சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன்

சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் இயேசு சிலுவையில் அறையப்பட கூட்டிச்செல்லப்பட்ட போது உரோமை காவலர்களின் கட்டாயத்தினால் இயேசுவின் சிலுவையைச் சுமந்தவர் ஆவார். இந்த நிகழ்வானது ஒத்தமை நற்செய்தி நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.[1][2][3]

சிரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவும் காட்சியினை சித்தரிக்கும் பீட்டர் பவுல் ரூபென்ஸ் வரைந்த ஓவியம்
அவர்கள் வெளியே சென்ற போது சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்ற பெயருடைய ஒருவரைக் கண்டார்கள்; இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்..[2]

வடக்கு ஆப்பிரிக்காவில் உள்ள லிபியாவின் சிரேன் ஊரைச்சேர்ந்தவர் இவர். அக்காலத்தில் இப்பகுதி குரேக்க குடியேற்றப்பகுதியாக இருந்தது. ஏறத்தாழ 100,000 யூதர்கள் இங்கு வசித்திருக்கக்கூடும். கிறித்தவம் பரவிய முதல் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். முதலாம் யூத-உரோமைப் போரின் முடிவில் தப்பியோடிய களகக்காரர்கள் இங்கு தஞ்சம் புகுந்தனர் என்பர்.

சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் எருசலேமில் ஒரு தொழுகைக் கூடம் வைத்திருந்தனர். திருவிழாக்களுக்கு எருசலேமுக்கு வரும் சிரேன் ஊரில் வாழ்ந்த யூதர்கள் இக்கூடத்திற்கு வருவது வழக்கமாகும்.[4]

இவருக்கு அலக்சாந்தர் மற்றும் ரூபு என்னும் பெயரில் இரு புதல்வர்கள் இருந்ததாக மாற்கு நற்செய்தி 15:21 குறிக்கின்றது. இதனால் இவர்கள் துவக்ககால கிறித்தவர்களால் நன்கு அறியப்பட்டவராகவும் உரோமையருக்கு எழுதிய திருமுகம் 16:13இல் பவுல் குறிப்பிடும் ரூபு இவரின் புதல்வர் எனவும் சிலர் கருதுகின்றனர்.[5] வேறு சிலர் திருத்தூதர் பணிகள் 11:20இல் குறிப்பிடப்படும் அந்தியோக்கியாவுக்கு வந்து அங்குள்ள கிரேக்கருக்கு நற்செய்தியை அறிவித்த சிரேன் ஊரைச் சேர்ந்த சிலரில் இவரும் அடங்குவார் என்கின்றனர்.[4] எனினும் சீமோன் என்னும் பெயரை வைத்து இவர் யூதர் என கணிக்க இயலாகு என்றும் அலக்சாந்தர் மற்றும் ரூபு ஆகியன பொதுவாக வழங்கப்பட்ட பெயர்கள் ஆனதால் இக்குறிப்புகளில் உள்ள நபர் இவர் அல்ல என்று கூறுகின்றனர்.[6]

சிரேன் ஊர் சீமோன் இயேசுவின் சிலுவையைச் சுமந்து உதவுவது சிலுவைப் பாதையில் ஐந்தாம் நிலையாகும்.[7] ஞானக் கொள்கையினை உடைய சிலர் இயேசுவுக்கு பதில் சீமோனே சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்பட்டதாக நம்புகின்றனர்.[8] இத்தகைய கொள்கையினர் இயேசுவுக்கு மனித உடல் இல்லை என்றும் நம்புவது குறிக்கத்தக்கது.

மேற்கோள்கள் தொகு

  1. Mark 15:21-22
  2. 2.0 2.1 Matthew 27:32
  3. Luke 23:26
  4. 4.0 4.1 T.A. Bryant, compiler. Today's Dictionary of the Bible. Minneapolis: Bethany House, 1982. Page 580.
  5. Walter W. Wessel. "Mark." In The Expositor's Bible Commentary, Frank E. Gaebelein, ed. Vol. 8. Grand Rapids: Regency (Zondervan), 1984. Page 778.
  6. D. A. Carson, "Matthew". In The Expositor's Bible Commentary, Frank E. Gaebelein, ed. Vol. 8. Grand Rapids: Regency (Zondervan), 1984. Page 575.
  7. The liturgy for the fifth Station of the Cross at catholic.org
  8. Willis Barnstone and Marvin Meyer, eds. The Gnostic Bible. Boston: Shambhala, 2002. Pages 465, 469-470.