சீதமென்சவ்வு

சீதமென்சவ்வு (mucous membrane) எனப்படுவது வெளிச் சூழலுடன் தொடர்பு கொண்டிருக்கும் உடலின் உள்ளே காணப்படும் குழிகள், வழிகள் போன்றவற்றை மூடி இருக்கும் ஒரு அகவுறையாகும். மேலணி இழையம், தனித்துவப் படை (lamina propria) போன்றவை சீதமென்சவ்வின் பகுதிகளாகும்; இரையகக் குடலியத்தொகுதியில் மூன்றாவதாக தசைச் சீதச்சவ்வும் இதன் ஒரு பகுதியாகின்றது.[1][2]

உணவுப்பாதையின் ஒரு குறுக்குவெட்டுத்தோற்றம்

சீதமென்சவ்வு இரையகக் குடலிய வழி, சிறுநீர் இனவுறுப்பு வழி, மூச்சு வழி போன்றவற்றில் அகவுறைப் படலமாக உள்ளது. வாய், மூக்கு, குதம் போன்ற பகுதிகள் வெளிச்சூழலுடன் நேரடித்தொடர்பு கொண்ட சீதமென்சவ்வினால் சூழப்பட்ட அமைப்புக்களாகும். சீதமென்சவ்வு உயிரணுக்களின் வகை மற்றும் அதனது சீதத்தின் வகை உறுப்புகளுக்கு உறுப்பு மாறுபடுகின்றது.[3]

சீதமென்சவ்வு சுரப்பிகளைக் கொண்டிருப்பதால், அது சீதம் எனும் பாய்மத்தைச் சுரப்பதால் ஈரலிப்புத்தன்மையைக் கொண்டுள்ளது, இது உடலின் பல்வேறு தொழிற்பாட்டுகளுக்கு உதவி புரிகின்றது.[3]:5,813 தேவையான பொருட்களை அகத்துறிஞ்சல், தேவையற்றவற்றை வெளியேற்றல் போன்ற செயற்பாட்டில் உன்னத பங்கு வகிக்கின்றது. அத்துடன் உடல் வழிகளை ஈரலிப்பாக வைத்திருத்தல், நோய் நுண்ணுயிரிகளுக்கும் வெளிப்புற அழுக்குகளுக்கும் பொறியாக விளங்குதல் போன்றன இவற்றின் ஏனைய தொழிலாகும். நுரையீரலில் வளிப்பரிமாற்றத்துக்கு உராய்வுநீக்கி போன்று உதவுகின்றது.

சீதமென்சவ்வின் சில பகுதிகளில், குறிப்பாக மூச்சு வழியில், நுண்ணிய மயிர் அமைப்பைப் போன்ற பிசிர்முனைப்புகள் காணப்படுகின்றன, இவை பொறிக்குள் அகப்பட்ட வேற்றுப் பொருட்களை (தூசு, நுண்ணுயிரிகள்) பிற்புற அசைவு மூலம் உடலில் இருந்து வெளியேற்றுகின்றன, இதன் போது சீதமும் சேர்ந்து வெளியேறினால் அது "சளி" எனப்படுகின்றது. தும்மும் போது அல்லது இருமும்போது இவற்றைக் காணலாம்.

சீதமென்சவ்வுள்ள பகுதிகளில் எளிதில் அகத்துறிஞ்சல் நடைபெறும் என்பதால், அவை நேரடியாக வெளிச் சூழலுடன் தொடர்பு கொள்ளும் பகுதிகளில் ஏற்படக்கூடிய நச்சுப்பொருட்களின் தொடுகை தீயவிளைவை உண்டாக்கும். இனவுறுப்பு வழியில் உள்ள சீதமென்சவ்வு நுண்ணுயிரிகளில் இருந்து பாதுகாக்கவும், உராய்வுநீக்கியாக விளங்கவும் உதவுகின்றது.

மேற்கோள்கள் தொகு

  1. "Mucous membrane". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 1 August 2015.
  2. Sompayrac, Lauren (2012). How the Immune System Works (4th ). John Wiley & Sons, Ltd.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781118290446. https://archive.org/details/howimmunesystemw0004somp. 
  3. 3.0 3.1 Guyton, Arthur C.; Hall, John E. (2005). Textbook of medical physiology (11th ). Philadelphia: W.B. Saunders. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7216-0240-1. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதமென்சவ்வு&oldid=3581361" இலிருந்து மீள்விக்கப்பட்டது