பயனர்:Aathavan jaffna/தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள்

தமிழ் விக்கியூடகங்கள் என்பது யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு இணைய அமைப்பாகும். இதில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலரும் பங்களிக்கின்றனர். இப்படி பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்கள் தன்னகத்தே கொண்டுள்ளவை ஏராளம். இதிலும் குறிப்பிட வேண்டியது இவை அனைவருக்கும் பயன் தரும் வகையில் அமைந்துள்ளது தான். அந்த வகையில் பல்வகைப்பட்டோர் பங்களிக்கும் விக்கியூடகங்களில் மாணவர்களின் செயற்பாடு பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

விக்கியூடகங்களை மாணவர்கள் பயன்படுத்துதல் தொகு

மாணவர்கள் இணையத்தை தவறாக பயன்படுத்துகின்ற இக்காலத்தில் விக்கி ஊடகங்கள் மாணவர்களை வழிநடத்தும் ஒரு கருவியாக இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். இணையத்தில் மாணவர்கள் அறிய அதிகம் இருந்தாலும் அதை பயன்படுத்த மாணவர்கள் விளைவதில்லை. விக்கியூடகங்களை மற்றவர்களை விட மாணவர்களே அதிகமாக பயன்படுத்துகின்றனர். காரணம் தமது கல்விக்கு விக்கியூடகங்கள் தேவைப்படும். விக்கியூடகங்களில் தேடுதலும் இலகுவானது மற்றுமொரு காரணமாகும். மாணவர்கள் விக்கியூடகங்களில் அதிகமாக விக்கிப்பீடியாவையே பயன்படுத்துகிறார்கள். எனினும் விக்கியில் இருந்து தகவல்களைப் பயன்படுத்தும் போது மாணவர்கள் அவதனாமாக இருக்க வேண்டும். ஏன் என்றால் தவறனா தகவல்கள் இருக்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.சில தகவல்கள் முழுமையாக இல்லாமலும் இருக்கலாம். ஆகவே சுட்டப்பட்ட மூலங்களை பயன்படுத்தலாம். பேச்சுப் பக்கத்தை அவதானித்து மேலும் சிக்கல்களை அவதானிக்கலாம்.

விக்கியூடகங்களில் மாணவர்களின் பங்களிப்பு தொகு

விக்கியூடகங்களில் மாணவர்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. ஒரு சில மாணவர்கள் விக்கியில் பங்களிப்பை தொடங்கியிருந்தாலும் அவர்கள் தொடர்ந்து பங்களிப்பது இல்லை. தமிழ் விக்கிப்பீடியாவில் இவ்வளவு காலமும் சிறப்பாக மதனாகரன் எனும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர் பங்களித்து வருகிறார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகி என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவரால் கல்விச் சுமை காரணமாக தற்போது சிறப்பாக பங்களிக்க முடியவில்லை. இவரைப்போலவே கிருத்திகன் என்ற மாணவரும் இலங்கையிலிருந்து சிறப்பாக பங்களித்து வருகிறார். இவர்களைப் போலவே ஆதவன் எனும் பயனரும் யாழ்ப்பாணத்திலிருந்து பங்களிக்கிறார். ஜீவதுவாரகன் என்பவர் யாழ்ப்பாணத்திலிருந்து புதிதாக பங்களிக்க தொடங்கியுள்ளார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து அபிராமி எனும் மாணவரும் பங்களிக்க தொடங்கியுள்ளார். இவ்வாண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றான கட்டுரைப் போட்டியின் காரணமாக பிரபன் என்ற மாணவப் பங்களிப்பாளரும் யாழ்ப்பாணத்திலிருந்து பங்களிக்கத் தொடங்கியுள்ளார். இவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழ் விக்கிப்பீடியாவில் மாணவர்களின் பங்களிப்பு இந்தியாவிலிருந்து மிகச்சொற்பமே. அதிகமாக மாணவர்கள் இலங்கையிலிருந்தும் குறிப்பாக யாழ்ப்பாணத்திலிருந்தும் பங்களிக்கின்றனர்.

விக்கியில் பங்களிப்பதால் மாணவர்களுக்கு கிடைக்கும் பயன்கள் தொகு

  • மாணவர்களின் எழுத்துத் திறன் மேன்படும் : தமிழ் விக்கியூடகங்களில் மாணவர்கள் பங்களிக்கும் கட்டுரைகளை பிற பயனர்கள் திருத்தி உதவுவார்கள். வரலாற்றில் திருத்தங்களை அவதானிப்பதன் மூலம் மாணவர்களின் எழுத்துத் திறனை மேம்படுத்தலாம்.
  • விக்கி, விக்கி நுட்பத்தை அறிந்து கொள்ளல் : விக்கி என்பது இணையம் ஊடாகப் பலர் கூட்டாகச் சேர்ந்து உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கான ஒரு மென்பொருள். மாணவர்கள் தமிழ் விக்கியூடகங்களில் பங்களிப்பதன் ஊடாக விக்கியில் தொகுப்பது பற்றி, விக்கித் தொழில்நுட்பங்கள் பற்றி மேலும் அறிந்து கொள்ளலாம்.
  • விக்கிச் சமூகம் : உலகளாவிய அளவில் பன்மொழிகளில் விக்கியில் தொகுக்கும் தன்னார்வலர் சமூகத்தோடு மாணவர்கள் ஊடாட முடியும். ஒரு கட்டற்ற, கூட்டுறவு, கூட்டு மதிநுட்ப செயற்திட்டம் எப்படி சமூகத்தால் முன்னெடுக்கப்படுகிறது என்பதை நெருக்கமாக அவதானிக்கலாம். மேலும் பல்துறை சார்ந்த அறிஞர்களோடு பழக வாய்ப்புக் கிடைக்கும். இதன் மூலம் மாணவர்களின் பல்துறை அறிவு விருத்தி அடையும்.
  • தமிழ்க் கல்வி: தமிழ்க் கல்விக்கு தமிழ் விக்கியூடகங்கள் ஒரு முதன்மை இணைய கல்வி வளம் ஆகும். தமிழ் கல்விக்கு வாசிப்பு, எழுத்து, கலைச்சொற்கள், அறிவியல் தமிழ் எனப் பல முனைகளில் தமிழ் விக்கியூடகங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • தமிழ்த் தட்டச்சு : தமிழ் விக்கியூடகங்களில் பங்களிப்பதன் மூலம் மாணவர்கள் தமிழ் தட்டச்சு பழகலாம். இது அவர்களது கல்வி வாழ்க்கைக்கு உதவலாம்.
  • தகவல், அறிவு, பல்லூடகங்கள் : விக்கியூடகங்கள் பல்துறைகளில் பல வகை அறிவுத் தகவல்களைக் கொண்டுள்ளன. விக்கியில் பங்களிப்பதன் ஊடாக விக்கி வளங்களைத் திறனாகப் பயன்படுத்துவது பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • மகிழ்ச்சி, பொழுது போக்கு: விக்கியில் பங்களிப்பது மகிழ்ச்சியைத் தரும் ஒரு செயற்பாடு ஆகும். மேலும் இது ஒரு பொழுது போக்கு ஆகும்.
  • சமூக சேவை : விக்கிப் பங்களிப்பு ஒரு வகைச் சமூக சேவை ஆகும். இது பல மக்களின் அறிவுப் பசியைத் தீர்க்க உதவும்
  • கல்வி வளர்ச்சி : விக்கியில் தொகுக்கும் போது அல்லது கட்டுரை எழுதும் போது அது மாணவர்களின் மனதில் ஆழமாக பதிந்துவிடும். இதன் மூலம் மாணவர்களின் அறிவும் வளர்ச்சி அடையும். மேலும் பல்வகைபட்டவற்றைத் தொகுப்பதால் பொது அறிவும் வளரும்.
  • புகைப்படக்கலை : மாணவர்கள் எடுக்கும் ஒளிப்படங்களை, நிகழ்படங்கள் விக்கி பொதுவில் பதிவேற்றுவதன் மூலம் பொழுதுபோக்காகவும் அவர்களுக்கு நன்மையாகவும் அமைகிறது.

பங்களிக்க வராமைக்கான காரணங்கள் தொகு

பெரும்பாலான மாணவர்கள் விக்கி ஊடகங்களைப் பயன்படுத்தினாலும் அதில் தாங்களும் தொகுக்கலாம் என அறியவில்லை. சில முக்கிய காரணங்கள்:

ஆர்வமின்மை தொகு

இணையத்தில் உலாவும் மாணவர்கள் முகநூல், இணைய விளையாட்டுக்கள் என்ற வழிகளில் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இணையத்தைப் பயன்படுத்துகின்ற பெரும்பாலான மாணவர்கள் தமது கல்வி தேவைகளுக்காக இணையத்தைப் பயன்படுத்த முனைகின்றனர். இந்த வகையில் விக்கியூடகங்கள் அவர்களது கல்வித் தேடலில் சிக்குகிறது. விக்கிப்பீடியாவை யாரும் தொகுக்கலாம் என அவ்வாறு வருவோர் பலர் அறிந்திருக்கின்றனர். அவ்வாறு அறிந்திருந்தும் ஆர்வமில்லாமையால் பலர் பங்களிப்பதில்லை. மேலும் இக்காலகட்ட மாணவர்கள் இணையத்தை சரியாகப் பாவிக்க முனைவதில்லை. அதனால் விக்கியூடகங்களில் பங்களிக்க முன்வருவதில்லை எனலாம். அவர்கள் விக்கிப்பீடியாவில் தொகுப்பதால் எப்பயனும் இல்லை என நினைக்கலாம்! ஆர்வமில்லாமைக்கு முக்கிய காரணம் தமிழ் தட்டச்சு தெரியாமையாகும்.

கல்வி தொகு

மாணவர்கள் தமது முக்கிய தொழிலாக கல்வியையே கொள்கின்றனர். இக்கால மாணவர்களுக்கு அது ஒரு மனச்சுமையாகவும் மாறிவிடுகிறது. பெற்றோர்களால் எப்போதும் மாணவர்கள் படிப்பதற்கே உந்தப்படுகிறார்கள். அதனால் அதில் மிகுதியாக உள்ள நேரத்தை தமக்கு விரும்பிய முறையில் செலவழிக்க முனைகிறார்கள். விக்கிப்பீடியாவில் பங்களிக்கும் நேரத்தை விளையாடுவதற்கோ, அல்லது இதர தேவைகளுக்காகவோ பயன்படுத்த எண்ணலாம்! மேலும் சிலர் இது தமது கல்வியை பாதிக்குமோ என பயப்படுகின்றனர். விக்கிப்பீடியாவால் தமக்கு விளையும் பயன்கள் பற்றித் தெளிவில்லாமலும் இருக்கலாம். மேலும் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்க எண்ணம் அதிகம் இருந்தாலும் அதற்குப் பெற்றோர்கள் அனுமதிப்பது முக்கியம். அந்த அனுமதி கிடைக்காவிட்டால் பங்களிப்பது சிரமம் தான். இதற்காக அவர்கள் சிறு நேரத்தை ஒதுக்குவதற்கு வேண்டலாம்.

விக்கி தொழிநுட்பம் தொகு

நவீன கால மாணவர்களின் கல்விக்கு கணினியும் இணையமும் இன்றியமையாததாகிறது. மாணவர்களில் பெரும்பாலானோர் கணினியைப் பயன்படுத்த அறிந்திருக்கின்றனர். இவர்களால் இணையத்தையும் பயன்படுத்த முடிகிறது. இக்காரணங்களால் விக்கியூடகங்கள் அதிகமாக மாணவர்களாலேயே நாடப்படுகிறது. விக்கியூடகங்களை மாணவர்கள் தொகுக்கவும் முனைகிறார்கள். எனினும் மாணவர்களால் விக்கி நுட்பத்தை இலகுவில் புரிந்து கொள்ள முடிவதில்லை. ஆகையால் விக்கியூடகங்களை தொகுப்பதால் ஏதேனும் பிரச்சினைகள் வந்துவிடுமோ என அஞ்சுகின்றனர். ஆகையால் விக்கிப்பீடியாவிற்கு வருவது தமது தேவைகளைப் பூர்த்தி செய்வது, செல்வது என்றே பல மாணவர்கள் உள்ளார்கள். விக்கி தொழினுட்பம் பற்றி இவர்களுக்கு போதிய அறிவும் விளக்கமும் இல்லை என கூறலாம்.

விக்கி கொள்கைகளை அறியாமை தொகு

விக்கியில் தொகுத்த மாணவர்கள் பலர் விக்கிக்கொள்கைகளை போதுமானளவு அறிந்திருக்கவில்லை.

இதற்காக விக்கியால் மேற்கொள்ளக்கூடிய வழிகள் தொகு

மாணவர்கள் விக்கியூடகங்களை அதிகம் பயன்படுத்தினாலும் விக்கியூடகங்களில் பங்களிக்க வருவதில்லை, அதற்கான காரணங்களை மேலே பார்த்தோம். இதை மாற்றியமைக்க விக்கி செய்யக்கூடிய சில விடயங்களை கவனிப்போம். விக்கியூடக மன்றத்தை பள்ளிகளில் உருவாக்குவது மிகவும் உதவும். இதன் மூலம் மாணவர்கள் விக்கியை இலகுவில் அணுகமுடியும். சிறந்த பரப்புரையாகவும் அமையும். இங்கே விக்கித் தொழிநுட்பம் பற்றிய விளக்கத்தை எடுத்துரைக்கலாம். தமிழ் தட்டச்சு தெரியாதவர்களுக்கு தமிழில் தட்டச்சுப் பயிற்சி தேவைப்படின் ஈடுபாடு உள்ளவர்களுக்கு அதற்கான பயிற்சிகளை ஒழுங்குபடுத்தி உதவலாம். இதன் மூலம் தமிழ் தட்டச்சு தெரியாதவர்கள் அதைக்கற்றுக்கொண்டு விக்கியில் பங்களிக்க வருவார்கள். தமிழ் தட்டச்சு மட்டும் இல்லாமல், நிரலாக்கம், ஒளிப்படக்கலை, நிகழ்படக்கலை, வரைகலை, விக்கியில் தொகுப்பது போன்று ஒரு மாணவர் குழுவிற்கு ஈடுபாடு உள்ள, தேவையான திறன்கள் தொடர்பாக பயிற்சிகள் ஒழுங்கமைத்து உதவலாம். இது அவர்களுக்கு பிடித்தமான துறையிலேயே பங்களிக்கத் தூண்டும். இது அவர்களது ஈடுபாடைக் கூட்டுவதோடு ஆர்வத்தையும் வளர்க்கும். பள்ளியில் ஆசியர்கள் விக்கியில் பங்களிப்பதை ஒரு பயிற்சியாக வழங்கலாம். இதன் மூலம் விக்கிப் பயன்பாடு பலருக்குக் கடத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதை விக்கியோடு இணைந்து செய்வது வரவேற்கத்தக்கது.

மாணவர் மன்றங்கள் தொகு

விக்கியூடகங்கள் குறித்தும், விக்கியூடகங்களில் இருக்கும் பல்வேறு தகவல்களை மாணவர்கள் அறிந்து கொள்வதுடன் அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதற்கும், விக்கியூடகங்களில் மாணவர்கள் பங்களிப்பு செய்வதை ஊக்குவிக்கும் நோக்கத்திலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் விக்கிப்பீடியா மாணவர் மன்றம் அமைக்கும் செயல்பாடுகள் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

முடிவுரை தொகு

மாணவர்களின் பங்களிப்புக்கு விக்கியூடகங்கள் தற்காலத்தில் இன்றியமையாத ஒன்றாகும் நிலைமை உருவாகின்றது. அதைப்போலவே மாணவர்களின் பங்களிப்பும் விக்கியூடகங்களில் முற்காலத்தை விட அதிகமாகத் தான் உள்ளது. எனினும் சில காரணங்களால் மாணவர்களால் விக்கியூடகங்களில் பங்களிக்க முடியவில்லை. தற்போதைய காலகட்டத்தில் பாடசாலைகளில் விக்கியூடக மன்றங்கள் ஆரம்பமாகத் தொடங்கிள்ளது. அந்தவகையில் மாணவர்களின் பங்களிப்பும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.