த கைட் ரன்னர்

த கைட் ரன்னர் (The Kite Runner): பட்டம் தேடி ஓடுபவன் என்ற பொருளுடைய தலைப்பைக் கொண்டது ஒரு ஆங்கில நூல். ஆப்கானிய-அமெரிக்கரான காலித் ஹுசைனியால் எழுதப்பட்ட முதல் புதினம். ஒரு ஆப்கானியரால் முதன்முதலில் ஆங்கிலத்தில் பிரசுரிக்கப்பட்ட புதினம் இதுவாகும்[1]. ரிவர்ஹெட் புக்ஸ் நிறுவனத்தினரால் இந்நூல் 2003ம் ஆண்டு வெளியிடப்பட்டது.

த கைட் ரன்னர் புத்தக அட்டை, ISBN 1-57322-245-3 (முதல் அச்சு, கடின அட்டை), ISBN 1-59448-000-1 (காகித அட்டை)

கதைக்கரு தொகு

காபூலின் வசீர் அக்பர் கான் பகுதியைச் சேர்ந்த பாஷ்டூன் இனச் செல்வக் குடும்பமொன்றில் பிறந்த அமீர் எனும் பையனைப் பற்றிய கதையைச் சொல்கிறது இந்நூல். தனது சிறு பருவத் தோழனும் தந்தையின் ஹசரா இன வேலையாளின் மகனுமான ஹசனுக்கு இழைத்த நம்பிக்கைத் துரோகம் அமீருக்குக் குற்றவுணர்வைத் தருகிறது. ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்குமான மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி எனும் அமளியான காலகட்டங்களில் இக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது

கதை மாந்தர் தொகு

  • அமீர் - பாஷ்ட்டுன் இன செல்வக் குடும்பத்தைச் சேர்ந்த பையன்
  • ஹசன் - அமீரின் தந்தையின் ஹஸரா இன வேலையாளின் மகன்
  • ஆசிவ் - அமீரின் வாழ்விடத்தைச் சேர்ந்த முரட்டுப் பையன்
  • பாபா - அமீரின் தந்தை
  • அலி - அமீரின் தந்தையின் ஹசரா இன வேலையாள்
  • ரகீம்கான் - பாபாவின் நண்பர்
  • சொராயா - அமீரின் மனைவி
  • சோராப் - ஹசனின் மகன்
  • சனவ்பார் - அலியின் மனைவி. ஹசனின் தாய்
  • பரீட் - ஆப்கானிஸ்தானுக்கு அமீர் மீளும் போது உதவியாக அமைபவன்

கதைச் சுருக்கம் தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கதை அமீரின் பார்வையில் சொல்லப்படுகிறது. அமீர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வாழும் ஒரு ஆப்கானியன். 1970-களிலான தன் சிறுவயது ஞாபகங்களை அசைபோடுகிறான்.

ஞாபகங்களைச் சொல்லும் போது, போருக்கு முந்திய ஆப்கானிஸ்தானிலிருந்து ஆரம்பிக்கிறான். சிறுவயதில் அமீரும் ஹசரா இன வேலைக்காரச் சிறுவனுமான ஹசனும் நாட்களை ஒன்றாகவே கழிக்கின்றனர். அமீரின் விருப்பமான நினைவுகளில் ஒன்றாக அவன் ஒரு மாதுளை மரத்தின் கீழிருந்து ஹசனுக்குக் கதைகளைக் கூறுவது இருக்கிறது. இறந்து போன தாயைப் போலவே அமீருக்கு இலக்கியங்களில் ஈடுபாடு இருக்கிறதைக் கண்டு அவனது தந்தை தன்னைப் போல விளையாட்டு வீரனாக துடிப்புள்ளவனாக அமீரை ஆக்க எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன. தனது எழுத்தார்வத்தைத் தொடரும் அமீர் பல சிறுகதைகளை எழுதுகிறான். அவற்றில் தந்தை ஈடுபாடு காட்டாத போதும் தந்தையின் நண்பரான ரகீம்கான் அமீரைப் பாராட்டுகின்றார்.

காபூலில் ஒரு நாள் அமீரும் ஹசனும் சுற்றுகையில் ஆசிவ்வைச் சந்திக்கின்றனர். ஆசிவ் ஹசரா இனத்தவர் மேல் வெறுப்புக் கொண்ட முரட்டுக் குணமுள்ள பையன். அமீரைச் சண்டைக்கு இழுக்கும் ஆசிவ்வை ஹசன் உண்டிவில்லால் அடித்து ஒற்றைக்கண் ஆசிவ் என அறியப்பண்ணுவதாகச் சொல்கிற போது ஆசிவ் பின்வாங்குகிறான். ஆனாலும் மீண்டும் தாம் சந்திப்போம் எனச் சொல்கிறான். ஆப்கானிஸ்தானின் விருப்ப விளையாட்டான பட்டம் விடும் விளையாட்டு நடக்கையில் ஆசீவ்வின் பயமுறுத்தல் உண்மையாகிறது.

அமீர் இப்போட்டியில் வெற்றியையும் தந்தையின் பாராட்ம் பெறுகிறான். விருதாகக் கருதப்படும் அமீரின் பட்டத்தைத் தேடிச் செல்லும் ஹசன் ஆசிவ்வையும் அவனது இரு தோழர்களையும் எதிர் கொள்ள நேர்கிறது. ஹசன் ஆசிவ்விடம் அடிவாங்கி அவனால் வன்புணரப்படுகிறான். இதைக் காணும் அமீர் பயத்தினால் உதவ முன்வராமல் ஒளிந்திருந்து பார்க்கிறான். இதைத் தொடர்ந்து ஹசன் உற்சாமின்றிக் காணப்படுகிறான். ஏனென்று அமீருக்குத் தெரிந்திருந்தாலும் அதை இரகசியமாயே வைத்திருக்கிறான். ரகீம்கானிடமிருந்து ஒரு கதையைக் கேள்விப்படும் அமீர் ஹசன் வெளியேறுவதே நல்லதென்று நினைத்து ஹசன் மேல் களவுக்குற்றம் சுமத்துகிறான். ஹசன் அதனை ஒத்துக் கொண்டாலும் அமீரின் தந்தை ஹசனை மன்னித்து விடுகிறார். ஆனாலும் அவருக்கு மனவருத்தம் தரும் வகையில் அலியும் ஹசனும் வீட்டை விட்டு நீங்குகின்றனர். இது நடந்து கொஞ்ச நாட்களில் ரஷ்யப்படை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கிறது. அமீரும் தந்தையும் அமெரிக்காவிற்குத் தப்பிச் செல்கின்றனர். ஒரு சிறு வீட்டில் குடியிருக்கின்றனர். தந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வேலைக்குப் போகிறார். பாவித்த பொருட்களை சந்தையில் கொண்டு விற்பதன் மூலம் மேலதிகமாக ஒரு சிறு வருமானத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். அங்கே சொராயாவைச் சந்திக்கும் அமீர் அவளை விரும்பி திருமணம் செய்து கொள்கிறான். அமீரின் தந்தை நுரையீரற் புற்றுக் காரணமாய் இறக்கிறார். அமீருக்கும் சொராயாவுக்கும் தம்மால் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள முடியாதெனத் தெரிய வருகிறது.

அமீர் ஒரு வெற்றிகரமான எழுத்தாளனாகித் தனது முதற் புதினத்தை வெளியிடுகிறான். ரகீம்கானின் தொலைபேசி அழைப்பை அடுத்து அவரைச் சந்திக்க பாகிஸ்தானுக்குச் செல்லும் அமீர், தலிபானால் ஹசனும் அவனது மனைவியும் கொல்லப்பட்டதாயும் ஹசன் தனது தந்தைக்கும் அலியின் மனைவிக்கும் பிறந்தவன் எனவும் அறிகிறான். ஹச்னின் மகனான் சோராபை ஒரு அனாதை இல்லத்திலிருந்து மீட்குமாறு ரகீம்கான் வேண்டுகிறார். தன் வாழ்நாள் முழுவதும் தான் ஏமாற்றப்பட்டிருப்பதைக் குறித்துக் கோவம் கொண்டிருந்தாலும் தலிபான் கட்டுப்பாட்டிலிருக்கும் காபூலுக்கு சோராபைத் தேடும் முகமாக அமீர் செல்கிறான்.

தேடுகையில், சோராப் ஒரு தலிபான் அதிகாரிக்கு அடிமையாக விற்கப்பட்டதும் அவ்வதிகார் சோராபை சிறுமியர் போல அலங்கரித்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்துவதையும் அறிகிறான் அமீர். அந்தத் த்லிபான் அதிகாரியைச் சந்திக்கும் அமீர், அவன் ஆசிவ் என அறிகிறான். அமீர் தன்னைச் சண்டையில் வென்றால் சோராபை விடுவிப்பதாக ஆசிவ் சொல்கிறான். ஆசிவ் அமீரை படுகாயப்படுத்தினாலும் ஆசிவ்வின் மீதான சோராபின் தாக்குதலால் உயிர் தப்புகிறான். ஆசிவ், கண் தாக்குதலுக்கு உட்பட்டதையடுத்து ஹசன் சிறு வயதில் பயமுறுத்தியது போல ஒற்றைக் கண் ஆசீவ்வாக ஆக்கப்படுகிறான். காவலர்கள் ஆசிவ்வுக்கு உதவுகையில் சோராபும் அமீரும் தப்பிச் செல்கின்றனர்.

சோராபைத் தத்தெடுக்க விரும்பும் அமீர் அதற்கான நடைமுறைகளில் இடர்களை எதிர் கொள்ளும் போது, தான் அமெரிக்கா சென்று தேவையான ஒழுங்குகள் செய்யும் வரை சோராப் ஆப்கானிஸ்தானிலேயே இன்னும் சற்றுக்காலம் இருக்க வேண்டி வரும் என சோராபிடம் சொல்கிறான். தனது முந்தைய அனுபவங்களால் பயந்து போயிருக்கும் சோராப் தற்கொலைக்கு முயற்சிக்கிற போதிலும் தக்க் நேரத்தில் அமீரினால் கண்டெடுக்கப்பட்டு காப்பாற்றப் படுகிறான். சோராபும் அமீரும் அமெரிக்கா செல்கின்றனர். உள்ளத்தள்வில் பாதிக்கபட்டிருக்கும் சோராப் பேச மறுக்கிறான். ஒரு பட்டம் விடும் போட்டியின் போதே சோராபின் இவ்விறுக்கம் தளர ஆரம்பிக்கிறது. ஒரு கடைவாய்ப் புன்னகையை சோராப் சிந்துவாதாயும் அதை முழுமனதோடு அமீர் பெற்றுக் கொள்கிறான். ஹசனின் பட்டம் விடும் தந்திரங்களில் ஒன்றைப் பிரயோகித்து சோராபின் பட்டத்தை வெற்றி பெறச் செய்கிறான் அமீர்.

திரைப்பட ஆக்கம் தொகு

இக்கதை திரைப்படமாக ஆக்கப்பட்டுள்ளது. 2006 டிசம்பர் மாதம் படப்பிடிப்பு நிறைவுற்றது. 2007 நவம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

இதில் காலித் அப்தல்லா, ஹுமாயூன் எர்ஷாதி மற்றும் அகமத் மஹ்மிட்சதா என்போர் நடித்திருக்கிறார்கள். படத்தில் தமது பாத்திரங்கள் குறித்து ஆப்கானிஸ்தானின் எதிர்விளைவு எப்படியிருக்குமோ எனக் குழந்தை நடிகர்கள் தயக்கமுறுவதாக அறியப்படுகிறது.

வெளியிணைப்புக்கள் தொகு

அடிக்குறிப்புகள் தொகு

  1. "The Kite Runner". World Literature Today 78 (3/4): 148. September/December 2004.  - (ஆங்கில மொழியில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_கைட்_ரன்னர்&oldid=3665476" இலிருந்து மீள்விக்கப்பட்டது