திதியன் என்னும் சங்க கால அரசனைப் பற்றிக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல்கள் தெரிவிக்கின்றன.

அகம் 25, 36, 45, 126, 145, 196, 262, 322, 331

அசுரரைத் திதியின் சிறார் என்பர்.[1] இவனது பெயர் இதனோடு தொடர்புடையதாகலாம்.

திதியன் பொதியமலைப் பகுதியை ஆண்ட அரசன். [2]

பொதியமலை அரசன் திதியன் வேற்படையும், தேர்ப்படையும் மிகுதியாக உடையவன்.[3]

திதியன் பாணர்களுக்குப் பல அணிகலன்களை நல்கி அவர்களுக்கு அறத்துறையாக விளங்கினான்.[4]

சினங்கெழு திதியன் தலையாலங்கானப் போரில் நெடுஞ்செழியனைத் தாக்கித் தோற்றுப்போனான்.[5]

பொதிய மலை திதியன் வேறு, அழுந்தூர் வேள் திதியன் வேறு

அன்னியை வீழ்த்தியவனும், கரிகாலனின் தாய் வழி பாட்டனும் அழுந்தூர் திதியனே.

அன்னிக்கும் திதியனுக்கும் குறுக்கைப் பறந்தலை என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் அன்னியின் காவல்மரமான புன்னையைத் திதியன் வெட்டிச் சாய்த்தான். [6]

இந்த ஊர் குறுக்கை பிற்காலத்தில் நம்மாழ்வார் பிறந்த திருக்குறுக்கை ஆகும். அப்பர் இவ்வூர்ச் சிவபெருமானைப் பாடியுள்ளார்.

அரசன் திதியனை அன்னி என்பவன் தாக்கினான். மிழலை நாட்டை நீடூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட எவ்வி திதியனைத் தாக்கவேண்டாம் என்று அன்னிக்குத் தெரிவித்தான். அன்னி எவ்வியின் சொல்லைக் கேளாமல் தாக்கிப் போரில் மாண்டான். [7]

பயறு விளைந்திருந்த வயலில் பசு ஒன்று புகுந்து தின்றுவிட்டது என்னும் குற்றத்துக்காக ஊர்முது கோசர் மன்றத்தில் கூடி மேய்வதைப் பார்க்காமல் இருந்த பசுக்காரனின் கண்ணைக் குத்தி ஊனமாக்கிவிட்டனர். கண்ணை இழந்தவனின் மகள் அன்னி மிஞிலியன். இந்த அன்னியின் கணவன் மிஞிலியன். எனவே இவளைப் பரணர் 'அன்னி மிஞிலியன்' என்று குறிப்பிடுகிறார். ஊர்முது கோசரைப் பழிக்குபழி வாங்குவதாக இந்த அன்னி சபதம் செய்துகொண்டாள். உண்கலத்தில் உணவு உண்ணாமலும், உடுத்த துணியைத் துவைத்து உடுத்தாமல் அழுக்குத் துணியையே உடுத்திக்கொண்டும் சினம் மாறாமல் விரதம் மேற்கொண்டிருந்தாள். அரசன் திதியனிடம் தன் குறையைச் சொல்லி முறையிட்டுக்கொண்டாள். திதியன் தன் பெரும் படையுடன் சென்று கண்ணைத் தோண்டிய ஊர்முது கோசரைக் கொன்றான். அன்னி மிஞிலி சினம் தணிந்தாள். [8]

சான்றுகள் தொகு

  1. பரிபாடல் 3 அடி6.
  2. செல்சமம் கடந்த வில்கெழு தடக்கை, பொதியிற் செல்வன் பொலந்தேர்த் திதியன், இன்னிசை இயத்தின் கறங்கும் கல்-மிசை அருவி (குற்றாலம்) – ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் – அகம் 25
  3. பரணர் - அகம் 322,
  4. மாமூலனார் - அகம் 331
  5. நக்கீரர் – அகம் 36
  6. வெள்ளிவீதியார் அகம் 45, கயமனார் அகம் 145
  7. நக்கீரர் அகம் 126
  8. பரணர் - அகம் 262, தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர, ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று முரண் போக்கிய, கடுந்தேர்த் திதியன் அழுந்தை, கொடுங்குழை அன்னி மிஞிலியன் இயலும் - பரணர் அகம் 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=திதியன்&oldid=2566231" இலிருந்து மீள்விக்கப்பட்டது