செருமன் கால்பந்துச் சங்கம்

செருமன் கால்பந்துச் சங்கம் (German Football Association,இடாய்ச்சு மொழி: Deutscher Fußball-Bund [ˈdɔʏ̯t͡ʃɐ ˈfuːsbalbʊnt]; DFB [deːʔɛfˈbeː] ) என்பது செருமனியின் கால்பந்தாட்ட மேலாண்மை அமைப்பாகும். பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபிஃபா) மற்றும் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம் (யூஈஎஃப்ஏ) ஆகியவை தொடங்கப்பட்டபோது அவற்றின் ஆரம்ப உறுப்பினராக இச்சங்கம் இருந்தது. செருமனியின் கால்பந்துக் கூட்டிணைவு அமைப்புகள் மற்றும் தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான காற்பந்தாட்ட அணிகளைத் தேர்வு செய்வது இதன் பொறுப்பாகும். இதன் தலைமையகம் பிராங்க்ஃபுர்ட் நகரில் அமைந்துள்ளது. இதன் உறுப்பினர்களாக செருமானியக் கால்பந்துக் கூட்டிணைவு, ஐந்து பிராந்திய மற்றும் 21 மாநில கால்பந்து சங்கங்கள் உள்ளன. செருமானியக் கால்பந்துக் கூட்டிணைவானது செருமனியின் புன்டசுலீகா மற்றும் 2. புன்டசுலீகா ஆகியவற்றை நிர்வகித்து நடத்துகிறது. பிராந்திய மற்றும் மாநில சங்கங்கள், அவற்றுக்கான நிர்வாகப் பரப்பில் தொழில்முறை மற்றும் பொழுதுபோக்குக் கால்பந்துப் போட்டிகளை நடத்துகின்றன. செருமானிய கால்பந்துச் சங்கத்தின் 21 மாநில சங்கங்களில் 25,000-க்கும் மேற்பட்ட கால்பந்துக் கழகங்களும் 6.8 மில்லியனுக்கும் அதிகமான உறுப்பினர்களும் உள்ளனர்; இதன்மூலம் உலகிலேயே தனிப்பெரும் விளையாட்டுக் கூட்டமைப்பாக செருமானியக் கால்பந்துச் சங்கம் விளங்குகின்றது.

செருமன் கால்பந்துச் சங்கம்
யூஈஎஃப்ஏ
[[File:
|150px|Association crest]]
தோற்றம்சனவரி 28, 1900
ஃபிஃபா இணைவு1904
யூஈஎஃப்ஏ இணைவு1954
தலைவர்வொல்ஃப்காங் நீர்சுபாக்

கருப்பு இறகுகளும் மஞ்சள் நிற அலகும் கொண்ட கழுகு, செருமானிய கால்பந்துச் சங்கத்தின் நற்பேறுச் சின்னமாக விளங்குகிறது. பவுல் (Paule) எனும் பெயருடைய இக்கழுகை 26 மார்ச், 2006, முதல் நற்பேறுச் சின்னமாக இச்சங்கம் ஏற்றுள்ளது.