சோழர்கால வாணிகம்

சோழர்கள் காலத்தில் வாணிகம் செழித்து வளர்ந்தது. உள்நாட்டு வாணிகம் வெளிநாட்டு வாணிகம் என்று இருவகையாக வாணிகம் நடைபெற்றது. வாணிகத்திற்கு உதவப் பெருவழிகள் இருந்தன.வெளிநாட்டு வாணிகதை மேற்கொள்ள சோழப் பேரரசில் பல துறைமுகங்கள் இருந்தன.வாணிகத்தினால் ஏற்றுமதியும் இறக்குமதியுமாகத் துறைமுகங்கள் நிறைந்திருந்தன. தமிழ்ப் பொருட்களுக்கு அயல் நாடுகள் வாணிகச் சந்தைகளாயின. இறக்குமதி, ஏற்றுமதி பொருட்களுக்குச் சுங்கம் விதிக்கப்பட்டது. அது அரசின் கருவூலத்திற்கு மிகுதியான வருவாயைத் தந்தது. வெளிநாட்டுத் தொடர்புகளால் தமிழர் நாகரிகம், புகழ் ஆகியவை பிற நாடுகளில் பரவின. பணப்புழக்கத்திற்கு முடை ஏற்பட்ட போது செல்வர்களிடமிருந்து வட்டிக்குப் பணம் பெற்றனர்.

உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.

பெருவழிகள் தொகு

பொருட்களைக் கொணரவும், கொண்டு போகவும் பெருவழிகள் பயன்பட்டன. மூன்றுகோல், நான்குகோல் அகலமுடைய பெருவழிகள் இருந்தன.

எனப் பல்வேறு பெருவழிகள் உள்நாட்டு வணிகத்திற்குத் துணை புரிந்தன.

வாணிகச் சாத்து தொகு

வண்டிகளையும், பொதிமாடுகாளையும் வாணிகர் பயன்படுத்தினர். வாணிகத்திற்குப் புறப்படும் வண்டிகள் கூட்டம் கூட்டமாகவே செல்லும். இக்கூட்டம் 'வாணிகச் சாத்து' எனப்பட்டது. சாத்தின் தலைவன் சாத்தன். மாசாத்துவன் எனவும் அழைக்கப்பட்டான். பெருவழிகளில் ஊறு நேராதவாறு இருக்க இம்முறை கையாளப்பட்டது. களவு நிகழாதவாறு காக்க அவ்வழிகளில் பெரும்பாடி காவல் அதிகாரி, சிறுபாடி காவல் அதிகாரி என்போர் சோழப்பேரரசின் காலத்தே பணியாற்றினர்.

பண்ட மாற்று முறை தொகு

உள்நாட்டு வாணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே நிகழ்ந்தது. பொருள் கிடைக்கும் துறைமுகங்கள், நகரங்கள், கிராமங்களுக்குச் சென்று தமக்கு வேண்டிய பொருட்களைப் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு ஈடாகத் தாம் கொண்டு சென்றவற்றை அளிப்பர். விலை கொடுத்தும் பெற்று வந்தனர்.

வெளிநாட்டு வணிகம் தொகு

சோழப்பேரரசில் வெளிநாட்டு வணிகம் மேற்கொள்ள பல துறைமுகங்கள் இருந்தன. நாகப்பட்டினம், மாமல்லபுரம், வீரசோழப்பட்டினம், மயிலை போன்ற நகர்கள் வாணிகத்துறைகளாய்த் திகழ்ந்தன. சோழ நாட்டு வாணிகர்கள் பல்வேறு அயல் நாட்டு வாணிகர்களுடன் வாணிகத்தொடர்பு கொண்டு வாழ்ந்தனர். மேற்கே அராபியம், பாரசீகம் ஆகிய நாடுகளுடனும் கிழக்கே சீனம் கம்போசம், ஸ்ரீவிஜயம், கடாரம் போன்ற நாடுகளுடனும் மேற்கூறிய துறைமுகங்கள் வழியாக வாணிகத் தொடர்பு கொண்டனர்.

தமிழகத்திலிருந்து பிற நாடுகளுக்கு முத்து யானைத்தந்தம், பாக்கு, சந்தனக் கட்டை, பருத்திநூல் துணி, சாயந்தோய்த்த பட்டுநூல் ஆகியவை ஏற்றுமதியாயின என சௌஜீகுவா என்ற சீன நாட்டுப் பயணி குறித்துள்ளார். கீழை நாடுகளில் இருந்து சூடம், சீனச்சூடம், தக்கோலம், தமாலம், அம்பர் போன்றாவையும் தமிழகத்தில் இறக்குமதி ஆயின. மன்னர்களின் குதிரைப்படைத் தேவையை நிறைவேற்ற அரேபிய நாட்டிலிருந்து குதிரைகள் கப்பல்கள் மூலமாக வந்திறங்கின.

வாணிகக் குழுக்கள் தொகு

பல்வேறு வணிகக் குழுக்கள் சோழர் ஆட்சியில் வாழ்ந்தனர்.

  • நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர்
  • மணிக்கிராமத்தார்
  • அஞ்சுவண்ணத்தார்
  • வளஞ்சியர்

என்ற குழுவினர் பற்றிக் கல்வெட்டு கூறுகிறது.

  • மணிக்கிராமத்தார் என்போர் பல நகரங்களில் வாழ்ந்து வணிகம் புரிந்தோர் ஆவர். உறையூர் மணிக்கிராமம், கொடும்பாளூர் மணிக்கிராமம், காவிரிப்பூம்பட்டினத்து மணிக்கிராமம் எனும் கல்வெட்டுத் தொடர்கள் இவர்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
  • காஞ்சி, மாமல்லபுரம், பழையாறை போன்ற பெரிய நகரங்களில் வாழ்ந்தவாறு வாணிகம் புரிந்தோர் நகரத்தார் ஆவர். இவர்கள் நகர ஆட்சியையும் ஏற்று நடத்தினர்.
  • வளஞ்சியரை, தென்னிலங்கை வளஞ்சியர் எனக் கல்வெட்டுகள் குறிப்பிடப்படுகின்றன. வேள்விக்குடி கோவிலின் ஒரு பகுதியை வளஞ்சியரும் திசையாயிரத்துநூற்றுவரும் கட்டச்செய்தனர் எனக் கல்வெட்டு கூறுகிறது,
  • அஞ்சு வண்னத்தார் முகமதிய வாணிகக் குழுவாக இருத்தல் வேண்டும் எனக் கூறுவர்.

வாணிகத் தூதும் விளைவுகளும் தொகு

வெளிநாடுகளுடன் வாணிக உறவு கொள்ள விழைந்த சீன நாடு பிற நாடுகளுக்குத் தூதுவர்களை அனுப்பியது. பிற நாட்டு வணிகர்களைத் தங்கள் நாட்டில் வந்து வாணிகம் புரியுமாறு அழைப்பு விடுத்தது. இதனை அறிந்த சோழ மன்னர்கள் தம் நாட்டு வாணிகம் செழிக்க சீனத்துடன் வாணிகத் தொடர்பு கொள்ள விழைந்தனர். தாமும் தூதுக் குழுக்களை அனுப்பினர்.

முத்தும் பிற கையுறைகளும் எடுத்துக்கொண்டு முதல் இராஜராஜன் அனுப்பிய தூதர்கள் கி.பி. 1012 இல் புறப்பட்டு கி.பி. 1013 இல் சீனா சென்றனர்.

அதுபோல கி.பி.1033 இல் முதல் இராஜேந்திரன் சீன தேசத்துடன் வாணிக உறவு கொள்ள தூதுக்குழு ஒன்றையும் அனுப்பினான். கடல்வாணிகம் இடையூறின்றி நடைபெற வேண்டும் என்று கடாரப் படையெடுப்பை நிகழ்த்தி வணிகர் நலம் காத்தான்.

சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமாத்திராத் தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது.

உசாத்துணை தொகு

மேலும் பார்க்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோழர்கால_வாணிகம்&oldid=2894724" இலிருந்து மீள்விக்கப்பட்டது