கிழக்குப் பதிப்பகம்

கிழக்கு பதிப்பகம் 2004-ஆம் ஆண்டு பிப்ரவரி 1-இல் சென்னையில் தொடங்கப்பட்ட ஒரு தமிழ் புத்தகப் பதிப்பு நிறுவனம் ஆகும். பத்ரி சேஷாத்ரி, கே. சத்யநாராயண், ஆர். ஆனந்த்குமார் ஆகியோர் பதிப்புத் துறையின் மீதிருந்த ஆர்வத்தினால் இதனைத் தொடங்கினார்கள். பிரபல தமிழ் எழுத்தாளரும் பத்திரிக்கையாளருமான பா. ராகவன், தொடக்கம் முதல் 2011-ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை இதன் பதிப்பாசிரியராக இருந்தார். தற்போது இதன் பதிப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் இருப்பவர் பத்ரி சேஷாத்ரி.

கிழக்கு பதிப்பகம்
வகைநூல் பதிப்பு/வெளியீடு
நிறுவுகைசென்னை, இந்தியா (2004)
தலைமையகம்சென்னை, இந்தியா
உற்பத்திகள்நூல்கள், இதழ்கள்
சேவைகள்நூல் பதிப்பு/வெளியீடு, இலவச மென்பொருள்கள்
இணையத்தளம்www.nhm.in/kizhakku

தோற்றம் தொகு

பதிப்பகம் தொடங்கிய முதல் ஆண்டு ஐம்பது புத்தகங்கள் வெளியிடப்பட்டன. அடுத்த ஆண்டு (2005) மேலும் ஐம்பது புத்தகங்கள் வெளிவந்தன. இந்நூல்களுள் என். சொக்கன் எழுதிய ‘அம்பானி: ஒரு வெற்றிக்கதை’, சோம. வள்ளியப்பன் எழுதிய ‘அள்ள அள்ளப் பணம்’, பா. ராகவனின் ‘டாலர் தேசம்’ போன்றவை பெரும் வெற்றி கண்டன. [மேற்கோள் தேவை]

வளர்ச்சி தொகு

கிழக்கு பதிப்பகம் தொடங்கிய இரு ஆண்டுகளுக்குள் வரம் வெளியீடு, நலம் வெளியீடு, புரோடிச்சி (Prodigy) என்னும் மூன்று புதிய பதிப்புப் பிரிவுகள் நியூ ஒரைசன் மீடியா (New Horizon Media) நிறுவனத்தினால் தொடங்கப்பெற்றன. இவற்றின் மூலம் மெய்யியல், ஆன்மிகப் புத்தகங்களையும் மருத்துவ-உடல்நலன் சார்ந்த நூல்களையும் குழந்தைகளுக்கான புத்தகங்களையும் வெளியிடத் தொடங்கினார்கள்.

பிறகு ஆங்கிலத்தில் பதிப்புப் பிரிவு தொடங்கப்பட்டது. Indian Writing என்ற பெயரிலே சிறந்த தமிழ் நாவல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடத் தொடங்கினார்கள். இதன் தொடர்ச்சியாக புலரி என்ற பெயரில் மலையாளத்திலும் இந்நிறுவனம் புத்தகங்களை வெளியிடத் தொடங்கியது. 2009-ஆம் ஆண்டுக்குப்பிறகு மலையாளத்தில் புத்தகம் பதிப்பிப்பதை நிறுத்தியுள்ளனர். தொடங்கிய ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ ஆயிரம் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

வெளியீடுகள் தொகு

பல்வேறு துறைசார்ந்த நூல்களைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டு வருகின்றது. டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம், மாயவலை, விடுதலைப் புலிகள், பிடல் காஸ்டிரோ, அள்ள அள்ளப் பணம், அம்பானி: ஒரு வெற்றிக்கதை, கூகுளின் வெற்றிக்கதை, நாராயண மூர்த்தியின் வாழ்க்கை வரலாறு போன்றவை அவற்றில் சில. அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, மதன், கிரேசி மோகன் போன்றோரின் நூல்களையும் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

சிறுவர்களுக்காக வெளிவரும் புரோடிச்சி (Prodigy) பதிப்புகள் ஏறத்தாழ இருநூறு நூல்கள் வெளிவந்துள்ளன. புரோடிச்சி வெளியீட்டின் சார்பில் மேதை என்னும் மாத இதழும் வெளியிடப்படுகின்றது. நியூ ஹொரைசானின் மினிமேக்ஸ் வெளியீட்டின் மூலம் சமையல் புத்தகங்கள், அரசியல் மற்றும் நடப்பு சம்பந்தமான குறு நூல்கள் பதிப்பக்கப்படுகின்றன. தமது வெளியீடுகளில் சிறந்தவையாகக் கருதுபவற்றை ஒலிப்புத்தகங்களாகவும் கிழக்கு பதிப்பகம் வெளியிடுகின்றது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்குப்_பதிப்பகம்&oldid=3907832" இலிருந்து மீள்விக்கப்பட்டது