செப்பறை அழகிய கூத்தர் கோவில்

செப்பறை அழகிய கூத்தர் கோயில், தமிழகத்தின் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியம், இராஜவல்லிபுரம் ஊராட்சியில் தாமிரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள நடராஜர் கோயில் ஆகும். இக்கோயில் திருநெல்வேலி நகரத்திற்கு வடக்கே 12.2 கிலோ மீட்டர் தொலைவிலும், தாழையூத்திற்கு கிழக்கே 9.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

இத்திருத்தலத்தில் சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நெல்லையப்பர் என்றழைக்கப்படுகிற மூலவரான வேண்ட வளர்ந்த நாதர் சுயம்புமூர்த்தியாக தனிச் சன்னதியில் இருக்கிறார். இலிங்கத்தின் நடுவில் அம்பிகை வீற்றிருப்பது இத்திருத்தலச் சிறப்பம்சங்களில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

இத்தலம் நடராஜரின் பஞ்ச சபைகளில் தாமிர சபை ஆகும். இச்சபையில் விஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவ ரிஷி, மணப்படைவீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த தலமாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.[2]

புராண வரலாறு தொகு

சிதம்பரத்தை ஆண்ட சிங்கவர்மன் என்ற மன்னன் சிதம்பரத்தில் நடராஜர் சிலையைப் பிரதிஷ்டை செய்ய விருப்பம் கொண்டு சோழநாட்டுச் சிற்பியான நமச்சிவாயமுத்து ஸ்தபதியை நடராஜர் சிலை செய்யப் பணித்தான். அழகின் உருவாக விளங்கிய அந்த நடராஜர் சிலை தாமிரத்தில் இருந்தது. அதைப் போன்றதொரு சிலையைத் தங்கத்தில் செய்து பிரதிஷ்டை செய்ய விரும்பி, தாமிரத்திலான முதல் சிலையைப் பிரதிஷ்டை செய்யாமல் காலம் தாழ்த்தினான். இறைவனின் திருவிளையாடலால் இரண்டாவதாகச் செய்த சிலையும் தாமிரமாக மாறிவிட்டது. இரவில் சிங்கவர்மனின் கனவில் தோன்றிய இறைவன், ‘உன் கண்களுக்கு மட்டுமே நான் தங்கமாகத் தெரிவேன். மற்றவர்கள் கண்களுக்கு நான் தாமிரமாகவே தெரிவேன்..’ என்று அறிவுறுத்த, இரண்டாவதாகச் செய்த சிலையைச் சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, தனது கனவில் இறைவன் இட்ட உத்தரவுக்கிணங்க, முதலில் செய்த நடராஜர் சிலையைச் சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிடுகிறான் சிங்கவர்மன். சிற்பியின் கனவில் தோன்றிய இறைவன் அச்சிலையை எடுத்துக்கொண்டு தெற்கு நோக்கி செல்லுமாறு அறிவுறுத்த, நிறைவாக அச்சிலை செப்பறைத் திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.[3]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு