தெற்கின் விண்மீன்

1853 சூலையில் பிரேசிலில் கண்டறியப்பட்ட ஒரு வைரம்

தெற்கின் விண்மீன் (Star of the South) எஸ்ட்ரேலா டூ சுல் (Estrela do Sul) என்றும் அறியப்படுவது 1853 சூலையில் பிரேசிலில் கண்டறியப்பட்ட ஒரு வைரம் ஆகும்.[1] தலையணை வடிவில் வெட்டப்பட்ட இந்த வைரத்தின் எடை 128.48 காரட்டுகள் (25.696 g) ஆகும். இந்த வைரமானது IIa வகை வைரமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது இளஞ்சிவப்பு-பழுப்பு நிற ஒளி கொண்டது. இந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டபோது 254.5 காரட்டுகள் (50.90 g) எடை கொண்டதாக இருந்தது. பின்னர் இது பரோடாவின் மகாராஜா மல்ஹர் ராவ் உள்ளிட்ட பல கைகளுக்கு மாறியது. கடைசியாக இது 2002இல் மும்பையைச் சேர்ந்த ரஸ்டிஜ் ஜாம்செட்ஜியால், பிரெஞ்சு ஆடம்பர நகைக்கடைக்காரர் கார்டியருக்கு விற்கப்பட்டது.[2] இந்த வைரத்தின் பிரதிபலிப்பு ஒளி வெண்மையாகவும், ஒளிவிலகல் வெளிச்சமானது ரோஜா நிறத்திலும் உள்ளது. இந்த வைரத்தின் இயல்பான ஒளியானது இளஞ்சிவப்பு-பழுப்பு நிறம் ஆகும்.

மியூனிக்கின் ரீச் டெர் கிறிஸ்டல் அருங்காட்சியகத்தில் உள்ள தெற்கின் விண்மீனின் பிரதி

வரலாறு தொகு

இந்த வைரமானது 1853இல் மடி மகாசா என்ற வைரச் சுரங்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சுரங்கமானாது தற்போதைய பிரேசிலின் பாகேஜ் ஆற்றை ஒட்டி உள்ள எஸ்ட்ரேலா டூ துல் நகரில் உள்ள வைரச் சுரங்கம் ஆகும். இந்த வைரத்தைக் கண்டுபிடித்த அடிமை தன் கண்காணிப்பாளரான காசிம்ரோ டி மொராசிடம் அதை ஒப்படைத்தார். இதையடுத்து அந்தப் பெண்ணுக்குப் பணம், உடை, தங்குவதற்கு வீடு போன்றவற்றவையும், வாழ்நாள் ஓய்வூதியத் தொகையுடன், விடுதலையையும் அளிக்கப்பட்டது. இந்த வைரமானது காசிம்ரோ டி மொராசால் 3,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டது. அதை வாங்கிய முதல் நபர், ரியோ டி ஜெனிரோவில் இன்னொரு நபருக்கு 30,000 பவுண்டுக்கு விற்றார்.[1]

வெட்டப்படாத இந்த வைரமானது பல கைமாறி ஆம்ஸ்டர்டாமில் ஒரு நபரிடம் 35,00000 பவுண்டுக்கு விற்கப்பட்டது.[2] பின்பு இது வூய்செர்கேர் என்ற கலைஞரால் தலையணை போன்ற வடிவத்தில் அழகாக வெட்டப்பட்டது. கோஹினூர் வைரத்தை வெட்டி சீரமைத்து புகழ்பெற்ற இருவரில் இவர் ஒருவராவார்.

பாரிசில் புகழ்பெற்ற வைர வியாபாரிகளான ஹால்ஃபென் நிறுவனத்தார், அதை வாங்கிக் கொண்டார்கள். அதற்கு தெற்கின் விண்மீன் ( Estrela do Sul, அல்லது Star of the South) என்று பெயர் சூட்டினர். இந்த வைரமானது 1862 இல் கிரேட் லண்டன் கண்காட்சியிலும், பின்னர் 1867 இல் பாரீசில் பன்னாட்டுக் கண்காட்சியிலும் வைக்கப்பட்டது. இந்த இரு கண்காட்சிகளிலும் இது பலரின் கவனத்தை ஈர்த்தது. இந்த வைரமானது பின்னர் இந்தியாவின் ஒரு வைர வணிகரின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு நடந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் ஒரு மகாராஜாவிற்கு 110,000 பவுண்டு விலைக்கு விற்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. எனினும், இந்த பேரம் வெற்றிகரமாக முடியாமல், வைரம் ஹால்பென் மற்றும் அசோசியேட்ஸ் நிறுவனத்துக்கு திரும்பியது.

இது இந்தியாவில் இருந்த சமயம் பரோடா அரச குடும்பத்தின் இளவரசரான மல்ஹர் ராவ் இந்தக் கல்லைப் பற்றி அறிந்தார். பின்னர் மல்ஹர் ராவ் சார்பாக இங்கிலாந்தில் இந்த வைரத்துக்கு விலை பேசப்பட்டு, 80,000 பவுண்டுக்கு வாங்கப்பட்டது. அதன்பிறகு தெற்கின் விண்மீனானது பரோடா சமஸ்தானக் குடும்பத்தினரிடம் பல ஆண்டுகள் இருந்தது. பிற்காலத்தில் 78.5 காரட் (15.70 கிராம்) ஆங்கில ட்ரெஸ்டீன் வைரத்துடன் ஒரு கழுத்தணியில் பதிக்கப்பட்டது.

தெற்கின் விண்மீன் வைரமானது பிறகு மும்பையைச் சேர்ந்த ரஸ்டிஜ் ஜாம்செட்ஜியால், வாங்கப்பட்டு 2002ஆம் ஆண்டு விற்கப்பட்டது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 W. Jones (1880-04-11). "The Star of the South" (.pdf). History of Precious Stones (The New York Times). https://timesmachine.nytimes.com/timesmachine/1880/04/11/98894811.pdf. பார்த்த நாள்: 2008-11-02. 
  2. 2.0 2.1 2.2 Rupera, Prashant (2007-03-28). "Gaekwad's Star of the South diamond sold". The Times of India இம் மூலத்தில் இருந்து 2012-10-22 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022035253/http://articles.timesofindia.indiatimes.com/2007-03-28/india/27880016_1_diamond-cartier-sangramsinh. பார்த்த நாள்: 2008-11-02. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்கின்_விண்மீன்&oldid=3217153" இலிருந்து மீள்விக்கப்பட்டது