திருநெல்வேலி பத்திரகாளி அம்மன் கோவில்

அருள் மிகு பத்திரகாளி அம்மன் கோவில் யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள அம்மன் கோயில் ஆகும்.

ஆலயத்தின் வரலாறு தொகு

ஒரே வீதியில் வலது புறத்தில் கூப்பிடு தொலைவில் தலங்காவல் பிள்ளையார் ஆலயத்தினையும் இடது புறத்தில் கண்ணகி அம்பாள் ஆலயத்தினையும் கொண்டு நடு நாயகமாக விளங்கும் பத்திரகாளி அம்பாள் ஆலயம் உருவாகி இற்றைக்கு நூற்றி எழுபத்தாறு ஆண்டுகள் ஆகின்றன எனக் கூறப்படுகிறது.

இக்கோயில் உருவானதற்கான காரணத்தை விளக்கும் ஒரு சம்பவமும் பெரியோர் வாயிலாக வழி வழியாகக் கூறப்பட்டு வருகிறது. பொழுது சாய்ந்த வேளையில் சகோதரர் இருவர் தமது குலத் தொழிலை முடித்து வீடு திரும்பும் வேளையில் அழகு மிகுந்த தேவ கன்னிகை ஒருத்தி அவர்கள் முன் நடனமாடியாதாகவும் அதை கண்ணுற்ற அவர்கள் வியப்பும் அதிர்ச்சியும் அச்சமும் கொண்டு அக்கன்னியை பயபக்தியுடன் வழிபட்டு அன்னைக்குக் கோயில் வைப்பதாகவும் கூறிதாகவும் அவ்வாறே அவர்கள் இன்றுவரை கம்பீரமாக நின்று கிளைவிட்டுப் பூத்துக் குலுங்குகின்ற மரத்தின் கீழ் ஒரு கல்லை எடுத்து வைத்துப் பிரதிஷ்டை செய்வதாகவும் மறுநாள் காலை அவர்கள் சென்று பார்க்கையில் அக்கல்லானது அவர்களது வேலைத்தலத்தில் (கம்மாலையில்) இருக்கக் கண்டு ஆச்சரியமுற்று அவ்விடத்திலேயே சிறு கொட்டிலாக கோவிலை அமைத்தாகவும் கூறப்படுகின்றது.

இன்று அம்பாள் கோவில் கொண்டருளியுள்ள மூலஸ்தானமே அன்று அந்தக் கம்மாலை இருந்த இடமெனவும் கூறுகின்றனர்.

திருப்பணி தொகு

பல அன்பர்கள் மனமுவந்து நன்கொடையாக ஆலயத்திற்கான காணிகளை வழங்கினார்கள். இந்த இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்தே கோவில் வளர்ச்சி பெற்று வந்துள்ளதை அறிய முடிகின்றது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்த அடியார்கள் அவ்வப்பொழுது திருப்பணி வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் கோவில் மணி 1916 ஆம் ஆண்டு சின்னத்தம்பி கனகர் என்பவரினால் செய்து கொடுக்கப்பட்டது. எனவும் கோவிலில் அர்ச்சகர் ஓருவர் நியமிக்கப்படு முன்னர் நாகமணி என்பவர் சைவாசார சீலராய் பூசகராகக் கடமையாற்றி வந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பரிபாலன சபை தொகு

ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் பரிபாலனசபை முதன் முறையாக 1920, செப்டம்பர் 9 இல் ஆரம்பிக்கப்பட்டது. 1924 ஆம் ஆண்டு உள் கொட்டகையும் 1942 இல் வெளிக் கொட்டகையும் அமைக்கப்பட்டன.

1971 ஆம் ஆண்டு நிகழ்ந்த மகா கும்பாபிசேகத்தினைத் தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே கொடியேற்றத் திருவிழாவும் இரதோற்சவமும், தீர்த்தோற்சவமும் இடம் பெற்றன.

வெளி இணைப்புகள் தொகு