நீண்ட பயணம் (புதினம்)

நீண்ட பயணம் செ. கணேசலிங்கனின் முதல் புதினமாகும். இது ஈழத்து புதினங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இதன் முதற் பதிப்பு 1965 ல் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் இரண்டாவதாக எழுதிய புதினம் சடங்கு (1966). மூன்றாவதாக எழுதிய புதினம் செவ்வானம்(1967). இம்மூன்று புதினங்களும் ஒரே குழுவைச் சேர்ந்த (Trilogy) ஒரே பிராந்தியத்தை, யாழ்ப்பாணத்தைக் கதைக் களமாகக் கொண்ட நாவல்கள் என்றும் நிலமானிய அமைப்பில் இருந்து முதலாளித்துவ அமைப்புக்கு மாறும் சமுதாயத்தைச் சித்தரிக்கின்ற புதினங்களாக உள்ளன என்றும் க. கைலாசபதி குறிப்பிடுகிறார். இது வரை வெளிவந்துள்ள தலை சிறந்த பத்து நாவல்களின் பட்டியலிலே நீண்டபயணம், செவ்வானம் ஆகிய நாவல்கள் முதலிடத்தைப் பிடிக்க வல்லன என்று நா. சுப்பிரமணியம் ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம் [1] என்ற நூலில் குறிப்பிடுகிறார். கணேசலிங்கனின் நீண்டபயணம் ‘ மார்க்சிய நோக்குடைய சாதிப்பிரச்சனையைக் கூர்மைப்படுத்துகின்றது’ என்றும் ‘ ஒப்பீட்டு ரீதியில் யதார்த்த பாங்கு, பேச்சு மொழி, பாத்திர வார்ப்பு முதலான அம்சங்களில் சிறந்து விளங்குகிறது’ என்றும் செ. யோக ராசா [2] கூறுகிறார். இலங்கை அரசாங்கத்தின் 1966 ம் ஆண்டிற்கான சாகித்திய அக்கடமி விருதை நீண்ட பயணம் பெற்றுள்ளதாக லறீனா ஏ ஹக் என்பார் குறிப்பிடுகின்றார் [3]

கதையமைப்பு தொகு

இப்புதினத்தின் முதன்மைப் பாத்திரம் பள்ளர் வகுப்பைச் சார்ந்த செல்லத்துரையன் என்ற இளைஞனின் பாத்திரமே. கல்வியறிவு மறுக்கப்பட்டு தென்னை மரத்தில் இருந்து கள் இறக்கி அதை விற்றுப்பிழைப்பதே இவனது தொழில்.குரும்பையூர் அரசமரத்தடி எட்டாம் நாள் திருவிழாவில் நடக்கும் கூத்தை காண வந்த போது நிகழ்ந்த ஒரு நிகழ்வு இக்கதையில் முக்கிய இடத்தைப்பெருகிறது. இராமனின் மகன் நல்லான் என்ற இளைஞன் தூக்கத்தில் பஞ்சமர்களை பிரிக்கும் கயிரைத்தாண்டி வெள்ளாளப் பெண்கள் பகுதிக்கு தூக்கக் கலக்கத்தில் சென்று விடுவது வெள்ளாள இளைஞர்களை வெறியேற்றி விடுகிறது. நல்லான் நையப்புடைக்கப்படுகிறான். இதைத் தடுக்க முயன்ற செல்லத்துரையனும் தாக்கப்படுகிறான். “பள்ளருக்கு கட்டிற கயிரெல்லாம் அறுத்தெறிவன்” என்ற செல்லத்துரையனின் சொற்கள் வெள்ளாளர்களின் கடும் எதிர்ப்புக்கு அவனை ஆளாக்கின. நையப்புடைக்கப்பட்ட நல்லான் பக்கத்து ஊர் அரசாங்க மருத்துவ மனைக்கு கொண்டுபோய் சிகிச்சை அளித்தால் பிழைத்திருப்பான். ஆனால் விதானையார் வல்லிபுரம் நல்லானின் அப்பா ராமனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. சிகிச்சை ஏதுமின்றி நல்லான் இறக்கிறான். இந்த அநீதியை எதிர்த்து செல்லத்துரையன் பறையர் வகுப்பைச்சார்ந்த மாதவன் என்பானுடன் இணந்து போராடுகிறான். கடைசியில் பெரிய தண்டனை ஏதுமின்றி வெள்ளாளர்கள் தப்பி விடுகின்றனர். மாதவன் செல்லத்துரையன் ஆகிய இருவரின் இக்கூட்டு முயற்சி பின்னர் ஊர் பஞ்சாத்து தேர்தலில் போட்டியிடப்பயன் படுகிறது. செல்லத்துரையன் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடுகிறான்..

இப்புதினத்தின் முக்கிய பெண் பாத்திரங்கள் தொகு

செல்லத்துரையனின் மீது காதல் உணர்வுடன் அக்கரை காட்டுபவர்கள் மூன்று பெண்கள். பக்கத்து வீட்டில் உள்ள கற்பகம் அவனிடம் அன்புடன் பழகுகிறாள். ஒருமுறை அவள் சேமித்த ரூபாய் பத்தைக்கொடுத்து அவளுக்கு கம்மல் ஒன்று வாங்கி வரச் சொல்கிறாள். செல்லத்துரையனும் யாழ்ப்பாணத்தில் ஒரு அழகான கம்மல் வாங்கி வந்து கொடுக்கிறான். அதை அணிந்துகொண்டு அனைவரிடமும் காட்டிப் பெருமைப்படுகிறாள். அடுத்து அவன் மீது தணியாத அன்பும் அக்கரையும் கொண்டது செம்பாட்டு பள்ளர் வகுப்ப்பைச் சேர்ந்த வள்ளி. ஆரம்பத்தில் இருந்தே வள்ளியின் மேல் தான் செல்லத்துரையனுக்கு தனிக்கவனம் இருந்து வருகிறது. மூன்ற்வதாக செல்லத்துரையன் மீது தனிக்கவனம் செலுத்துவது சீனிவாசகம் என்ற வெள்ளாளரின் மூத்த பெண் சரஸ்வதி. சீனிவாசகம் அவர் வீட்டு தென்னை மரத்தில் செல்லத்துரையன் கள் இறக்குவதற்கு அனுமதி அளிக்கிறார். ஆதோடு அவருக்கு வேண்டிய கள்ளை தினமும் அவனிடம் இருந்து விலைக்கு பெற்று அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். மற்ற வெள்ளாளர்களெல்லாம் செல்லத்துரையனை வெறுத்தாலும் சரஸ்வதி மட்டும் அவனுடன் பரிவுடன் பேசி அவளுக்கு அவன் மீதுள்ள அக்கரையை உணர்த்துவாள்.

சாதியம் தொகு

இந்த புதினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குரும்பையூர் என்ற கற்பனைக் கிராமத்தைக் களமாக கொண்டு விளங்குகிறது.இந்தியாவில் ஆரியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சாதியம் மேல்சாதி, கீழ் சாதி வேறுபாடுகள் வலிமை குன்றி இருந்த போது புலம் பெயர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் மத்தியிலே கொடுமை மிகுந்து 20ம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் காணப்பட்டது. தென் இந்தியாவில் இருந்து குடியேறியுள்ள வெள்ளாள வகுப்பினருக்கும் அங்கிருந்தே வந்துள்ள பளளர், பறையர் வகுப்பினருக்கும் நடக்கும் வர்க்கப் போரே இதன் கதையின் கருப்பொருளாக அமைகின்றது. உயர்சாதி வெள்ளாளர்களை, பஞ்சமர்களான பள்ளர்களும், பறையர்களும் ஒரு அணியில் இருந்து தங்களின் சுயமரியாதைக்காகவும் மேல் சாதிக்காரர்களின் அடக்கு முறையில் இருந்து தப்பவும் போராடும் சூழலை இந்த புனிதத்தில் காணலாம்.

சாதிக்குள் சாதி தொகு

சாதிய வேறுபாட்டை சித்தரிக்கும் இந்நூலில் சாதிக்குள் சாதி வேறுபாடு பார்க்கும் நிலை இப்புதினத்தில் காணப்படுகிறது. கதாநாயகனான செல்லத்துரையன் வள்ளியை மணம் முடிக்க விரும்புகிறான். ஆனால்அதற்கு அவன் தந்தை கதிரன் எதிர்ப்பு தெரிவிக்கிறான். அதே சமயம் செல்லத்துரையன் கற்பகத்தை மணமுடிக்க சம்மதம் தெரிவிக்கிறான். வள்ளி செம்பாட்டு பள்ளர் வகுப்பைச் சேர்ந்தவள் என்பதால் குமரன் அவளை மறுமகளாக ஏற்றுக்கொள்ள தங்குகிறான். குரும்பையூர் பள்ளர்கள் செம்பாட்டு பள்ளர்களையும், வேதக்கார பள்ளர்களையும் குறைவாகவே மதிப்பிடுகின்றனர். அற்றும் சீனிவாசகத்தின் இளையமகள் மகேஸ்வரி பஞ்சலிங்கத்துடன் ஓடிவிடுகிறாள். அவர்கள் திருமணத்தை ஏஅற்க சீனிவாசகம் மறுப்பத்ற்கு காரணம் சாதிக்குள் சாதி பார்க்கும் அவரது இயல்பால் தான்.

நீண்டபயணத்தில் யதார்த்தம் தொகு

கதாநாயகனான செல்லத்துரையன் மரம் ஏறிக் கள் இறக்கும் தொழிலைக் கொண்டவன். அவனிடம் அவனது தங்கை அன்னம் அவன் கதையில் முதன் முதலாக வரும்போது அன்றைய வேலையை துவக்குவதற்கு, அதாவது மரம் ஏறிக் கள் இறக்குவதற்கு தயாராகின்றான். அப்பொழுது அவனிடம் அவனது தங்கை அவன் தொழிலுக்கு தேவையான உபகரணங்களான மூன்றனைக் கொடுக்கிறாள். அவை ஏறுபட்டி, இயனக்கூடு, தளநார். பின்னர் அவனைப் பார்த்துக் கேட்கிறாள்.

"முட்டி வேணுமாண்ணை?"
"வேண்டாம், அங்கை கிடக்கு"
செல்லத்துரையன் பதில் சொல்லிக்கொண்டே இயனக்கூடும் ஏறுபட்டி தள நாரும் கையிலே ஆட ஒழுங்கையை நோக்கி நடந்தான்.

மேற்கண்ட உரையாடல் செல்லத்துரையனையும் அவன் தங்கை அன்னத்தையும் நம் கண்முன் கொண்டுவந்து விடுகின்றது. கடைசியாக உள்ள ஆசிரியரின் குரல் நம்மை யாழ்ப்பாணத்துக்கே அழைத்துச் செல்கிறது. இது போன்ற பகுதிகள் நீண்டபயணத்தில் நிறைய இருக்கின்றன. இதனால் தான் இந்நூலுக்கு முன்னுரை வழங்கிய அகிலன் [4] நூலைப்பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

"இது ஒரு யாழ்ப்பாணத்துத் தமிழ் நாவல். யாழ்ப்பாணத்துப் பனைவடலி, வள்ளிக்கிழங்கு, அதன் காற்று, மண் வளம், இவ்வளவும் இதில் நிறைந்திருக்கிகின்றன.தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் பெருமைகள், சிறுமைகள், ஆசைகள், நிராசைகள், துன்பங்கள், போராட்டங்கள், சாதிக்கட்டுப்பாடுகள் இவற்றோடு இதில் உலவுகிறார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்து மக்களாக இருப்பதால், யாழ்ப்பாணத்துத் தமிழிலேயே இயற்கையாகப் பேசுகிறார்கள். இதைப் படிக்கும் போது நம்மை இதன் ஆசிரியர் யாழ்ப்பாணத்துக்கே அழைத்துச்சென்று அதன் குடிசைகள் நிறைந்த பகுதிகளில் விட்டு விடுகிறார்."

மேற்கோள்களும் குறிப்புகளும் தொகு

  1. குமரன் புத்தக இல்லம், கொழும்பு, முதற் பதிப்பு 1978, இரண்டாம் பதிப்பு 2009 ISBN 978- 955- 659- 192 -7
  2. ஈழத்துத் தமிழ் நாவல்: வளமும் வளர்ச்சியும், குமரன் புத்தக இல்லம், கொழும்பு 2008 ISBN - 978 -955- 659-116-8
  3. செ. கணேசலிஙனின் நாவல்களில் பெண் பாத்திரங்கள் : ஒரு பெண்ணிலை நோக்கு, ஆசிரியர்: லறினா ஏ ஹக், குமரன் புத்தக இல்லம், கொழும்பு
  4. நீண்ட பயணம், குமரன் பப்ளிஷர்ஸ், கொழும்பு, 1965 அகிலனின் முன்னுரை பக்கம் 7-8

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீண்ட_பயணம்_(புதினம்)&oldid=3370362" இலிருந்து மீள்விக்கப்பட்டது