ஜேதவனாராமய

ஜேதவனாராமய என்பது, இலங்கையின் பண்டைய தலை நகரமான அனுராதபுரத்தில் இருக்கும் ஒரு தாது கோபுரம் ஆகும். இது மகாசென் (கி.பி 273-301) என்னும் இலங்கை மன்னனால் கட்டப்பட்டது. கட்டப்பட்டபோது 122 மீட்டர் (400 அடி) உயரம் இருந்திருக்கும் எனக் கருதப்படுகிறது. இதன் அடிப்பகுதியின் விட்டம் 113 மீட்டர் (370 அடி) ஆகும். இத் தூபி, உலகிலேயே மிகப் பெரிய தாதுகோபுரமும், உலகின் இரண்டாவது பெரிய கட்டுமானச் சின்னமும் (monument) ஆகும். எகிப்தில் உள்ள மிகப் பெரிய பிரமிட் மட்டுமே இதனிலும் பெரியது எனக் கருதப்படுகின்றது. இதன் மையப்பகுதி ஒரு பிரம்மாண்டமான மண் குன்று ஆகும். வெளிப்பகுதி செங்கற் கட்டினால் மூடப்பட்டுள்ளது.

இலங்கை, அனுராதபுரத்தில் உள்ள ஜேதவனாராமய தாதுகோபுரம்

கி.பி மூன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தத் தாதுகோபுரம், சாகலிக்க எனப்படும் புத்த சமயப் பிரிவைச் சேர்ந்தது. இது அமைந்திருக்கும் நிலத்தின் பரப்பளவு எட்டு ஏக்கர்கள் ஆகும்.

இதனோடு அமைந்த விகாரை அல்லது விகாரம், 3000 க்கு மேற்பட்ட பௌத்த பிக்குகளுக்கு இடமளித்ததாகக் கூறப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜேதவனாராமய&oldid=3029800" இலிருந்து மீள்விக்கப்பட்டது