நெகின் கபால்வாக்

நெகின் கபால்வாக் (Negin Khpalwak) என்பவர் ஆப்கானித்தான் நாட்டைச் சேர்ந்த ஓர் இசைக் கலைஞராவார். நெகின் 1997 ஆம் ஆண்டு ஆப்கானின் குனார் மாகாணத்தில் பிறந்தார். ஆப்கானின் தேசிய இசை நிறுவனத்தில் பயின்று சோரா என்ற இசைக் குழுவைத் தொடங்கி நடத்தினார். ஆப்கானித்தானில் அனைவரும் பெண்கள் என்ற சிறப்புடன் இந்த இசைக் குழு தொடங்கப்பட்டது. நெகின் இத்தகைய சிறப்பைப் பெற்ற முதல் பெண் இசைக்கலைஞராவார்.[1] 2017 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்து தாவோசு நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் நெகின் இந்த இசைக்குழுவின் இசை நிகழ்ச்சியை நடத்தினார்.[2]

நெகின் கபால்வாக்

ஆரம்பகால வாழ்க்கை தொகு

ஆப்கானித்தானின் வடகிழக்கு மாகாணமான குனாரில் நெகின் கபால்வாக் பிறந்தார். இளம் பெண்ணாக இருந்தபோது நெகின் கபால்வாக் இசை மீது மிகுந்த ஆர்வம் காட்டினார். ஆனால் ஆப்கானித்தானில் தலிபான் ஆட்சியின் இருத்ததால் இசை வாசிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டு இருத்தது. பின்னர் தலிபான் ஆட்சி வீழ்ச்சியடைந்தபோதும் இந்த தடை தொடர்ந்தது. ஏனெனில் பல முசுலிம்கள் இசையை வாசிப்பதை விரும்பாத பழமைவாதிகளாக இருந்தனர். அதிலும் குறிப்பாக முசுலிம் பெண்கள் இசையை இசைப்பதை அவர்கள் முற்றிலும் விரும்பவில்லை.

நெகின் பாசுட்டூன் பழங்குடியினர் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தின் பெண்ணாக இருந்ததால் இவர் ஒருபோதும் தன் இசை ஆர்வத்தை குடும்பத்துடன் பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இசையுடன் ஆன இவரது பயணத்தின் முதல் முயற்சிகள் இரகசியமாகவே இருந்தன. பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நெகின் தன்னுடைய இசை ஆர்வத்தை தந்தையிடம் வெளிப்படுத்தினார். அவருடைய தந்தை குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களைப் போல் இல்லாமால் இவருக்கு ஆதரவாக இருந்தார்.

தந்தையைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரும் நெகினுக்கு எதிராக இருந்தார்கள். ஒரு பாசுட்டுன் பழங்குடியினப் பெண் எப்படி இசையை இசைக்க முடியும்? அதிலும் குறிப்பாக பாசுட்டூன் பழங்குடியினரில் ஒரு ஆணுக்குக் கூட இசையை வாசிக்கும் உரிமை இல்லை என்று அனைவரும் இவரைத் தடுத்தார்கள்.

நெகின் ஆப்கானித்தான் நாட்டின் காபூலில் அமைந்துள்ள குழந்தை கல்வி மற்றும் பராமரிப்பு அமைப்பான ஓர் அனாதை இல்லத்தில் சேர்க்கப்பட்டார். இந்த இல்லத்தில் நெகின் ஒன்பது வயது வரை மட்டும் தான் கல்வி பெற இயலும். பின்பு இவருடைய பதிமூன்றாவது வயதில், இசைக்கலைஞர் - அகமது நாசர் சர்மாசுட் என்பவரால் நிறுவப்பட்ட ஆப்கானித்தான் தேசிய இசை நிறுவனத்தில் இசை பயில நெகின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிறுவனம் 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு அன்று முதல் 41 பெண்கள் உட்பட 141 மாணவர்களுடன் இயங்கி வருகிறது. இந்த மாணவர்களில் பாதி பேர் தெருக் குழந்தைகள் அல்லது அனாதைகள் ஆவார்.[3]

தொழில் தொகு

நெகின் காபூலைத் தலைமையிடமாக் கொண்டு இயங்கும் ஆப்கானிய மகளிர் இசைக்குழுவைத் தொடங்கி வழிநடத்தி வருகிறார். இந்த இசைக்குழு நாட்டின் முதல் அனைத்து பெண்கள் இசைக் குழுவாக கருதப்படுகிறது. மேலும் ஆப்கானித்தான் தேசிய இசைக்குழு நிறுவனம் மேற்கத்திய இசையையும் மற்றும் ஆப்கானித்தான் இசைக்கருவிகளைக் கொண்டு இசைநிகழ்ச்சிகளை நடத்துகிறது .

2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சுவிட்சர்லாந்து மற்றும் செருமனியில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு முன்பாக நெகின் ஆப்கானித்தானுக்கு வெளியே சுவிட்சர்லாந்தின் தாவோசில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில் முதன் முறையாக தன்னுடய இசை நிகழ்ச்சியை நடத்தினார்.[4] இசை நிகழ்ச்சியை நடத்த வெளியே செல்லும் போது இவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இவருடைய சொந்த ஊரிலிருந்து மிரட்டல்கள் பல இவருக்கு வரும். இத்தகைய மன அழுத்தம் மற்றும் பயம் ஆகியவற்றை எதிர்கொண்டு சமாளித்து நெகின் புதுமைப் பெண்ணாக வெற்றி பெற்று ஆப்கானின் முதல் பெண் இசை நிகழ்ச்சி அமைப்பாளரானார். நியுயார்க் நகரைச் சேர்ந்த நியூசு டீப்ளி என்ற இணையதள செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தான் வெளிநாடுகளில் இசையைப் படிக்க விரும்புவதாகவும், புதிய இசைக்குழுவை உருவாக்க ஆப்கானித்தானுக்குத் திரும்ப விரும்புவதாகவும் பேட்டியளித்தார்.[5]

மேற்கோள்கள் தொகு

  1. "Afghan teenager braves threats, family pressure to lead women's orchestra". Reuters. 2016-04-18. https://www.reuters.com/article/us-afghanistan-orchestra-idUSKCN0XF00X. 
  2. "Afghan orchestra puts women's rights center stage at Davos". Reuters. 2017-01-20. https://www.reuters.com/article/us-davos-meeting-orchestra-idUSKBN1532N2. 
  3. Anna Coren. "Music school strikes chord with Afghan street kids - CNN.com". CNN. பார்க்கப்பட்ட நாள் 2017-07-24.
  4. "Behind the scenes with Afghanistan's first all-female orchestra". World Economic Forum (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
  5. "Afghanistan’s First Female Conductor Braves Death Threats to Make Music" (in en). Women & Girls. https://www.newsdeeply.com/womenandgirls/community/2017/04/18/afghanistans-first-female-conductor-braves-death-threats-to-make-music. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகின்_கபால்வாக்&oldid=3857650" இலிருந்து மீள்விக்கப்பட்டது