செ. சதீஸ்குமார்

செ. சதீஸ்குமார், இலங்கை நாட்டின் கிளிநொச்சியை வாழ்விடமாகக் கொண்ட செல்லையா என்பவரின் மகனான இவர், 2008ம் ஆண்டு ஈழப் போரின் போது கிளிநொச்சி பொது மருத்துவமனையில் நோயாளர் தமிழீழ விடுதலைப் புலிகள் காவு வண்டி ஓட்டுநராக பணிபுரிந்தவர். விடுதலைப் புலிகளுக்கு தேவையான வெடிமருந்துகளை தனது காவு வண்டியில் ஏற்றிச் சென்ற போது, வவுனியா- தேக்கவத்தை சோதனைச் சாவடியில் வைத்து காவல்துறையினரால் சதீஸ்குமார் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு உதவியதாக குற்றப்பத்திரம் தயாரித்து வவுனியா மேல் நீதிமன்றில் அவசரகாலச் சட்டவிதியின் கீழ் சதீஸ்குமார் மீது வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கினை விசாரித்த நீதிமன்றம், 2011ஆம் ஆண்டு, சதீஸ்குமாருக்கு ஆயுட்கால சிறை தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது. தீர்ப்பை எதிர்த்து கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் சதீஸ்குமார் மேல் முறையீடு செய்தார். எனினும் வவுனியா மேல் நீதிமன்றின் தண்டனைத் தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றமும் மீண்டும் உறுதிப்படுத்தி வழக்கை முடித்து வைத்தது. இறுதியாக 2017ம் ஆண்டில் சதீஸ்குமார் தன்னை சிறையிலிருந்து விடுவிக்கக் கோரி இலங்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து காத்திருந்தார்.

15 ஆண்டுகள் அரசியல் கைதியாக கொழும்புச் சிறையில் இருந்த சதீஸ்குமாருக்கு, 1 பிப்ரவரி 2023 அன்று சிறிலங்கா அதிபர் ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு அறிவித்தார். பின்னர் இவர் 20 மார்ச் 2023 அன்று கொழும்புச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=செ._சதீஸ்குமார்&oldid=3680163" இலிருந்து மீள்விக்கப்பட்டது