சங்கர் குஹா நியோகி

சங்கர் குஹா நியோகி (Shankar Guha Niyogi, பிப்ரவரி 14, 1943 - செப்டம்பர் 28, 1991) சத்தீசுக்கர் மாநிலம், தல்லி ராஜ்ஹாரா சுரங்க நகரில் சத்தீசுக்கர் முக்தி மோர்ச்சாவை உருவாக்கி வழி நடத்தியவர். 1977 முதல் அவர் உயிரிழந்த 1991 வரையிலான 14 ஆண்டுகள் அந்த நகரில் சுரங்கத் தொழிலாளர் இயக்கத்தை நடத்தினார்.

சங்கர் குஹா நியோகி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
தீரேஷ் குஹா நியோகி

பிப்ரவரி 14, 1943
ஜல்பாய்குரி
இறப்புசெப்டரபர் 28 28, 1991
பிலாய், சத்திஸ்கர்
தேசியம்இந்தியன்

இளமை வாழ்க்கை தொகு

தீரேஷ் குஹா நியோகி 1943ம் ஆண்டு ஜல்பாய்குரி, வங்காளத்தில் பிறந்தார். குழந்தை பருவத்தில் அசாம் மாநிலத்தின் வனப் பகுதிகளில் வசித்தார். கல்கத்தாவிலும் பின்னர் ஜல்பாய்குரியிலும் பள்ளிப் படிப்பை முடித்தார். நியோகி பிலாய் உருக்குத் தொழிற்சாலையில் பணிக்குச் சேர்ந்து வேலை செய்து கொண்டே படித்து இளமாணிப் பட்டம் பெற்றார். 1964-65-ல் தொழிற்சங்க பணிகளில் ஈடுபட ஆரம்பித்து, பிளாஸ்ட் பர்னஸ் செயல் குழுவின் செயலாளர் ஆக பணியாற்றினார்.

அரசியல் தொடர்புகள் தொகு

நியோகி இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா-லெ) இன் முன்னோடியான கம்யூனிஸ்டு புரட்சியாளர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவுடன் தொடர்பு வைத்திருந்தார். அவரது அரசியல் நடவடிக்கைகளின் காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டார். குறுகிய காலத்துக்கு இந்திய பொதுவுடமைக் கட்சி (மா-லெ) கட்சியில் சேர்ந்து தலைமறைவாக வேலை செய்த பிறகு கட்சியை விட்டு விலகி தன்னிச்சையாக செயல்பட ஆரம்பித்தார்.

தொழிலாளர் வாழ்க்கையும் போராட்டங்களும் தொகு

வடக்கு பஸ்தரில் காட்டு வேலை, துர்க் மாவட்டத்தில் மீன் பிடித்து விற்கும் வேலை, கேரி ஜூங்காதாவில் விவசாய வேலை, ராஜ்நந்தகாவில் ஆடு மேய்த்தல் என்று பலவிதமான வேலைகள் செய்து வாழ்ந்து வந்தார். பஸ்தர் பகுதி ஆதிவாசிகளின் போராட்டம், ராஜ்நந்தகாவில் மோங்க்ரா அணைக்கு எதிரான கிளர்ச்சி, தாய்ஹந்த் மக்களின் தண்ணீருக்கான போராட்டம் இவற்றின் மூலம் மக்கள் இயக்கங்களைப் பற்றிய பாடங்களைக் கற்றுக் கொண்டார்.

தானி தோலாவின் க்வார்ட்சைட் சுரங்கங்களில் வேலை செய்யும் போது சுரங்கத் துறை மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுடனான அவரது நீண்டகால தொடர்பு ஆரம்பித்தது. இங்கு ஆஷா என்ற சுரங்கத் தொழிலாளியை சந்தித்து திருமணம் செய்து கொண்டார். சுரங்கத் தொழிலாளர்களை ஒன்று திரட்டும் அவரது நடவடிக்கைகள் காரணமாக 1975-ல் நெருக்கடி நிலை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டு பிறகு வெளியில் வந்தார்.

தல்லி ராஜ்ஹாராவுக்கு குடி பெயர்ந்து சத்திஸ்கர் சுரங்கத் தொழிலாளர் சங்கத்தை (CMSS – சத்திஸ்கர் மைன்ஸ் ஷ்ராமிக் சங்) உருவாக்கினார்.

பஸ்தர் மாவட்ட வளர்ச்சி தொகு

சத்திஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தின் வடக்கில் துர்க் மாவட்டத்தின் தென்பகுதியை உள்ளடக்கிய பகுதி அடர்ந்த காடுகளைக் கொண்டிருந்தது. பொருளாதார வளர்ச்சித் திட்டங்களின் பகுதியாக இந்திய ஜியாலஜிகல் சர்வே அதிகாரிகள் இந்தப் பகுதியில் இரும்புத் தாது செறிவு அதிகம் என்று கண்டுபிடித்தார்கள்.

  • ஆசியாவின் அதிக இரும்பு தாது உற்பத்தி செய்யும் சுரங்கம் ஒன்று தோண்ட ஆரம்பிக்கப்பட்டது.
  • லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டன. பல மர அறுவை ஆலைகள் தொடங்கப்பட்டன.
  • ராஜ்ஹராவின் இரும்புத் தாது சுத்திகரிக்கப்பட்டு பிலாய் ஆலையில் எஃகாக மாற்றப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து சிமென்ட் ஆலை நிறுவப்பட்டது. சிமென்ட் தூசி மழை விளைநிலங்களின் மீது படிந்து விவசாயத்தை பாதித்தது.
  • புதிதாக திறக்கப்பட்ட டிஸ்டிலரியிலிருந்து அழுகும் மொலாசஸின் காற்று மண்டலத்தை மாசு படுத்தியது.

போராட்ட அமைப்புகள் தொகு

பிரச்சனைகளை எதிர் கொள்ள சத்திஸ்கர் விடுதலை முன்னணி (CMM- சத்திஸ்கர் முக்தி மோர்ச்சா) ஆரம்பிக்கப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர்களை விடுவிப்பதற்கான போராட்டத்துக்காக சத்திஸ்கர் கிராம தொழிலாளர்கள் சங்கம் (சத்திஸ்கர் கிராமீன் ஷ்ராமிக் சங் – CGMS) ஆரம்பிக்கப்பட்டது. சிஎம்எம்எஸ், சிஎம்எம், சிஜிஎம்எஸ் மூன்றும் இணைந்து பல போராட்டங்களை முன்னெடுத்தன.

நியோகியின் வழிகாட்டலில் CMMS, CMM, CGMS அமைப்புகள் தொழிலாளர்களின் பணிச் சூழல் தொடர்பான பிரச்சனைகளுக்காக மட்டுமின்றி, தொழிலாளர் வாழ்க்கையை பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்காக போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டன.

முக்கிய பணிகள் தொகு

தொழிலாளர் பொருளாதார/குடும்ப நலனுக்கான பணிகள் தொகு

  1. சுரங்கத் தொழிலாளர்களின் நாட்கூலி 3 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக அதிகரித்து 1990களில் 70 ரூபாய் வரை உயர்ந்தது.
  2. தொழிலாளர்கள் மத்தியில் குடிப்பழக்கத்தை ஒழிக்க தீவிரமான மது எதிர்ப்புப் போராட்டத்தை தொழிற்சங்கம் முன்னெடுத்தது. இதில் பெருமளவு பெண்கள் பங்கேற்றார்கள்.
  3. ஆயிரக்கணக்கான பெண்கள் ஒன்று திரட்டப்பட்டு, அதன் தலைமைப் பொறுப்புகளிலும் தீவிரமாக பங்கு பெறுகிறார்கள்.

குடியிருப்புகளில் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்கான போராட்டங்கள் தொகு

  1. சிஎம்எம்எஸ் தொழிலாளர்கள் ‘நல்ல உடல் நலனுக்காக போராடுவோம்’ என்ற இயக்கத்தை மேஜிக் நிகழ்ச்சிகள், தெரு நாடகங்கள், சிறு புத்தகங்கள், உரைகள் போன்ற பல நிகழ்வுகள் மூலம் முறைசாரா தொழிலாளர்கள், ஆதிவாசிகள் மற்றும் விவசாயிகளுடன் சேர்ந்து நடத்தினார்கள்.
  2. தொழிற்சங்க உறுப்பினர்களின் சேமிப்பு மற்றும் உழைப்பில் ஒரு மருத்துவமனை கட்டப்பட்டது. 50 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் நவீன ஆபரேஷன் தியேட்டரும் மகப்பேறு பிரிவும் இருக்கிறது.
  3. தொழிற்சங்கம் குறைந்தது 6 பள்ளிக் கட்டிடங்கள் கட்டி அரசுப் பள்ளிகளுக்கு கொடுத்திருக்கிறது. தொழிற்சங்கமே ஒரு ஆரம்ப பள்ளியை நடத்தி வருகிறது.
  4. சுரங்கத் தொழிலாளர்களின் சேரிகளுக்கு குப்பை வாருதல் போன்ற அடிப்படை சேவைகளை வழங்குவதற்கு அரசு அமைப்புகள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தொழிற்சங்கத்தின் கோரிக்கைகள் பலமுறை நிராகரிக்கப்பட்ட பிறகு, குப்பைகள் லாரிகளில் அள்ளி அதிகாரிகள் குடியிருக்கும் பகுதிகளில் கொட்டும் போராட்டத்தில் இறங்கினார்கள். தொழிலாளர் சேரிகளை தூய்மையாக வைத்துக் கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்வது வரை இந்தப் போராட்டம் நீடிக்கும் என்று அறிவித்தார்கள்.

வன வளங்களை பராமரித்தல் தொகு

  1. ஒரு மரம் வெட்டும் ஆலை அந்த பகுதியில் இருக்கும் எல்லா தேக்கு மரங்களையும் வெட்டிக் கொண்டிருந்தது. கிராம மக்கள் காவல்துறையிலும், வனத்துறைக்கும், அரசியல்வாதிகளுக்கும் புகார் அளித்தார்கள். யாரும் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஒரு சில தேக்கு மரங்களை தடபுடலாக நடுவதற்கு ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்படி தொழிற்சங்கம் ஆலோசனை வழங்கியது. அங்கு கூடிய மக்கள் பெருந்திரள் எதிர்ப்பின் பலத்தைக் காட்டுவதாக அமைந்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தேக்கு திருடர்கள் திரும்பி வரவேவில்லை.
  2. அரசின் வனக் கொள்கையின் கீழ், யூகலிப்டஸ், நீல்கிரி மற்றும் பைன் மரங்கள் அவற்றின் தொழில்துறை பயன்பாட்டுக்காக பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய ஒற்றை மரப் பண்ணைகள் ஏற்படுத்தும் விளைவுகளை விரிவாக விவாதித்த தொழிற்சங்கம் அவற்றுக்கு எதிராக போராடியது.
  3. நமது காட்டை அறிவோம் என்ற திட்டத்தின் கீழ் தொழிற்சங்கம் தொழிற்சங்க அலுவலகத்துக்கு அருகில் ஒரு சிறு காட்டுப் பகுதியை வளர்த்தது. பல வகையான மரங்கள் அங்கு நடப்பட்டுள்ளன.
  4. ‘நமது காட்டை அறிவோம்’ திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்ட மரங்களில் அவற்றின் வட்டார பெயர், இந்தி பெயர் மற்றும் தாவரவியல் பெயர்களை தரும் சிறு அடையாள பலகைகள் பொருத்தப்பட்டடன. பல்வேறு மர இனங்களை ஒன்றொடு ஒன்று தொடர்புபடுத்தும் தாவரவியல் குடும்பங்கள் பற்றிய விபரங்களும் திரட்டப்பட்டன. இது மரங்களைப் பற்றிய முழுமையான புரிதலுக்கு உதவியது. குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் தாம் பள்ளியில் கற்றதை விரிவுபடுத்தி அறிந்து கொள்ள உதவியாக இருந்தது.
  5. ஒவ்வொரு மரத்தின் உபயோகங்களையும் ஒவ்வொன்றும் எவ்வளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது போன்ற விபரங்கள் அடங்கிய சிறு புத்தகங்களை வெளியிட தொழிற்சங்கம் திட்டமிட்டது.

நீர்வளம் தொகு

  1. பெரிய அணைகள் காட்டின் பெரும் பகுதிகளை மூழ்கடித்து குறிப்பிட்ட சூழலில் மட்டும் வளரும் பல அரிய மரங்களை அழித்து விடுகின்றன. இந்தக் காரணத்தினால், சிஎம்எம்எஸ் போத்காட் அணையை எதிர்த்தது. ராஜ்நந்த்காவ்வில் மோங்க்ரா அணை கட்டப்படுவதை தொழிற்சங்கம் எதிர்த்தது.
  2. பெரிய அணை திட்டங்களை போல இந்த சிறிய தடுப்பணைகள் கட்டுவது வனத்துறை அலுவலர்களுக்கு எந்த ஆதாயத்தையும் தரப்போவதில்லை. இருப்பினும், துய்கோடி, ஜூகேரா போன்ற இடங்களில் சிறு அணைகள் கட்ட வைப்பதில் தொழிற்சங்கம் வெற்றி பெற்றது.
  3. இரும்புத் தாது சுரங்கங்களிலிருந்து வடியும் மழை நீர் தாதுவின் நுண்ணிய படிவுகளை சுற்றியிருக்கும் பகுதிகளில் கொண்டு வருகிறது. மண்ணின் மேல் அடுக்கில் அது பரவி நிலத்தின் உற்பத்தித் திறனை அழித்து விடுகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு போராடி தொழிற்சங்கம் வெற்றி பெற்றது.
  4. தல்லி-ராஜ்ஹரா பகுதி வாழ்க்கை தல்லி மற்றும் ஜாரன் நீரோடைகளை சார்ந்தே பல நூற்றாண்டுகளாக நடந்து வந்தது. இந்த நீரோடைகள் மாசுபடுத்தப்பட்ட போது தொழிற்சங்கம் அந்த பிரச்சனையை முன்னெடுத்து, அதிகாரிகளை நடவடிக்கை எடுக்கக் கோரி ஓரளவு பலன்களை ஈட்டியது. இன்று இந்த நீரோடைகளின் நீர் இரத்த நிறத்தில் இல்லாமல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கிறது.
  5. தல்லி-ராஜ்ஹரா பகுதியில் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் 89 ஆழ்துளை கிணறுகள் அமைக்கக் கோரி தொழிற்சங்கம் வெற்றி கண்டது. சுற்றியிருக்கும் கிராமப் புறங்களிலும் அதே போன்ற குடிதண்ணீர் வசதிகளை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறது.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு தொகு

  1. சிஎம்எம்எஸ் தொழிலாளர்கள், ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள ஓட்டைகள், வளிமண்டலத்தில் நச்சு வாயுக்கள் அதிகரித்திருப்பது, காற்றில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே போவது போன்ற கவலை தரும் செய்திகளைத் திரட்டி விவாதித்து வருவது வழக்கம். தமது கிராமங்களில், சாங்கினி ஆறும் தல்லி சுரங்கங்களில் இருந்து வரும் சிறு நீரோடையும் அதிக இரும்புத் தாது கலப்பால் ரத்தச் சிவப்பாக மாறி விட்டதை அவர்கள் கவனித்து வந்தார்கள். டிஸ்டிலரி, உருக்கு ஆலை, மற்றும் உர தொழிற்சாலையிலிருந்து வரும் கழிவு நீர் காரூன் ஆற்று நீரையும் ஷிவ்நாத் ஆற்று நீரையும் நச்சுப்படுத்திக் கொண்டிருந்தன.
  2. பல விவாதங்களுக்குப் பிறகு சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வன வளங்களை பராமரித்தல், நீள் வளங்களை மாசுபடாமல் பாதுகாத்தல் இவற்றைத் தழுவி ஒரு செயல் திட்டம் வகுக்கப்பட்டது. காடுகளின் உரிமையாளர்களான ஆதிவாசிகளின் நலன்களை கணக்கில் எடுத்துக் கொண்டு வனத்துறை சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. வனத்துறை அதிகாரிகளின் திறமையின்மை, பொறுப்பின்மை, ஊழல் இவற்றையும் அம்பலப்படுத்தி அவற்றை சரி செய்வதற்கான வழிமுறைகளையும் வலியுறுத்தியது.
  3. தல்லி-ராஜ்ஹரா பகுதி தொழிலாளர்கள் பதினைந்து ஆண்டுகள் முன்பு நாளைக்கு 3 ரூபாய் சம்பாதித்தபோது அதிக ஓசை பற்றிய சமூக சிக்கல் இல்லாமல் இருந்தது. தொழிற்சங்கத்தின் தொடர்ந்த போராட்டங்கள் கூலியை உயர்த்துவதில் வெற்றியடைந்தன. வருமானம் அதிகரித்ததும், மக்கள் ஒலிபெருக்கிகளை அடிக்கடி பயன்படுத்த ஆரம்பித்தார்கள். அதிக ஓசையின் தீங்குதரும் விளைவுகள் பற்றிய பொது விழிப்புணர்வை உருவாக்குவதற்கு தனது குடியிருப்புப் பகுதி குழுக்கள் மூலம் தொழிற்சங்கம் போராடி வருகிறது. ஷாகீத் மருத்துவமனையின் சுகாதார பணியாளர்கள் ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதை குறைக்கும் இந்த இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.
  4. தெஹரியில் இயற்கையின் எதிரிகள், இயற்கையின் சமநிலையையும் ஒத்திசைவையும் அழிப்பதற்கு முயன்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சுந்தர்லால் பகுகுணாவின் பணியை மதிக்கவும் பகிர்ந்து கொள்ளவும் செய்யும் சிஎம்எம்எஸ் அவருக்கு ஆதரவைத் தெரிவித்தது. சிப்கோ இயக்கம் அவர்களுக்கு பெரும் ஊக்கம் அளித்தது.
  5. ‘அணைகள் வேண்டாம்’ இயக்கம் நர்மதா பள்ளத்தாக்கில் ஆரம்பித்தவுடன் சத்திஸ்கர் மக்கள் அங்கு போய் பாபா ஆம்தே தலைமையிலான போராட்டத்தில் முழு மனதுடன் கலந்து கொண்டார்கள்.

தொழிற்சாலைகளில் போராடி பெற்ற வெற்றிகள் தொகு

  1. பிலாய் ஸ்டீல் தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்த சுற்றுச் சூழல் விழிப்புணர்வை புறக்கணிக்க முடியவில்லை. செப்பனிடப்படாத சாலைகளிலிருந்தும் புறக்கணிக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் நுண்ணிய தூசி காற்றில் பறந்து கொண்டே இருந்தது. பல தொழிலாளர்கள் சிலிகோசிஸ் நோயால் பீடிக்கப்பட்டிருந்தது மருத்துவ சோதனைகளில் தெரிய வந்தது. நிர்வாகம் இந்த பிரச்சனைக்கு ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரியது. ராஜ்நந்த்காவ் டெக்ஸ்டைல் ஆலையிலும் தொழிற்சங்கம் இது போன்ற சிறப்பு முயற்சிகளை எடுத்தது. தல்லி-ராஜ்ஹரா பகுதியில் இருக்கும் சுரங்கங்களிலும் சாலைகளிலும் நிர்வாகம் தண்ணீரைத் தெளித்து பறக்கும் தூசியை கட்டுப்படுத்துகிறது.
  2. பணியிடத்தில் அதிக ஓசையால் கேட்கும் திறன் பாதிக்கப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களுக்கு தொழிற்சங்கத்தின் முயற்சியால் ஈஎன்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
  3. பிலாய் ஸ்டீல் ஆலை போன்ற பெரிய தொழில் நிறுவனங்களில் இப்போது ‘சுற்றுச் சூழல் துறைகள்’ தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  4. சிம்ப்ளக்ஸ் எஞ்சினியரிங், வி கே எஞ்சினியரிங் போன்ற தனியார் நிறுவனங்கள் மரம் நடுவதற்காக அரசாங்கத்திடமிருந்து நிலத்தைப் பெற்றுக் கொண்டு, மெதுவாக நிலங்களை தமது தனிப்பட்ட பயன்பாட்டுக்கு மாற்றிக் கொள்கின்றனர். இது போன்ற ஊழலுக்கு எதிராக தொழிற்சங்கம் தீவிரமாக போராடுகிறது.
  5. பிலாய் ஸ்டீல் ஆலையின் நிர்வாகம் தல்லியில் சுரங்கங்களை எந்திரமயமாக்க திட்டமிட்ட போது, அது சுற்றுச் சூழலுக்கு பலனுள்ளதாக இருக்கும் என்று சொன்னார்கள். அவர்களது கூற்றுகள் பொய்யானது என்று தொழிற்சங்கம் நிரூபிக்க முடிந்தது.

தாக்குதல்களும் மரணமும் தொகு

நியோகி, 1991-ல் பிலாய்-ராய்பூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலை தொழிலாளர்களை திரட்டும் பணியில் இறங்கினார். தொழிலாளர்கள் மீது வன்முறை தாக்குதல்கள் அதிகரித்தன. 1991 செப்டம்பர் 28ஆம் தேதி அதிகாலையில் பிலாயில் உள்ள சிஎம்எம்எஸ் அலுவலகத்தின் ஜன்னல் வழியாக நுழைந்த பல்தான் மல்லா என்ற வாடகை கொலையாளி சங்கர் குஹா நியோகியின் மீது 6 குண்டுகளை சுட்டான்.

அவர் கொல்லப்பட்ட சில மணி நேரத்துக்குள் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் கூடினார்கள். சத்திஸ்கர் பகுதியில் 150 தொழிற்சாலைகளை சேர்ந்த 2 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தார்கள். ஒன்றரை லட்சம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.

விசாரணை தொகு

முன்னாள் பஞ்சாப்/ஹரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி எஸ் தெவதியா, மூத்த பத்திரிகையாளரும் முன்னாள் இந்திய தூதருமான குல்தீப் நய்யார், பிரபல நாடக கலைஞர் விஜய் டெண்டுல்கர், கல்வியாளரும் சமூக ஆர்வலருமான அனில் சடகோபல், உச்ச நீதி மன்ற வழக்கறிஞர் ராகேஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய பொதுமக்கள் குழு நியோகி கொலை செய்யப்பட்ட சூழலை பற்றி விசாரித்து தயாரித்த அறிக்கையில், “தமது தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளும், குறைந்தபட்ச கூலியும் வழங்குவதற்கு கூட மறுக்கும் வலிமையான தொழிலதிபர்களின் கூட்டமைப்பு செயல்படும் பகுதியில் யாரும் அதைத் தட்டிக் கேட்க துணியாத நிலையில் தன்னை அந்த பொறுப்பில் ஈடுபடுத்திக் கொண்டதுதான் நியோகி கொல்லப்பட்டதற்கு காரணம்” என்று குறிப்பிட்டார்கள்.

நியோகி கொலையில் தொடர்பு உடையவர்களாக 9 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. சிம்ப்ளக்ஸ் நிறுவன உரிமையாளர் மூல்சந்த் ஷா, ஆஸ்வால் நிறுவனத்தின் உரிமையாளர் சந்திரகாந்த் ஷா என்ற இரண்டு தொழிலதிபர்களும் அவர்களில் அடங்குவார்கள். மாவட்ட நீதிமன்றம் வாடகைக் கொலையாளிக்கு (பல்தன் மல்லா) மரண தண்டனையும், தொழிலதிபர்கள் உள்ளிட்ட இன்னும் 5 பேருக்கு (ஞான பிரகாஷ் மிஸ்ரா, அபய் சிங்க், அவதேஷ் ராய்) ஆயுள் தண்டனையும் வழங்கியது. தொழிலதிபர்கள் இருவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.

கோரக்பூரைச் சேர்ந்த பல்தான் மல்லா ஒரு வாடகைக் கொலையாளி என்று நிரூபிக்கப்பட்டிருந்தது. "எந்த விதமான தனிப்பட்ட விரோதம் இல்லாமல், பணத்திற்காக மட்டுமே எந்த பாதுகாப்பும் இல்லாமல் இருந்த நியோகியை கொன்றதன் மூலம் அவருடைய குடும்பத்துக்கு மட்டுமில்லாமல் நமது சமூகத்தின் அடிப்படையான ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கும் பெரும் தீங்கு செய்திருந்தான் பல்தான் மல்லா." இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு இந்த வழக்கை, ‘அரிதிலும் அரிதான ஒன்றாக’ கருதி மரண தண்டனை விதிப்பதாக நீதிபதி தீர்ப்பு சொல்லியிருந்தார்.

ஆனால், உயர்நீதி மன்றம் போதுமான ஆதாரம் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்தது. சிபிஐயும் மத்திய பிரதேச அரசாங்கமும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

துர்க் மாவட்டத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்தி வந்த சந்திரகாந்த் ஷா, அபய் சிங், மூல்சந்த் ஷா ஆகியோர், நியோகியின் தொழிற்சங்க நடவடிக்கைகளால் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தனர் என்பதற்கும் அவர்களது தொழில்களுக்கு பெரும் பண இழப்பு ஏற்பட்டிருந்தது என்பதற்கும் சிபிஐ விரிவான ஆதாரங்களை கூடுதலாக சமர்ப்பித்தது. ஆனால் உச்சநீதிமன்ற தீர்ப்பு உயர்நீதி மன்ற தீர்ப்பை பெரிதளவு மாற்றி விடவில்லை. வாடகைக் கொலையாளிக்கு மட்டும் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. செல்வாக்கு தொழிலதிபர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.[1][2]

மேற்கோள்கள் தொகு

  1. "Justice Mocked". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2012-05-11.
  2. "A Verdict and Some Questions".[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கர்_குஹா_நியோகி&oldid=3552592" இலிருந்து மீள்விக்கப்பட்டது