நவநீத நடனார்

நவநீத நடனார் என்பவர், தமிழ்ப் பிரபந்தங்களைப் பற்றிக் கூறும் நவநீதப் பாட்டியல் என்னும் நூலை எழுதிய ஒரு புலவர் ஆவார். இவரது நூலுக்கு எழுதப்பட்ட உரை ஒன்றில் இவர் நவநீத நாட்டினர் என்று குறிக்கப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நாடு ஒன்று இருந்தது பற்றியோ அல்லது எங்கு இருந்தது என்பது பற்றியோ தகவல்கள் இல்லை.

விட்டுணுவின் பக்தர் எனப் பொருள்படும் "அரிபத்தர்" என்னும் சொல்லினால் நவநீதப் பாட்டியலின் உரை இவரைக் குறிப்பிடுவதனாலும், நவநீதன் என்பது திருமாலின் ஒரு அவதாரமான கண்ணபிரானைக் குறித்து நிற்பதாலும், காப்புச் செய்யுள் விட்டுணுவைக் குறித்து இருப்பதாலும் இவர் வைணவர் என்று கருதப்படுகின்றது. இவரது நூலின் சிறப்புப் பாயிரத்தில்,

"...........................................................................
பாட்டிய லானவை யெல்லாந் தொகுத்துப் பயன்படவே
நாட்டிய வேதத் தவனவ நீத நடனென்பரே"

என்று வருகிறது. இதில், "நாட்டிய வேதத்தவன்" என்பதற்கு நிலை நிறுத்திய மறையவன் என்னும் பொருள் கொண்டு இவர் ஒரு பிராமணர் என்ற கருத்து உண்டு. அதே நேரம், "நாட்டிய வேதத்தவன்" என்பதற்கு "நாட்டியம் தொடர்பான வேதம் சார்ந்தவன்" எனப்பொருள் கொண்டு இவர் ஒரு நட்டுவராக (நட்டுவாங்கம் செய்பவராக) இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

உசாத்துணைகள் தொகு

  • கலியாண சுந்தரையர், எஸ்., கணபதி ஐயர், எஸ். ஜி. (பதிப்பாசிரியர்கள்), கலித்துறைப் பாட்டியல் என்னும் நவநீதப் பாட்டியல் நவநீத நடனார் இயற்றியது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நவநீத_நடனார்&oldid=2717823" இலிருந்து மீள்விக்கப்பட்டது