சுடர்மணி (நூல்)

சுடர்மணி என்னும் கிறித்தவக் காப்பியம் ஆசுகவி எஸ்.ஆரோக்கியசாமி என்பவரால் பாடப்பெற்று 1976ஆம் ஆண்டு முதற்பதிப்பாக வெளிவந்தது.

நூற்பெயர் விளக்கம் தொகு

சுடர்மணி என்னும் தலைப்பு என்றும் சுடரும் மணி எனப் பொருள்தரும். இறப்பு, நிகழ்வு, எதிர்வு என்னும் முக்காலங்களிலும் ஒளிவீசும் சுடராக இயேசு கிறித்து இருப்பதை சுடர்மணி எனும் சொல் உணர்த்துகிறது.

இந்நூலில் காப்பியக் கூறுகள் சிலவே உள்ளன என்பதால் வரலாறு கூறும் காப்பியம் என்னும் வகையதாகக் கருதப்படலாம்.

நூல் எழுதப்பெற்ற நோக்கம் தொகு

ஆசிரியர் நூலின் முன்னுரையில் பின்வருமாறு கூறுகிறார்: தேம்பாவணியும் இரட்சணிய யாத்திரிகமும் இயேசு பெருமானின் வரலாற்றைக் கூறுவனவாயினும் அவை அதனை முற்றக் கூறுவனவாயில்லை. இக்குறையை நீக்கி, இயேசுவின் வரலாற்றை முழுவதுமாகக் கூறும் செய்யுள் நூல் ஒன்றை இயற்றவேண்டும் என்ற எண்ணத்தால் இக்காப்பியம் பாடப்பட்டது.

இயேசு சபையைச் சார்ந்த அருள்திரு ஜே.எஃப். பெர்னாண்டோ என்பவர் எழுதியிருந்த "சேசு கிறிஸ்து நாதரின் ஜீவிய சரித்திரம்" என்னும் நூலை அடியொற்றி சுடர்மணி என்ற தலைப்பில் இயேசுவின் வாழ்க்கையைச் செய்யுளாக வடித்ததாக நூலாசிரியர் கூறுகிறார்.

நூலின் பிரிவுகள் தொகு

சுடர்மணி என்னும் காப்பியம் நான்கு காண்டங்களைக் கொண்டுள்ளது. அவை: பால காண்டம், உபதேச காண்டம், மீட்புக் காண்டம், உத்தான காண்டம் என்பவை. பால காண்டம் நான்கு படலங்களையும், உபதேச காண்டம் முப்பது படலங்களையும், மீட்புக் காண்டம் பத்து படலங்களையும், உத்தான காண்டம் மூன்று படலங்களையும் கொண்டுள்ளன.

நூல் முழுவதும் 1200 பாடல்களை உள்ளடக்குகிறது.

சில பாடல்கள் தொகு

அவையடக்கம்

வளர்மதி ஒளியில் மின்னும் மின்மினி போலும் வானில்
விளங்கிடும் பரிதி முன்னே விளக்கொளி தருதல் போலும்
குளமலர்க் கமலம் முன்னே கொட்டியும் மலர்தல் போலும்
அளவிலான் வாழ்க்கை நூலை அடியனும் எழுத லுற்றேன்.

சிலுவைச் சுமையால் விழுந்த இயேசுவுக்கு இயற்கை ஆறுதல் அளித்தல்

நின்ற மரங்கள் தம்கிளையால் நிகரே இல்லான் தாள்வணங்கி
என்றும் அழியான் மிதியடியாய் இன்றே அழியும் தம்மலரை
முன்னே தூவித் தரைதன்னை மென்மைப் படுத்த முன்வந்ததையே
இன்றும் எண்ணி மரங்கள் எல்லாம் இலைப்பூ உதிர்க்கக் காண்கின்றோம்.

ஆதாரம் தொகு

இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).

"https://ta.wikipedia.org/w/index.php?title=சுடர்மணி_(நூல்)&oldid=3175858" இலிருந்து மீள்விக்கப்பட்டது