சங்கர்லால் சாத்திரி

இந்திய எழுத்தாளர்

சங்கர்லால் கங்காசங்கர் சாத்திரி (Shankarlal Gangashankar Shastri) (2 மே 1902 - 1 ஜூன் 1946) ஒரு குஜராத்தி இலக்கிய விமர்சகரும் மற்றும் சிறுகதை எழுத்தாளரும் ஆவார். இவர் அரிபிரசாத் சாத்திரியின் மூத்த சகோதரரும் மற்றும் விராஜ்லால் சாத்திரியின் பேரனுமாவார்.

சுயசரிதை தொகு

சாத்திரி சதோதரா நகர் பிராமண குடும்பத்தில் 2 மே 1902 அன்று பம்பாய் மாகாணத்தில் உள்ள நாடியாத் அருகே உள்ள சுனெல் என்ற கிராமத்தில் பிறந்தார். [1] இவர் ஒரு மருத்துவரும் மற்றும் சடங்கு நெறியாளரான கங்காசங்கர் சாத்திரியின் இரண்டாவது மகன். இவரது இளைய சகோதரர் அரிபிரசாத் சாஸ்திரியும் ஒரு குஜராத்தி எழுத்தாளர், வரலாற்றாசிரியர் மற்றும் இந்தியவியலாளர் ஆவார். [2]

சாத்திரி தனது ஆரம்பக் கல்வியை மலதாஜிலும், இடைநிலைக் கல்வியை சோஜித்ராவிலும் முடித்தார். 1919 இல் மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்ற பிறகு, குஜராத் கல்லூரியில் சேர்ந்தார். அதில் 1923 இல் இளங்கலை பட்டமும், 1925 இல் சமசுகிருதம் மற்றும் குஜராத்தி பாடங்களில் முதுகலைப் பட்டமும் பெற்றார். இவர் 1929 இல் இளங்கலை சட்டப் பட்டமும் பெற்றுள்ளார். [1] [3]

சாத்திரி நாடியாத்தின் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் அகமதாபாத்தில் உள்ள புரொபிரைட்டரி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று, அங்கு நான்கு ஆண்டுகள் கற்பித்தார். இடைவிடாமல் வழக்கறிஞராகப் பணியாற்றிய பிறகு, 1932 இல் ஜூனாகத் பகாவுதீன் கல்லூரியில் சமசுகிருதம் மற்றும் குஜராத்தி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அங்கு இவர் பதினான்கு ஆண்டுகள் கற்பித்தார். [1] [3]

இறப்பு தொகு

இவர் 1 ஜூன் 1946 அன்று இறந்தார். [1] [3]

பணிகள் தொகு

சாத்திரி, சாகித்யனே ஓவரெத்தி (1938) என்ற நூலை இரண்டு தொகுதிகளாக எழுதினார். தொகுதி ஒன்று சில முக்கிய குஜராத்தி எழுத்தாளர்களின் அவதானிப்புகள் மற்றும் மதிப்பீடுகளை வழங்குகிறது. தொகுதி இரண்டில் இடைக்கால மற்றும் நவீன எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளன. இவர் சாகித்யத்ரஷ்டனே (1941) என்ற நூலை இரண்டு தொகுதிகளில் எழுதினார்; முதல் தொகுதி பொது இலக்கிய தலைப்புகளை விளக்குகிறது. இரண்டாவது பிரேமானந்த் முதல் ஜன்மசங்கர் புச் 'லலித்' வரையிலான குஜராத்தி எழுத்தாளர்களின் ஆய்வை வழங்குகிறது. [1] [3]

பனாதனி (1941) என்ற சிறுகதைகளின் தொகுப்பை வெளியிட்டார். சாத்திரி தனது தாத்தா விராஜ்லால் சாத்திரியின் ரசகங்காஎன்ற வெளியிடப்படாத புத்தகத்தை 1934 இல் தொகுத்து வெளியிட்டார். [1] [3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Shastri, Hariprasad (April 2006). Thaker, Dhirubhai (ed.). ગુજરાતી વિશ્વકોશ (in குஜராத்தி). Vol. XXI (1st ed.). Ahmedabad: Gujarat Vishvakosh Trust. p. 310. இணையக் கணினி நூலக மைய எண் 162213102.
  2. Gazetteers: Kheda District. Directorate of Government Print., Stationery and Publications. இணையக் கணினி நூலக மைய எண் 312722922.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Shastri, Hariprasad. Topiwala, Chandrakant (ed.). ગુજરાતી સાહિત્યકોશ: અર્વાચીનકાળ (in குஜராத்தி). Vol. II (1st ed.). Ahmedabad: Gujarati Sahitya Parishad. இணையக் கணினி நூலக மைய எண் 312020358.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்லால்_சாத்திரி&oldid=3827016" இலிருந்து மீள்விக்கப்பட்டது