சாரா பிஷப் (துறவி)

அமெரிக்கக் கடற்கொள்ளையர்

சாரா பிஷப் ( Sarah Bishop ) ( சுமார் 1759 – 1809 ) அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வசதியான செல்வந்தரின் மகளாவார். 1778-1780 ஆண்டுகளில் கடற்கொள்ளைக்காரியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[1] [2] சிலகாலம் கொள்ளையில் ஈடுபட்டுவந்த இவர் கப்பலிலிருந்து தப்பி, நீந்தி கரைக்கு வந்து, ஒரு குகையில் துறவியாக சுமார் முப்பது வருடங்கள் வாழ்ந்து இறந்து போனார்.[3]

சாரா பிஷப்
குகை வாயிலில் சாரா பிஷப் அமர்ந்திருப்பது போல வரையப்பட்ட ஒரு ஓவியம்.
பிறப்புஅண். 1759
நீள் தீவு, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
இறப்புஅண். 1809 (வயது 49-50)
ரிட்ஜ்ஃபீல்ட், கனெக்டிகட், அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
கல்லறைஜூன் சாலை கல்லறை(வடக்கு சேலம், நியூயார்க்கு)
அறியப்படுவதுகனெக்டிகட்டின் ரிட்ஜ்ஃபீல்டில் வாழ்ந்து, சிலகாலம் கடற்கொள்ளையராகப் பணிபுரிந்த நன்கு அறியப்பட்ட துறவி.

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சாரா பிஷப் நியூயார்க்கில் உள்ள நீள் தீவில் 1759 இல் பிறந்தார். இவர் ஒரு வசதியான மற்றும் நன்கு படித்த குடும்பத்தின் உறுப்பினராக இருந்தார். அமெரிக்கப் புரட்சிப் போரின் போது, இவரது குடும்பத்தின் மாளிகை பிரித்தானியப் படையெடுப்பால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டது. [3]

திருட்டு வாழ்க்கை தொகு

இறுதியில் 1778 இல் பிரித்தானிய படையணியால் பிடிக்கப்பட்டு அவர்களது தனிப்பட்ட கப்பலில் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டார். கப்பலை இயக்கும் குழுவிற்குள் இவர் பணியமர்த்தப்பட்டார். கப்பல் இயந்திரத்தின் சக்கரத்தை இயக்குதல், சமைத்தல் மற்றும் கடலை மேற்பார்வையிடுதல் போன்ற பணிகள் இவருக்கு வழங்கப்பட்டன. கூடுதலாக, இவர் குழுவினருடன் பாலியல் நடவடிக்கைகளுக்கும் ஆளாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.[4]

பின்னர் சாரா பிஷப், கப்பல் தலைவனின் மனைவியானார். இது இவரை குழுவில் வரம்பிற்குட்படுத்தியது. இறுதியில், கப்பல் தலைவன் ஒரு அமெரிக்கக் கப்பல் தாக்குதலில் கொல்லப்பட்டார். பின்னர் அங்கிருந்து தப்பிக்கும் திட்டத்தை உருவாக்க ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டார். ஒரு நல்ல தருணத்திற்காக காத்திருந்தார். மேலும் 1780 இல், இவர் கடலுக்குள் குதித்து கனெக்டிகட்டின், ஸ்டாம்ஃபோர்ட் கடற்கரையை நோக்கி நீந்தினார். [2] அங்கிருந்து தப்பி ரிட்ஜ்ஃபீல்ட், கனெடிகட் மற்றும் நியூயார்க்கின் வெஸ்ட்செஸ்டர் கவுண்டிக்கு அருகிலுள்ள மலைகளுக்குச் சென்றார். அங்கு இவர் ஒரு பாறை பிளவுகளில் தங்கினார்.[5]

துறவி வாழ்க்கை தொகு

 
சாரா பிஷப்பின் குகையில் ஒரு பெண். 1900 இல் மேரி ஹார்டிக் கெண்டால் என்பவர் எடுத்த புகைப்படம்

சாரா பிஷப் நியூயார்க்கில் வடக்கு சேலத்திற்கும் தெற்கு சேலத்திற்கும் இடையில் வாழ்ந்ததாக சில ஆதாரங்கள் கூறுகின்றன. தெற்கு சேலத்தின் நகர வரலாற்றாசிரியர் பெட்டி ராபர்ட்ஸின் கூற்றுப்படி, "அவள் ஒரு மர்மம், அதுவே அவளை கொஞ்சம் வித்தியாசமாக ஆக்குகிறது என்று நினைக்கிறேன்." சாரா, கனெக்டிகட், வெஸ்ட் மவுண்டின் அருகிலுள்ள பகுதியில் வாழ்ந்ததாக மற்ற ஆதாரங்கள் கூறுகின்றன.[6]

வாழ்க்கை தொகு

மனதளவில் உறுதியானவராக இருந்தார் என்று விவரிக்கப்பட்டது. ஒரு சாப்பிடும் தட்டும், பழைய கந்தல் ஆடை மற்றும் அடுப்பு எரிக்க பயன்படும் பாக்கு மட்டை ஆகியவையே இவரது உடமைகளாக இருந்தது. பழைய கந்தல்களுடன் ஒரு பாறையில் தூங்கினார். 1804 இல் ஒரு நிருபர் அவளைச் சந்தித்தபோது, இவருடைய குகையில் உணவு அல்லது நெருப்பின் அறிகுறிகள் எதுவும் இல்லை. பனிப்பொழிவின்போது இவர் குகையை விட்டு வெளியே வரவில்லை. கோடை காலத்தில் மலைகளில் இருந்து சேகரிக்கப்படும் பெர்ரி, கொட்டைகள் மற்றும் வேர்களையும் கிடைக்கும் மிகக் குறைந்த அளவிளான இறைச்சியை மட்டுமே தான் உட்கொள்வதாக நிருபரிடம் சாரா பிஷப் கூறினார். இவர் தன்னுடன் விவிலியத்தை வைத்திருந்தார். அதை வாசிப்பதிலும் தியானிப்பதிலும் கணிசமான நேரத்தை செலவிட்டார். தெற்கு சேலம் பிரஸ்பைடிரியன் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காக இவர் தனது குகையிலிருந்து வாராந்திர பயணத்தை மேற்கொண்டார். முதலில் உள்ளூரிலுள்ள ஒரு இல்லத்தில் நேர்த்தியான உடையை மாற்றிக்கொள்வார். பின்னர் தொழுகை முடிந்தவுடன் தான் ஏற்கனவே அணிந்திருந்த கந்தல் உடையில் மீண்டும் தன் குகைக்குச் செல்வார்.

இறப்பு தொகு

சாரா பிஷப் 1808 மற்றும் 1810 க்கு இடையில் உறைந்து போனதாக பெரும்பாலான ஆதாரங்கள் கூறினாலும், அவர் இறந்த தேதி மற்றும் சூழ்நிலைகள் சர்ச்சைக்குரியவை.

பிப்ரவரி 1809 இல், சாரா பிஷப் தெற்கு சேலத்தில் கடுமையான பனிப்புயல் இருந்த ஒரு நாளில் ஒரு குடும்பத்தை சந்தித்தார். இரவு தங்குவதற்கு அவர்கள் இவரை அனுமதித்தபோதிலும், சாரா மறுத்துவிட்டு தனது குகையை நோக்கிச் சென்றார். பின்னர் இவரைத் தேடிச் சென்ற போது இவரது உயிரற்ற உடல் பனியால் மூடப்பட்டு மலையின் ஓரத்தில் கண்டெடுக்கப்பட்டது.[3]

மற்றொரு அறிக்கை, இவர் வசந்த காலத்தில் அல்லது கோடையில் உறைந்த சதுப்பு நிலத்தில் சிக்கிக் கொண்டதாகக் கூறுகிறது. [3] மேலும் மற்றொரு செய்திக் கட்டுரை, செப்டம்பர் 1808 இல் தரையில் சிக்கிய கால்களுடன் அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறுகிறது. ஜான் வார்னர் பார்பரின் கூற்றுப்படி, இவரது மரணம் 1810 இல் ரிட்ஜ்ஃபீல்டில் நிகழ்ந்தது. இது 1837 இல் வெளியிடப்பட்ட அவரது கனெக்டிகட் வரலாற்றுத் தொகுப்புகள் என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது [7]

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மலைகளில் உள்ள இவரது குகை ஒரு சுற்றுலா தலமாக மாறியது.[6]

நியூயார்க்கின் வடக்கு சேலத்தில் உள்ள ஜூன் சாலை கல்லறையில் அடையாளம் தெரியாத கல்லறையில் சாரா பிஷப் அடக்கம் செய்யப்பட்டார்.[8]

மேற்கோள்கள் தொகு

  1. Zuidhoek (2022). The Pirate Encyclopedia: The Pirate's Way.
  2. 2.0 2.1 DePauw (1982). Seafaring Women.
  3. 3.0 3.1 3.2 3.3 North Salem Historical Society (October 29, 2021). "Sarah Bishop - The Hermitress of the Salems". Halston Media. பார்க்கப்பட்ட நாள் January 10, 2024.
  4. Cutrale, Cheryl (June 6, 2011). "Pirate Women Storm Into Museum of Early Trades". Patch. பார்க்கப்பட்ட நாள் January 10, 2024.
  5. "RCC: Sarah Bishop". www.ctmq.org. பார்க்கப்பட்ட நாள் 2024-01-11.
  6. 6.0 6.1 "Sarah Bishop's Cave - Connecticut Historical Society". 2016-03-31. Archived from the original on March 31, 2016. பார்க்கப்பட்ட நாள் 2024-01-16.
  7. Connecticut Historical Collections, Containing a General Collection of Interesting Facts, Traditions, Biographical Sketches, Anecdotes, Etc., Relating to the History and Antiquities of Every Town in Connecticut with Geographical Descriptions.
  8. "Sarah Bishop - The Hermitress of the Salems". Halston Media News. 29 October 2021. பார்க்கப்பட்ட நாள் January 9, 2024.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாரா_பிஷப்_(துறவி)&oldid=3897190" இலிருந்து மீள்விக்கப்பட்டது