சாதகக் குறிப்பு

சோதிடம் தொடர்பில், சாதகக் குறிப்பு (Horoscope) என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அண்ட வெளியிலுள்ள சில கோள்களினதும், நட்சத்திரங்களினதும் சரியான நிலைகளைக் காட்டுகின்ற ஓர் ஆவணமாகும். இது பொதுவாக ஒரு வரைபட வடிவில் இருக்கும். ஒரு குழந்தை பிறக்கும் போது குறிக்கப்படும் சாதகம், அப்பிள்ளையின் சாதகக் குறிப்பு ஆகும். இது தவிர உலகில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் சாதகம் குறிக்க முடியும்.

சாதகக் குறிப்பின் அடிப்படையான உறுப்பு இராசிச் சக்கரமேயானாலும், பாவச் சக்கரம், நவாம்சச் சக்கரம், திசை, புத்தி முதலான பல்வேறு வகையான அம்சங்களைச் சாதகக் குறிப்பில் காண முடியும். ஒரு சாதகர் பற்றிய அல்லது ஒரு நிகழ்வு பற்றிய பகுப்பாய்வுகள் செய்யப்படும் போது சம்பந்தப் பட்ட சாதகக் குறிப்பே அடிப்படையாக அமைகின்றது.

இன்னொரு வகையில், சோதிடப் பகுப்பாய்வு, பலன் சொல்லுதல் போன்றவற்றைப் பொறுத்தவரை, அறிவியல் சார்ந்த வானியலுக்கும், அறிவியல் சாராத சோதிடத்துக்கும் நடுவிலுள்ள இடைமுகமே சாதகக் குறிப்பு எனலாம். இது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கான வானியல் தரவுகளைத் தருவது மட்டுமன்றி இதன் வரைபட வடிவம் இத் தரவுகளின் சோதிட இயல்புகளைப் புரிந்து கொள்வதையும் இலகுவாக்குகின்றது.

இராசிச் சக்கரம் தொகு

சாதகக் குறிப்பில் காணும் இராசிச் சக்கர வரைபடங்கள் பல்வேறு வகையில் வரையப் படுகின்றன. மேற்கத்திய சோதிடர்கள் இதனை வட்டமாக வரைவார்கள். இந்தியாவில் சதுர வடிவில் வரைவதே வழக்கமானாலும் தென்னிந்திய, வட இந்திய வரைபடங்களிடையே வேறுபாடுகளைக் காணலாம். மேற் கூறப்பட்ட மூன்று வகையான இராசிச் சக்கர அமைப்புகளையும் கீழேயுள்ள படங்கள் காட்டுகின்றன.

 
மேற்கத்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
 
தென்னிந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்
 
வட இந்திய முறையில் வரையப் பட்டுள்ள இராசிச் சக்கரம்

ஒரு குழந்தையின் பிறப்பைக் குறித்த சாதகக் குறிப்பொன்றிலிருந்து அறியக் கூடிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. பிறந்த இடம், நேரம், தாய் தந்தையர் விபரங்கள்.
  2. குறிப்பிட்ட நேரத்தில் நட்சத்திரமும், இராசியும்.
  3. இராசிச் சக்கரத்தில் கிரக நிலைகள்
  4. இலக்கினம்
  5. திசை - புத்தி விபரங்கள்
  6. சாதகத்தில் கிரகங்களின் உச்சம், நீசம் பற்றிய விபரங்கள்

முதலியனவாகும்.

இவற்றில் கிரக நிலைகள், இலக்கினம் என்பன முன்னர் கூறிய வரைபடத்தில் காட்டப்படுகின்றன. இராசிச் சக்கர வரைபடத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் அதனைப் பார்த்து இவ்விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

சாதகத்தில் கிரகங்களும் அவற்றின் நிலைகளும் தொகு

பழைய காலத்தில் சூரியன், சந்திரன் என்பவற்றோடு கூட மேலும் 5 சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களையும் சேர்த்து ஏழு கிரகங்களுடன் இராகு, கேது ஆகிய இரண்டு நிழற் கிரகங்களும் இராசிச் சக்கரத்தில் காட்டப்படுவது வழக்கம். யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் அறியப்பட்ட பின்னர் சிலர் அவற்றையும் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். இராசிச் சக்கரத்தில் கிரகங்களின் பெயர்களை எழுதும் போது இரண்டு மூன்று எழுத்துக்களில் சுருக்கி எழுதுவதுண்டு. பழைய குறிப்புக்களில் வழக்கு மொழியிலில்லாத வட மொழிப் பெயர்களையே எழுதியிருப்பார்கள். இவற்றின் விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையிற் காணலாம்.

 
இராசிச் சக்கரம், எடுத்துக்காட்டு. இது இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியுடையது.
கிரகங்கள் - வழக்கு மொழி கிரகங்கள் - வட மொழி
முழுப் பெயர் சுருக்கம் முழுப் பெயர் சுருக்கம்
சூரியன் சூரி / சூ ரவி -
சந்திரன் சந் - -
புதன் புத / பு குஜன் குஜ
வெள்ளி வெள் / வெ சுக்கிரன் சுக் / சு
செவ்வாய் செவ் / செ - -
வியாழன் வியா / வி குரு -
சனி - சனி -
இராகு இரர ராகு ரா
கேது கே கேது கே

உள்ளிணைப்பு தொகு

ஜாதக யோகங்கள்

வெளி இணைப்பு தொகு

இலவச ஜாதக ஆராய்ச்சித் தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாதகக்_குறிப்பு&oldid=2740251" இலிருந்து மீள்விக்கப்பட்டது