தனென்பர்க் நினைவுச்சின்னம்

தனென்பர்க் நினைவுச்சின்னம் (Tannenberg Memorial), 1914 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தனென்பர்க் சண்டையின் போது இறந்த செருமன் போர்வீரர்களின் நினைவாகக் கட்டப்பட்டது. இச் சண்டைக்கு, நடுக்காலத்தில் இடம்பெற்ற தனென்பர்க் சண்டை (1410) ஐப் பின்பற்றிப் பெயரிடப்பட்டது. இச் சண்டையில் செருமன் படைகள் வெற்றிபெற்றன. அப்படையின் தளபதி பால் வொன் இன்டென்பர்க் (Paul von Hindenburg) ஒரு தேசிய வீரராகக் கருதப்பட்டதுடன் பிற்காலத்தில் செருமனியின் நாட்டுத் தலைவர் ஆனார்.

தனென்பர்க் நினைவுச்சின்னம்


1924 ஆம் ஆண்டில் இச் சண்டையின் பத்தாவது ஆண்டு நிறைவின்போது, இன்டென்பர்க்கின் கட்டளையின் பேரில் இன்று போலந்தில் உள்ளதும் ஆல்சுட்டைனெக் என அழைக்கப்படுவதுமான ஓகென்சுட்டீன் என்னும் இடத்திற்கருகில் இந்த நினைவுச் சின்னத்தைக் கட்டுவதற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. இந்நினைவுச் சின்னத்தை பெர்லினைச் சேர்ந்த யொகான்னசு குரூகர், வால்ட்டர் குரூகர் என்னும் கட்டிடக்கலைஞர்கள் வடிவமைத்தனர். 1927 ஆம் ஆண்டில் இது கட்டி முடிக்கப்பட்டது. எண்கோணத் தள் வடிவம் கொண்ட இக் கட்டிடத்தின் ஒவ்வொரு பக்கத்தினதும் நடுவில் 67 அடி உயரம் கொண்ட ஒவ்வொரு கோபுரமாக 8 கோபுரங்கள் உள்ளன. இது புனித ரோமப் பேரரசர் இரண்டாம் பிரெடெரிக்கின் கோட்டை, இசுட்டோன்கெஞ்சு (Stonehenge) ஆகியவற்றைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டது.


செருமன் நாட்டுத் தலைவராக இருந்த இன்டென்பர்க் 1934 ஆம் ஆண்டில் இறந்தபோது அவரது விருப்பத்துக்கு மாறாக அவரது உடலும் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. பின்னர் 1921 ஆம் ஆண்டிலேயே இறந்த அவரது துணைவியின் உடலையும் இங்கேயே அடக்கம் செய்தனர்.

புதிய நில அறை தொகு

 
வானிலிருந்து தனென்பர்க் நினைவுச் சின்னத்தின் தோற்றம்

இன்டென்பர்க்கின் உடல் முதலில் 1934 ஆகத்து 7 ஆம் நாள் நினைவுச் சின்னத்தின் நடு முற்றப் பகுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டது. 1935 அக்டோபர் 2 ஆம் தேதி இன்டென்பர்க்கின் பிறந்தநாளன்று இன்டென்பர்க்கின் உடல் அது வைக்கப்பட்டிருந்த வெண்கலப் பேழையுடன் புதிய இடத்துக்கு மாற்றப்பட்டது. இதே நேரம், அனோவரில் குடும்ப இருகாட்டில் அடக்கம் செய்யப்பட்டிருந்த அவரது மனைவியின் உடலும் தோண்டி எடுக்கப்பட்டு இங்கே அடக்கம் செய்யப்பட்டது. புதிய நில அறை ஒன்று தெற்குக் கோபுரத்துக்குக் நேர் கீழே 1935 ஆம் ஆண்டு இறுதியில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த நில அறைக்கு வாயில் ஏற்படுத்துவதற்காக இன்டென்பர்க்கின் உடலையும் 1914 இல் அடக்கம் செய்யப்பட்ட இன்னாரென்று அறியப்படாத 20 போர்வீரர்களின் உடல்களையும் தோண்டி எடுத்தனர். அப்பகுதியின் நில மட்டம் 8 அடி (2.4 மீ) குறைக்கப்பட்டு, நாற்புறமும் படிகள் அமைக்கப்பட்டன. போர்வீரர்களின் உடல்களை மீண்டும் அங்கிருந்த சிற்றாலயத்தில் அடக்கம் செய்தனர். இன்டென்பர்க்கின் நில அறை வாயிலில் குரூகர் சகோதரர்களால் வடிவமைக்கப்பட்ட 14 அடி உயரம் கொண்ட இரண்டு கருங்கற் சிற்பங்கள் இருந்தன. இந்த அறைக்கு வெளியே எந்நேரமும் இரண்டு காவலர்கள் நிறுத்தப்பட்டனர்.


சோவியத் படையெடுப்பு தொகு

 
1998 இல் நினைவுச்சின்னத்தின் நிலையைக் காட்டும் படம்.

1945 ஆம் ஆண்டு சனவரியில் சோவியத் படைகள் கிழக்குப் பிரசியாவுக்குள் நுழைந்தன. இட்லர், இரண்டு உடல்களையும் மீண்டும் தோண்டி எடுக்குமாறு கட்டளையிட்டார். இவ்வுடல்களை முதலில் பெர்லினுக்குச் சற்று வெளியே இருந்த நிலக்கீழ் அறைகளில் வைத்திருந்தனர். பின்னர் அவற்றை செருமன் பேரரசர் முதலாம் வில்லியம், பிரசியாவின் இரண்டாம் பிரெடெரிக் ஆகியோரின் உடல்களுடன் பர்ண்தெரோட் என்னும் ஊருக்கு அருகில் உள்ள உப்புச் சுரங்கம் ஒன்றுக்கு மாற்றின்ர். இந்நான்கு உடல்களும் அவசர அவசரமாக 14 மைல்கள் நீளமான உப்புச் சுரங்கத்தில் 1800 அடி ஆழத்தில் சுவரொன்றுக்குப் பின்னால் அடக்கம் செய்தனர். 1945 ஆம் ஆண்டு ஏப்ரலில் அமெரிக்கப் படைகள் இவற்றைக் கண்டுபிடித்துச் செருமனியில் உள்ள மார்பர்க் அன் டெர் லான் என்னும் இடத்துக்குக் கொண்டு சென்றனர். 1946 ஆகத்து மாதத்தில் இன்டென்பர்க்கினதும் அவரது மனைவியினதும் உடல்கள் சென் எலிசபெத் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டன.


1945 சனவரி 21 ஆம் தேதி செருமன் படைகள் பின்வாங்கிச் செல்லுமுன்னர் இந்நினைவுச் சின்னத்தின் ஒரு பகுதியை வெடிவைத்துத் தகர்த்தனர். 22 ஆம் தேதி 30 தொன் வெடி மருந்துகளைக் கொண்டு எஞ்சிய பகுதிகளும் தகர்க்கப்பட்டன. 1952-53 காலப்பகுதியிலேயே போலந்து வீரர்கள் அழிபாடுகளை முற்றாக அகற்றினர்.

இன்றைய நிலை தொகு

120 ஏக்கர் (0.49 ச.கிமீ) பகுதியில் அமைந்திருந்த இந்த நினைவுச் சின்னம் இருந்ததற்கு அடையாளமாக இன்று ஒரு சிறிய மேடு மட்டுமே எஞ்சியுள்ளது. நிலவறை இருந்த பகுதியில் புதர் மண்டிய ஒரு சிறிய குழியும், ஆங்காங்கே எஞ்சிய கற்துண்டுகளும் காணப்படுகின்றன. இங்கிருந்து எடுக்கப்பட்ட கருங்கற்களை ஆல்சுட்டீனில் சோவியத் போர் நினைவுச் சின்னங்கள் கட்டுவதற்குப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது.