சூளக்கரை ஐராவதீசுவரர் கோயில்

கிருஷ்ணகிரி மாவட்ட சிவன் கோயில்

வெள்ளை விடங்கர் கோயில் அல்லது ஐராவதீசுவரர் கோயில் என்பது கிருட்டிணகிரி மாவட்டம் சூளக்கரை என்ற ஊரில் உள்ள சிவன் கோயில் ஆகும்.

வெள்ளை விடங்கர் கோயில்
ஐராவதீசுவரர் கோயில்
பெயர்
பெயர்:வெள்ளை விடங்கர் கோயில்
ஐராவதீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:சூளக்கரை
மாவட்டம்:கிருட்டிணகிரி மாவட்டம்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஐராவதீசுவரர்
தாயார்:பர்வதனி அம்மன்
சிறப்பு திருவிழாக்கள்:
  • சிவராத்திரி
  • சித்ரா பௌர்ணமி
  • கார்த்திகை தீபம்
  • சித்திரை வருடப் பிறப்பு

தல வரலாறு தொகு

இந்திரனின் வாகனமான ஐராவதம் மிகுந்த பலமும் அழகும் கொண்டது. இதனால் அது செருக்குடன் இருந்தது. அதேபோல இந்திரனும் மிகுந்த செருக்குடன் இருந்தான். சிவனின் ரிசப வாகனத்தை ஏளனமாக கருதினான். இதை உணர்ந்த சிவன் இந்திரனின் செருக்கை அடக்கி, அவனை பணியவைக்கும் பொருட்டு, ஐராவதத்தை வீழ்த்தி அதன் செருக்கழித்தார், இந்திரன் தன் அறியாமையை உணர்ந்து வருந்தி இறைவனிடம் சரண்டைந்தான். தன் வாகனத்தை இறைவனே ஏற்றருளவும் வேண்டினான். அவனது வேண்டுகோளை ஏற்று, ஐராவதத்தில் ஏறி, அதனை ஏற்றருளியபின், அதனை மீண்டும் இந்திரனுக்கே அளித்து அவனை மன்னித்தருளினார். இதனால் இத்தலத்து இறைவன் ஐராவதீசுவரர் என அழைக்கப்படுகிறார்.[1]

கோயில் அமைப்பு தொகு

சோழர் கலைப்பாணியில் அமைந்துள்ள பழமையான இந்தக் கோயில் சிதிலமடைந்து காணப்படுகிறது, கோயிலானது தெற்கு நோக்கிய வாயிலுடன் அமைந்துள்ளது. இது கருவறை, இடைக்கட்டு என்கிற அந்தராளம், மகமண்டபம் என அமைந்துள்ளது. முகமண்டபமானது சித்திர தூண்களுடன் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது. இதில் உள்ள தூண்களில் இந்திரன் ஐராவதத்தில் அமர்ந்துள்ள காட்சி, வியாக்கிரபாதர் புலி உடலுடன் சிவனுக்கு பூசை செய்யும் காட்சி போன்றவை உள்ளன. இதையடுத்து மகாமண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் இடதுபுறம் அர்த்த மண்டபமும் கருவறையும் அமைந்துள்ளன. கருவறையில் ஈசன் லிங்கவடிவில் உள்ளார். சிவன் சந்நிதிக்கு அடுத்து பர்வதனி அம்மனின் கிழக்கு நோக்கிய தனிச்சந்நிதியில் உள்ளார். பிரகாரத்தில் விநாயகருக்கும், சுப்பிரமணியருக்கும் தனிச்சந்நிதிகள் உள்ளன.

கல்வெட்டுகள் தொகு

இங்கு நான்கு கல்வெட்டுகள் உள்ளன. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்திய 12-13 ஆம் நூற்றாண்டு காலத்திய கல்வெட்டு ஒன்று, போசள மன்னன் வீர இராமநாதனின் 12 ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு ஒன்றும், ஆட்சியாண்டும், அரசமரபும் அறிவிக்கபடாத இரு கல்வெட்டுகள் என நான்கு கல்வெட்டுகள் உள்ளன. இந்த நான்கு கல்வெட்டுகளும் இன்னும் வெளியிடப்படவில்லை. இவை சுகவன முருகன் உள்ளிட்ட சில கல்வெட்டு ஆய்வாளர்களிடம் கையெழுத்து பிரதிகளாக உள்ளன.[2]

விழாக்கள் தொகு

ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. சிவராத்திரியன்று நான்கு கால பூசை சிறப்புற நடத்தப்படுகிறது. சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

அமைவிடம் தொகு

சூளக்கரையானது கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவியில் இருந்து, போச்சம்பள்ளி செல்லும் வழியில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சூளக்கரையில் இருந்து இக்கோயில் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

குறிப்புகள் தொகு

  1. திருக்கோயில்கள் வழிகாட்டி கிருஷ்ணகிரி மாவட்டம். தர்மபுரி: தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை. 2014 ஆகத்து. pp. 134–136. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. த. பார்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுத் தடயங்கள் தொகுதி-1 ஊத்தங்கரை வட்டம். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மையம், ஒசூர். 2010 அக்டோபர். pp. 118–119. {{cite book}}: Check date values in: |year= (help)