திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை

திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை (இ. 1972) ஒரு தமிழக நடன ஆசிரியர்.

திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை

பிறப்பு தொகு

தஞ்சாவூர் மாவட்டத்தை (தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம்) சேர்ந்த மாயவரம் தாலுக்காவில் உள்ள சிறிய கிராமமமான திருவாளப்புத்தூர். இந்த கிராமத்தில் இசை வேளாளர் சமுகத்தை சேர்ந்த பிரபல நாட்டியப் பெண்மணி திருவாளப்புத்தூர் கல்யாணி அம்மாளுக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் சுவாமிநாதபிள்ளை. இவருக்கு ஓரு சகோதரனும் இரண்டு சகோதரிகளும் உண்டு. சகோதரன் திருவாளப்புத்தூர் கிருஷ்ணமூர்த்திபிள்ளை சிறந்த வயலின் வித்துவான்; சகோதரிகள் ராஜலெட்சுமி, ஜிவரெத்தினம் இருவரும் மேடை நடனக்கலைஞர்கள்.

வாழ்க்கை தொகு

 

பள்ளிப்படிப்பில் ஆர்வம் இல்லாமையால், அதனை விட்டு விட்டு நடனக்கலையை பிரபல நடன ஆசிரியர் பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் குருகுலவாசமாக சுமார் 12 வருடங்கள் பயின்றார். நாட்டியத்தில் சிறந்த சிம்ம நந்தனம் என்ற கலையை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் முறையாகப் பயின்றவர். அவருடன் இணைந்து பல நாட்டிய நிகழ்ச்சிகளையும், பலருக்கு நாட்டியமும் பயிற்றுவித்தார். பின்னர் சென்னை சென்று வழுவூர் ராமையாபிள்ளையும் இவரும் இணைந்து பல மாணவர்களை உருவாக்கினர்.

குடும்பம் தொகு

சுவாமிநாதபிள்ளை பிரபல நடன ஆசிரியர் பொண்ணுசாமிநட்டுவனார் மகள் ஞானாம்பாளை மணந்தார். சுவாமிநாதபிள்ளைக்கு டி. எஸ். ராமலிங்கம் என்ற ஒரே மகன் உள்ளார். அவர் ஒரு சுதந்திர போராட்ட தியாகி. தியாகிகளுக்கான சலுகைகளைப் பெற மறுத்தவர். மூன்று முறை கும்பகோணத்தில் தொடர்ந்து நகர்மன்ற உறுப்பினராக இருந்தவர். சுவாமிநாதபிள்ளை, வழுவூர் ராமையாப் பிள்ளையின் தம்பி நடராஜசுந்தரம் பிள்ளையின் (இவரும் ஒரு சிறந்த மிருதங்க வித்துவான்) மகள் விஜயலெட்சுமியை தன் மகன் ராமலிங்கத்துக்கு மணம் முடித்தார். பின்பு இவர் தனியாக சென்னையிலேயே தங்கி நாட்டியப் பணியில் ஈடுபட்டார்.

உருவாக்கிய மாணவ, மாணவிகள் தொகு

இவர் பல மாணவர்களையும் மாணவிகளையும் உருவாக்கினார். பிரபலமான வழுவூர் சாம்ராஜன் சிலகாலம் இவருடைய மாணாக்கராக இருந்தவர். எல். விஜயலெட்சுமி, நடிகைகள் ஹேமாமாலினி, ஸ்ரீபிரியா, நிர்மலா விஸ்வநாதன் போன்றவர்கள் இவருடைய மாணவிகள் ஆவர்.

பட்டங்களும் விருதுகளும் தொகு

  • தமிழக அரசின் கலைமாமணி பட்டத்தை அறிஞர் அண்ணா முதல்வராக இருந்த போது பெற்றார்.
  • இந்திய அரசின் தேசிய விருதை அன்றைய குடியரசுத் தலைவர் வி. வி. கிரியிடமிருந்து பெற்றார்.
  • பாண்டிச்சேரியில் உள்ள ஜின்னாசூட் இன்ஸ்டிடியூட்டில் பரதகலா கேசரி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

மறைவு தொகு

சுவாமிநாதபிள்ளை மார்ச் 13, 1972ல் ஆண்டு இயற்கை எய்தினார்.