சிவதருமோத்தரம்

சிவதருமோத்தரம் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் என்னும் சைவப் பெரியாரால் 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களில் ஒன்று. அகத்தியர் வினாக்களுக்கு முருகக்கடவுள் சொல்லும் விடைகளைக் கூறுவதாக அமைந்துள்ளது இந்த நூல். வடமொழியிலிருந்து தமிழாக்கம் செய்யும்போது ஆசிரியர் இந்நூலில் தமிழரின் சிவாகமக் கோட்பாடுகளையும் புகுத்தியுள்ளார்.

குருஞான சம்பந்தர் இதன் கருத்துக்களை மறுத்து எழுதியுள்ளார். குருஞான சம்பந்தருக்கு 150 ஆண்டுகள் பின்னர் வாழ்ந்த வெள்ளியம்பலவாணத் தம்பிரான், குருஞான சம்பந்தரின் மறுப்பு நூலுக்குச் சிற்றுரையும், பேருரையும் எழுதியதோடு, மறைஞான சம்பந்தருடைய சிவதருமோத்தரம் முதலான நூல்களைப் போற்றியும் எழுதியுள்ளார்.

இது பாயிரம் மற்றும் 12 இயல்களில் 1224 செய்யுள் கொண்டது. முருகன் சொன்ன 12,000 விடைகளுள் 1,800 விடைகள் இவை என்று சொல்லிக்கொண்டு நூல் வளர்கிறது. இதன் இயல்கள் சொல்லும் செய்திகள் வருமாறு:

  1. ஆர்வத்துடன் செய்வதே அன்பு, அறம். ஆர்வம் இல்லாமல் செய்தால் அது அன்போ, அறமோ ஆகாது.
  2. சிவஞானத்தைத் தாய்மொழியிலும் சொல்லலாம்.
  3. தன்மம், தபம், செபம், தியானம், ஞானம் – என யோகம் ஐந்து வகை.
  4. 50 வழிபடு தலங்கள் காட்டப்பட்டுள்ளன. வெற்றியூர், காரிக்கரை, விரிஞ்சை, மூவலூர் என்பன அவற்றுள் சில.
  5. சிவபூசை முதலான சிவதருமங்கள் கூறப்பட்டுள்ளன.
  6. படிக்கும்போது பாவனை உணர்வோடு படிக்கவேண்டும் என்கிறது இந்த இயல்.
  7. சுவர்க்கம், நரகம் பற்றிக் கூறுகிறது. இவற்றில் சந்தப்பாடல்கள் உள்ளன.
  8. பிறப்பு இறப்பு பற்றி விளக்குவது.
  9. புண்ணிய பாவங்கள் பற்றிய விளக்கம்.
  10. ஞானாசிரியர் வழி
  11. பரிகாரம்
  12. உலகின் அமைப்பை விளக்கும் கோபுரவியல்.

பாடல் தொகு

இந்நூலில் அமைந்துள்ள பாடல் ஒன்று நரகத்தில் தண்டிப்போர், துன்புறுத்தும்போது இவ்வாறு சொல்லிக்கொண்டு துன்புறுத்துவார்கள் என்கிறது:

ஓர வழக்கினை மன்றிலிருந்து உரைத்தீரே
யார் எதிர் என்று உம்மையேமிக மேன்மை அறைந்தீரே
பார் எனவே பொறையாரையும் நொய்மை பகர்ந்தீரே
நீர் எனவே இனி யாரையும் வெல்ல நினைத்தீரே

கருவிநூல் தொகு

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005

அடிக்குறிப்பு தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவதருமோத்தரம்&oldid=1767909" இலிருந்து மீள்விக்கப்பட்டது