சென்னை சங்கமம்

சென்னை சங்கமம் சென்னை நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மிகப்பெரிய திறந்தவெளி தமிழ் பண்பாடு மற்றும் கலைநிகழ்ச்சியாகும். இதனை தமிழ் மையம் மற்றும் தமிழக அரசின் பண்பாடு மற்றும் சுற்றுலாத் துறை பழம்பெரும் நாட்டுக் கலைகளை வளர்த்தெடுக்கவும் கலைஞர்களுக்கு உற்சாகமூட்டவும் நடத்துகின்றன. [1]. தமிழரின் அறுவடைத் திருவிழா மற்றும் புத்தாண்டான பொங்கல் திருவிழாவினை ஒட்டி ஓரிரு வார காலத்திற்கு இது நடத்தப்படுகிறது. இதன் அமைப்பாளர்களின் கூற்றுப்படி இதுவே இந்தியாவில் நிகழும் நீண்ட மற்றும் பெரிய திறந்தவெளி கலைவிழாவாகும்.[2].

சென்னை சங்கமம் நிகழ்வில் கூத்து

வரலாறு தொகு

பொங்கல் திருவிழாவினையொட்டி ஒரு கலைவிழா மூலம் தமிழ்நாட்டுப் பண்பாடு மற்றும் பழங்கலைகளை வெளியுலகினிற்கு வெளிச்சமிட்டுக் காட்டிடும் எண்ணம் மாநிலங்களவை உறுப்பினரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் தமிழ் மையம் அமைப்பின் நிறுவனர் பாதிரியார் செகத் காசுபர் ராசு ஆகியோருக்கு செப்டம்பர் 2006இல் தோன்றியது.[3]. அந்த எண்ணத்தின் செயற்பாடாக தமிழக அரசின் புரவணைப்பில் 2007ஆம் ஆண்டு இந்த விழா தொடங்கப்பட்டது.

இதன் நான்காவது நிகழ்வு 2010ஆம் ஆண்டு சனவரி 10 முதல் சனவரி 16 வரை நடைபெற்றது.

சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஐந்தாவது தொகுப்பு சனவரி 12 முதல் நடைபெறும்.


விழா விவரணம் தொகு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் - கடற்கரை, பூங்காக்கள், மாநகராட்சி மைதானங்கள், கல்லூரி/பள்ளி மைதானங்கள், வணிக வளாகங்கள் - கலைஞர்கள் தங்கள் நாட்டுக் கலைத்திறன்களை வெளிப்படுத்துவர். இவ்வாறு பொதுவிடங்களில் நடத்தும் எண்ணம் பெங்களூரு ஹப்பா கொண்டாட்டங்களைக் கண்டு எழுந்தது. [4]. இவ்விழாவில் நாட்டுப்புற பாடல்கள், நடனங்கள், தற்காப்பு கலைகள், கூத்து என தமிழர் கலைகள் இடம்பெறுவதோடு 2008ஆம் ஆண்டின் இரண்டாவது நிகழ்விலிருந்து தமிழ்நாட்டு பல்வகை உணவு முறைகளும் காட்சிப்படுத்தப்படுகின்றன. 4000 கலைநிகழ்ச்சிகள் நடக்கும் இவ்விழாவில் ஆண்டுதோறும் 2000 கலைஞர்கள் பங்கேற்கிறார்கள்.[5].

மேற்கோள்கள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chennai Sangamam
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சென்னை_சங்கமம்&oldid=3772595" இலிருந்து மீள்விக்கப்பட்டது