திரு இருதய கல்லூரி, கொடைக்கானல்

கொடைக்கானலில் உள்ள இறையியில் கல்லூரி

திரு இருதய கல்லூரி (Sacred Heart College) என்பது தமிழ்நாட்டின் கொடைக்கானலின், சென்பகனூரில் உள்ள ஒரு இறையியல் கல்லூரி ஆகும்.[1] இது 1895 இல் துவக்கபட்டது.

திரு இருதய கல்லூரி
Sacred Heart College
உருவாக்கம்1895
சார்புகிருத்துவம்
தலைவர்ஆரோக்கியம்
பணிப்பாளர்சேவியர்ராஜ்
அமைவிடம்
சென்பகனூர், கொடைக்கானல்
, ,
இணையதளம்http://shcshembag.org/index.aspx

வரலாறு தொகு

இக்கல்லூரியில் இந்திய மாணவர்களல்லாமல், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, பர்மா முதலிய நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி பயின்றனர். இது கொடைக்கானலுக்குச் செல்லும் பாதையில், சென்பகனூரில் அமைந்துள்ளது. இது உரோமன் கத்தோலிக்க திருச்சபை சமயக் கல்லூரியாகும். இக்கல்லூரி துவக்கப்பட்ட காலத்தில் பாதிக்குமேல் பிரெஞ்சு நாட்டு இளைஞர்கள் கல்வி பயின்றனர். பின்னர் உலகப் போர்களினால் வெளிநாட்டிலிருந்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தது. இக்கல்லூரி கட்டப்பட்டிருக்கும் இடம் கி. பி. 1878-ஆம் ஆண்டிலிருந்து பலதடவை சிறுசிறு பகுதிகளாக வாங்கப்பட்டது. இங்கு விவசாயப் பள்ளியும் தொழிற்பள்ளியும் நிறுவும் நோக்கத்தோடு இவ்விடம் வாங்கப்பட்டது. இங்குப் பயிரிடப்பட்ட சில பயிர்கள் சரியான விளைச்சல் இல்லாத காரணத்தால் விவசாய, தொழில் கல்லூரிகள் நடத்தும் எண்ணம் கைவிடப்பட்டது. பிறகு இப்பொழுது உள்ள சமயக் கல்லூரி துவக்கப்பட்டது.[2]

கல்வி தொகு

இங்கு எட்டாண்டுக்கல்வி எல்லாருக்கும் பயிற்றப்படுகின்றது. முதல் இரண்டாண்டு, சமயவாழ்வில் ஆழ்ந்த பற்றுக் கொள்ளும் வகையில் மாணவர்கள் பயிற்றப்படுகிறார்கள். பிறகு மூன்றாண்டுகள் இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகளில் அறிவு பெறுகிறார்கள். பல தாய்மொழிகளைப் பேசும் மாணவர்கள் இங்குக் கூடுவதால் பொதுவாக ஆங்கிலமும், இலத்தீனும் பேச்சு மொழியாகவும் கற்பிக்கும் மொழியாகவும் பயன்படுகின்றன. கடைசி மூன்றாண்டுகளும் மெய்யியல் ஆராய்ச்சியிலே கழிகின்றன, கிரேக்க உரோம நாட்டுப் பெரியார்களின் பழமையான தத்துவங்களும், இந்திய நாட்டுத் தத்துவங்களும், மேலை நாட்டுத் தத்துவங்களும் கற்பிக்கப்படுகின்றன. கல்லூரியில் வரலாறு படித்தவர்கட்கு இங்கு அறிவியலும், அறிவியல் படித்தவர்கட்கு வரலாறும் கற்பிக்கப் படுகின்றன. இவ்வாறு எட்டாண்டுக் கல்வி முற்றுப் பெற்றதும், அம்மாணவர்கள் பூனாவிற்கோ, குர்சியாங்கிற்கோ செல்ல வேண்டும். அங்கு, நான்காண்டுச் சமயக் கல்வியும், பாதிரித் தொழிலுக்கேற்ற ஓராண்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன.[2]

அருங்காட்சியகம் தொகு

சென்பகனூர் அஞ்சல் நிலையத்திற்கு அருகில் இக்கல்லூரியினால் நடத்தப்படும் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. இங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட புதைபொருள்களும், பழனி மலையிலுள்ள தாவர வகைகளும், விலங்குகளும், பலவகையான பாம்புகளும், பட்டாம்பூச்சிகளும், அந்துப்பூச்சிகளும் பதப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மண்ணில் உள்ள புதைபொருள்களைத் தேடியெடுத்து ஆராய்வதில், இக்கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் ஊக்கமுள்ளவர்களாக உள்ளனர்.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "இயற்கையை பாதுகாப்போம் குறித்த கருத்தரங்கு". செய்தி. தினமணி. 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2020. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. 2.0 2.1 2.2 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 203-268". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.