தோடர்

பழங்குடியினர்

தோடர்கள் (Todas) அல்லது தொதவர்[2] என்பவர்கள் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1,600 பேர் மட்டும் பேசக்கூடிய ‘தொதவம்’ என்ற மொழியைக் கொண்ட சிறு பழங்குடி இனத்தவர் ஆவர்.

தோடர்
Todas
1909 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட தோடா இனப்பெண்ணின் புகைப்படம்
மொத்த மக்கள்தொகை
(~2,002 (2011 கணக்கீட்டின்படி)[1])
மொழி(கள்)
தோடா மொழி
சமயங்கள்
இந்து சமயம் மற்றும் மரபற்ற நம்பிக்கைகள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கோத்தர், காடர்

ஆய்வாளர்கள் இவர்களைத் ‘தோடா’ என்றே பதிவுசெய்துள்ளனர். ஆனால் எந்தத் தொதவரும் தம்மைத் ‘தோடா’ என்று சொல்லிக்கொள்வதில்லை. மாறாகத் தூதா, தொதவா, ஒள் என்றே குறிப்பிட்டுக் கொள்கின்றனர்.[3] தொதவர் என்பதற்குப் பொருள் ‘மக்கள்’ என்பதாகும். தோடர்கள் தாம் வாழும் இடத்தை மந்து என்று கூறுகின்றனர். இம்மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக எருமையின் குழந்தைகள் என அழைப்பர்.[4] இவர்களுடைய வீடு, கோயில் போன்றவை அரைவட்ட வடிவமானவை. வீடுகளின் நுழைவாயில் மிகமிகச் சிறியது. நன்கு குனிந்துதான் உள்ளே செல்ல முடியும். குளிரைத் தவிர்ப்பதற்கும் விலங்குகள் உள்நுழையாமல் தடுப்பதற்கும் இந்த ஏற்பாடு எனப்படுகிறது. இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இந்த மக்களுடைய மொழி மிக விரைவாக அழிந்துவரும் மொழிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள். இவர்கள் நீலகிரியின் பைகாரா ஆற்றை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர்.[5]

மரபு வழியும், உடல் தோற்றமும் தொகு

தோடர்களின் தோற்றத்தையும், உடலமைப்புகளையும் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலதிறப்பட்ட செய்திகளைக் கூறுகின்றனர். இவர்களுடைய மூக்கு உரோமானிய இனத்தாருடையதைப் போன்றது; முகச் சாயல் கிரேக்க இனத்தைச் சார்ந்தது. எனவே ஆராய்ச்சியாளர்கள் இவ் வினத்தாரை ரோமானியர்களோடும், கிரேக்கர்களோடும் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர். நீண்ட மேலாடை போர்த்துக்கொண்டிருப்பதால் இவர்கள் ஈப்ரு இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சிலர் எண்ணுகின்றனர். சமவெளி மக்களால் துரத்தப்பட்டு, இம் மலைகளில் தஞ்சம் புகுந்த சிதியர் இனத்தாரே இவர்கள் என்று கூறுவோரும் உண்டு. தோடர்களின் சமயச் சடங்குகளில் பாடப்படும் பாடல்களை ஆராய்ந்த கிரேக்க நாட்டு ஆராய்ச்சியாளரான எச். எச், பிரின்ஸ் பீட்டர் (H. H. Prince Peter) என்பார், சுமேரியர்கள் வழிபட்ட கடவுளரின் பெயர்களும், அக் கடவுளர்களைப் பற்றிய செய்திகளும், இவர்களுடைய கடவுளர்களையும், செய்திகளையும் ஒத்திருக்கின்றன என்று கூறுகிறார். எனவே தோடர்கள் சுமேரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்று அவர் எண்ணுகிறார். ரிவெர்ஸ் என்பார், கேரளத்து மலையாள மக்களின் பண்பாட்டோடு, இவர்கள் பண்பாடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதை விளக்கப் பல சான்றுகள் காட்டுகின்றார். மேலும் தோடர்கள் நீண்ட காலத்திற்கு முன் (சுமார் 800 ஆண்டுகட்குமுன்) கேரளத்திலிருந்து இங்கு வந்திருக்க வேண்டும். ஆகையினால் தான் தோடர் மொழி தமிழ் மொழியோடு நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது எனப்படுகிறது.[6]

தோடர்குல ஆண்மகனின் சராசரி உயரம் 5 அடி 7 அங்குலம். பெண்களின் உயரம் 5 அடி 1 அங்குலம். சமவெளியிலுள்ள மக்களைவிட அழகிய நிறத்தைப் பெற்றிருக்கிறார்கள். வடித்தெடுத்த சிலை போன்ற உடற்கட்டுடையவர்கள். ஆண்கள் தலையில் அடர்த்தியான மயிரைப் பெற்றிருக்கின்றனர். பெண்கள் தங்களுடைய கூந்தலை வெண்ணெயிட்டு நீவி, உருண்டையான குச்சியில் சுருள்களாகச் சுற்றிப் பக்கங்களில் தொங்க விட்டிருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் மொத்தமான போர்வையொன்று மட்டும் போர்த்துக்கொண்டிருக்கின்றனர். அப் போர்வை வெண்மை நிறமானது. ஓரங்களில் சிவப்பும் நீலமும் கலந்த வண்ணக் கரைகளையுடையது. இப் போர்வையைப் 'புட்குலி' என்று கூறுகின்றனர். இப் போர்வையைக் கழுத்திலிருந்து பாதங்கள் வரையில் போர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆண்கள் கோவணம் அணிகின்றனர்.[6]

தோடர்கள் பண்பாடும், பழக்கவழக்கங்களும் தொகு

தோடர்கள் தாங்கள் வணங்கும் தெய்வமான கம்பட்ராயன் சிந்திய வியர்வையிலிருந்து தோன்றியவர்கள் என்று நம்புகின்றனர். நாவல் மரத்தை, புனிதமான மரமாக மதிக்கின்றனர். தாங்கள் வாழும் குடியிருப்பை மந்து என்று அழைக்கின்றனர்.[7]

தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர்.

தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர்.

தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார்.

தோடரின மக்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடைக்கு பூத்துக்குளி என்று பெயர். விழாக் காலங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டு தோடர் மக்கள் பங்கேற்பர். பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நிற நூலால் பூ வேலைப்பாடுகள் கொண்டிருக்கும். தோடர் இனப் பெண்கள் கையால் பின்னும் பூத்துக்குளி உடைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.[8]

மண உறவு தொகு

இவர்கள் முற்காலத்தில் பல கணவர் மணமுறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு.[சான்று தேவை]

பண்டிகை தொகு

இவர்களின் வாழ்விடச்சூழலில் அதிக பங்கு வகிக்கும் எருமைகள் விருத்தி அடைய வேண்டி திசம்பர் மாதம் மொற் பண்டிகை கொண்டாடுகிறார்கள். இதற்காக உதகையின் தலைகுந்தா அருகில் அமைந்துள்ள முத்தநாடு என்ற இடத்தில் மூன்போ என்றழைக்கப்படும் கூம்பு வடிவ கோயில் மற்றும் ஓடையாள்போ என்ற கோயில்களில் ஆண்கள் அனைவரும் கூடி சிறப்பு வழிபாடு நடத்துவர்.[9]

படங்கள் தொகு

மேலும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  • அ.கா.பெருமாள். (2005). தமிழகப் பழங்குடிகள். மனோரமா இயர்புக் 2005, 302-318.
  • முனைவர் சு.சக்திவேல், தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள், மணிவாசகர் பதிப்பகம், சென்னை-108, முதற்பதிப்பு: 1998

மேற்கோள்கள் தொகு

  1. "A-11 Individual Scheduled Tribe Primary Census Abstract Data and its Appendix". www.censusindia.gov.in. Office of the Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2017-11-03.
  2. சு. தியடோர் பாஸ்கரன் (23 சூன் 2018). "தொதுவர்களின் மீட்பர்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2018.
  3. ஒய்.ஆண்டனி செல்வராஜ் (13 ஆகத்து 2018). "அழிந்துவரும் பூர்வீகக்குடி மக்களான தொதவர் இசை மொழி: 'யுனெஸ்கோ' தகவலால் வரலாற்று ஆர்வலர்கள் கவலை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 14 ஆகத்து 2018.
  4. ., சு. சக்திவேல் (1998). தமிழ்நாட்டுப் பழங்குடி மக்கள். சென்னை: மணிவாசகர் பதிப்பகம். 
  5. நீலகிரி சுற்றுலா மலர்; ஆசிரியர் வெ.நிர்மலா; மாஸ் மீடியா குரூப்; 1987
  6. 6.0 6.1 "தமிழகத்தில் குறிஞ்சி வளம், நூல், கவிஞர் முருகு சுந்தரம், பக்கம், 95-208". பழனியப்பா பிரதர்ஸ். பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2020.
  7. ந.வினோத் குமார் (3 நவம்பர் 2018). "தோடர் அல்ல, தொதவர்". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2018.
  8. "பூத்துக்குளி: தோடர்களின் எம்பிராய்டரிக்கு புவிசார் குறியீடு".இந்து தமிழ்
  9. எருமைகள் விருத்தி அடைய வேண்டி தோடர்கள் கொண்டாடும் ‘மொற் பர்த்’பண்டிகை, தி இந்து தமிழ் 21 டிசம்பர் 2015

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோடர்&oldid=3577581" இலிருந்து மீள்விக்கப்பட்டது