தொடர்முறை மின்னணு அமைப்புகள்

வழக்கமாக இரு வேறுபட்ட நிலைகளை மட்டுமே கொண்ட எண்ணிமக் மின்னணு குறிகைகளுக்கு (Digital Electronic signals) மாறாக, தொடர்ந்து மாறுபடும் குறிகையைக் கொண்ட மின்னணு அமைப்புகள் தொடர்முறை மின்னணு அமைப்புகள் (Analog Electronics) என அழைக்கப்படுகின்றன.

தொடர்முறை குறிகைகள் (Analog signals) தொகு

தொடர்முறை குறிகையானது தகவலைத் தெரிவிக்க ஊடகத்தின் சில பண்புகளைப் பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அனராய்டு வளி அழுத்தமானி (Aneroid Barometer) வளி அழுத்த மாற்றத்தை தெரிவிக்க ஊசியின் கோணநிலையை பயன்படுத்துகிறது. குறிகையாக மின்னழுத்தம்,மின்னோட்டம்,அதிர்வெண் மற்றும் மொத்த மின்னூட்டம் ஆகியவற்றை மாற்றுவதன் மூலமாக மின் குறிகைகள் தகவலை தெரிவிக்கின்றன. ஒரு வகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்றும் ஆற்றல் மாற்றி (Transducer), தகவலை ஒலி,ஒளி,வெப்பநிலை,அழுத்தம்,நிலை போன்ற இயல் வடிவங்களிலிருந்து மின் குறிகையாக மாற்றச்செய்கிறது (எ.கா. ஒலிப்பெருக்கி).

இந்த குறிகைகள் கொடுக்கப்பட்ட வீச்சிலுள்ள ஏதாவது ஒரு மதிப்பை பெறுகின்றன. ஒவ்வொரு தனி குறிகை மதிப்பும் வெவ்வேறு தகவல்களைக் குறிக்கின்றன.குறிகையில் ஏற்படும் மாற்றங்கள் வெவ்வேறு அர்த்தமளிக்கின்றன. குறிகையின் ஒவ்வொரு மட்டங்களும் ஒரு நிகழ்வின் வெவ்வேறு மட்டங்களை குறிக்கின்றன. எடுத்துக்காட்டாக, வெப்பநிலையைக் குறிக்கும் மின்குறிகையை எடுத்துக்கொண்டால் ஒரு வோல்ட் ஒரு டிகிரி செல்சியஸை குறிக்கும் பொழுது, 10 வோல்ட் 10 டிகிரி செல்சியஸையும் 10.1 வோல்ட் 10.1 டிகிரி செல்சியஸையும் குறிக்கின்றன.