் பேரின்பத்துக்கு அழைக்கப்படுகிறோம்.
  • கலா 5:16-20—ஊனியல்பு நம்மைப் பாவத்திற்கு இழுத்தாலும், நாம் கடவுளின் ஆவியால் வழிநடத்தப்படுகிறோம். தூய ஆவியின் கனிகள் கீழ்வருவன:

- அன்பு - மகிழ்ச்சி - அமைதி - பொறுமை - பரிவு - நன்னயம் - நம்பிக்கை - கனிவு - தன்னடக்கம்.

  • கலா 5:9 -- "நன்மை செய்வதில் மனம்தளராதிருப்போமாக!"

அதிகாரம் 6:

  • கலா 6:15 -- "விருத்தசேதனம் செய்துகொள்வதும் செய்து கொள்ளாமல் இருப்பதும் ஒன்றே. புதிய படைப்பாவதே இன்றியமையாதது."

கலாத்தியர் திருமுகத்திலிருந்து ஒரு பகுதி தொகு

கலாத்தியர் 5:1-25


"கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்;
அதில் நிலைத்திருங்கள்.
மீண்டும் அடிமைத் தளை எனும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்...


அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்;
அந்த உரிமை வாழ்வு ஊனியல்பின் செயல்களுக்கு வாய்ப்பாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
'உன்மீது நீ அன்புகூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக'
என்னும் ஒரே கட்டளையில் திருச்சட்டம் முழுவதும் நிறைவு பெறுகிறது...


எனவே நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்;
அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்.
ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது.
இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால்
நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை.
நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால் திருச்சட்டத்திற்கு
உட்பட்டவர்களாய் இருக்க மாட்டீர்கள்...


ஆனால் தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி,
பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்.
இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை...
தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம்.
எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்."

கலாத்தியர் நூலின் உட்பிரிவுகள் தொகு

பொருளடக்கம் - பகுதிப் பிரிவு அதிகாரம் - வசனம் பிரிவு 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை
1. முன்னுரை

(வாழ்த்தும் நற்செய்தியும்)

1:1-10 328
2. நிகழ்ச்சிப் பகுதி:

பவுல் திருத்தூதராக அழைப்புப் பெறல்
எருசலேம் சங்கம்
பவுல் அறிவிக்கும் நற்செய்தி

1:11 - 2:21 346 - 348
3. கொள்கைப் பகுதி:

நம்பிக்கையால் இறைவனுக்கு ஏற்புடைமை ஆதல்

3:1 - 4:31 348 - 351
4. அறிவுரைப் பகுதி:

கிறிஸ்தவரின் உரிமை வாழ்வு
தூய ஆவியின் கனியும் ஊனியல்பின் செயல்களும்
அன்புப் பணிக்குச் சில நெறி முறைகள்

5:1 - 6:10 352 - 353
5. முடிவுரை 6:11-18 353 - 354

ஆதாரங்கள் தொகு

  1. கலாத்தியர்
  2. திருத்தூதர் பவுல்
  3. கத்தோலிக்க கலைக்களஞ்சியம் - கலாத்தியர்