தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், 2013

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல், 2013 என்பது, தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்கள் அனைத்திற்கும் இயக்குநர்கள் மற்றும் தலைவர் போன்ற பொறுப்புகளைத் தேர்வு செய்வதற்காக 2013ல் இடம்பெற்ற தேர்தல் ஆகும்.

கூட்டுறவு சங்கங்கள் தொகு

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மற்றும் இதர செயற் பதிவாளர்களான பால்வளத்துறை ஆணையர், கைத்தறித்துறை இயக்குனர், மீன்வளத்துறை ஆணையர், தொழில் வணிகத்துறை ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இயக்குனர், சர்க்கரைத்துறை இயக்குனர், பதிவாளர் (வீட்டு வசதி), சமூக நலத்துறை இயக்குனர், கதர் கிராம தொழில்துறை ஆணையர், வேளாண்மைத்துறை இயக்குனர் ஆகிய 14 செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் 22 ஆயிரத்து 532 கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு தேர்தல் ஆணையம் தொகு

தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்த தனியாக மாநில தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டிருப்பது போல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்களை நடத்த தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு தேர்தல் ஆணையம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. இதன் ஆணையராக ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி எம்.ஆர்.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐந்து நிலைகளிலான தேர்தல் தொகு

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஐந்து நிலைகளில் நடைபெற உள்ளது. முதல் நிலையில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் தவிர இதர தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இரண்டாம் நிலையில் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், செயற் பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய வகை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. மூன்றாம் நிலையில் மத்திய கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் (தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் ஆகியவை தவிர) இதர தலைமை கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. நான்காம் நிலையில் மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி ஆகிய கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஐந்தாம் நிலையில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்திற்கு தேர்தல் நடத்தப்படுகிறது.

தேர்தல் நாட்கள் தொகு

முதல் நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள 22 ஆயிரத்து 192 சங்கங்களுக்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் நிலையில் 5 ஆயிரத்து 855 சங்கங்களுக்கும், இரண்டாம் நிலையில் 5 ஆயிரத்து 603 சங்கங்களுக்கும், மூன்றாம் நிலையில் 5 ஆயிரத்து 481 சங்கங்களுக்கும், நான்காம் நிலையில் 5 ஆயிரத்து 253 சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. முதல் நிலைத் தேர்தல் ஏப்ரல் 5 அன்றும், இரண்டாம் நிலைத் தேர்தல் ஏப்ரல் 12 அன்றும், மூன்றாம் நிலைத் தேர்தல் ஏப்ரல் 19 அன்றும், நான்காம் நிலைத் தேர்தல் ஏப்ரல் 27 அன்றும் நடைபெற உள்ளன.

ஆதாரம் தொகு

வெளி இணைப்புகள் தொகு