ஜவஹர் நவோதயா வித்தியாலயம்

நவோதயா பள்ளி (Jawahar Navodaya Vidyalaya, சுருக்கமாக JNV) திறன்வாய்ந்த மாணவர்களுக்குச் சிறப்புக் கல்வி வழங்கும் வண்ணம் இந்திய அரசினால் வடிவமைக்கப்பட்டவையாகும். இஃது இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தன்னாட்சி அமைப்பான நவோதயா வித்யாலய சமிதியினால் நடத்தப்படுகிறது. தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளிகளுக்கு இணையான தரம் கூடியக் கல்வித்திட்டத்தைச் சிற்றூர் சிறார்களும், அவர்களது குடும்ப வருமானம், சமூகநிலை எத்தகையதாக இருப்பினும், பெற்றிடவேண்டும் என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. [1][2]

ஜவஹர் நவோதயா வித்தியாலயம்
அமைவிடம்
இந்தியா முழுவதும்
இந்தியா
தகவல்
வகைபொதுத் துறை
குறிக்கோள்அறிவே இறைவன்
தொடக்கம்1986
தரங்கள்வகுப்புகள் 6 - 12
Campus sizeகுறைந்த பட்சம் 5 ஏக்கர் நிலம்
Campus typeஊரகம்
இணைப்புசிபிஎஸ்இ
தகவல்600 கிளைகள்
இணையம்

சிறப்புகள் தொகு

இப்பள்ளிகள் தமிழகத்தைத் தவிர்த்து நாட்டின் பல இடங்களில் அமைந்துள்ளன. 2010 வரை ஏறத்தாழ 593 பள்ளிகள் நிறுவப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்படும் அனைத்திந்திய நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்குப் பல்துறை திறன்களிலும் கல்வி வழங்கப்படுகிறது.

இந்த நவோதயா பள்ளிகள் அந்த அந்த மாவட்ட ஆட்சியரின் நேரடி கண்காணிப்பில் செயல்படுவதுடன், மாவட்டத்தின் மாதிரி பள்ளிகளாகவும் செயல்படும். மாணவ, மாணவிகள் இரு பாலரும் தனித்தனி விடுதிகளில் தங்கிப் பயிலும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரிய முறையில் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது.

படிப்பில் திறமை வாய்ந்த கிராமப்புற மாணவ, மாணவியருக்கு இலவச கல்வியுடன் உணவு, உடை, உறைவிடம், சீருடை, காலணிகள், புத்தகங்கள், எழுது பொருட்கள், எல்லா பொருட்களும் வழங்குவதுடன் மருத்துவமும் இலவசமாகக் கொடுக்கப்படுகின்றது.

மாணவ, மாணவியர்கள் பொது நுழைவுத் தேர்வு மூலம், அவர்கள் படித்த தாய்மொழியிலே, 6-ஆம் வகுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இந்தப் பள்ளிகளில் இந்தி உள்ளிட்ட மும்மொழித் திட்டத்தில் பயிலும் வாய்ப்புகளும் உண்டு. ஆனால் 10-ஆம் வகுப்பு இறுதித் தேர்வுக்கு இந்தி கட்டாயம் இல்லை.

இந்தப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர் கொண்ட 2 பிரிவுகளாக, வகுப்பிற்கு 80 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இவர்களில் 33% மகளிர், தாழ்த்தப்பட்டோர் 15%, மலைசாதியினர் 7.5% ஆகும். இது போன்று கிராமப்புற மாணவ, மாணவியர் 75%, இதர பிரிவினர் 24% மாணவ, மாணவிகளாக இந்தப் பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

வரலாறு தொகு

கிராமப்புற மாணவர்களிடையே ஆட்சித்திறனை வளர்த்தெடுக்கும் விதமாக நரசிம்ம ராவ் முனைப்பால் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டு ராஜிவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1985-ஆம் ஆண்டு முதலில் நிறுவப்பட்டது.[3] துவக்கத்தில் நவோதயா வித்யாலயங்கள் என்று பெயர்சூட்டப்பட்டிருந்த இப்பள்ளிகளுக்கு பின்னர் ஜவஹர் நவோதயா வித்யாலயங்கள் என ஜவகர்லால் நேருவின் நூற்றாண்டு பிறந்தவிழாக் கொண்டாட்டங்களின் போது மறுபெயரிடப்பட்டது.

மேற்கோள்கள் தொகு

  1. நவோதயா பள்ளிகள் என்றால் என்ன?
  2. நவோதயா பள்ளிகள்.. சாதக, பாதகங்கள் என்னென்ன?
  3. பி.வி.நரசிம்ம ராவ் நடுவண் அமைச்சில் மனிதவளத்துறை அமைச்சராக பணிபுரிந்து வந்தார் நம்பிக்கை தரும் பள்ளிகள் - பிசினசு டுடே கட்டுரை

வெளியிணைப்புகள் தொகு