விலங்கியல்

தொடரின் ஒரு பகுதி


விலங்கியலின் கிளைகள்

மானிடவியல் ·
தேனீயியல் · எட்டுக்காலியியல்
கணுக்காலியியல் · நீர்ப்பாலூட்டியியல்
சிப்பியோட்டியல் · பூச்சியியல்
நடத்தையியல் · ஒண்டுப்புழுவியல்
ஊர்வனவியல் · மீனியல்
நத்தையினவியல் · பாலூட்டியியல்
எறும்பியல் · உருளைப்புழுவியல்
விலங்கு நரம்பு&நடத்தையியல் · பறவையியல்
தொல்விலங்கியல் · மிதவையுயிரியல்}
முதனியியல்

குறிப்பிடத்தக்க விலங்கியலாளர்

ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின்
வில்லியம் கிர்பி · கரோலசு லின்னேயசு
கான்ட்ராட் லாரென்சு · தாமசு சே
ஆல்ஃப்ர்ட் ரஸல் வல்லேஸ் · மேலும்...

வரலாறு

டார்வினுக்கு முன்
டார்வினுக்குப் பின்

பறவையியல் (Ornithology) என்பது, விலங்கியலின் ஒரு பிரிவு. இது பறவைகள் பற்றி ஆய்வு செய்யும் ஒரு துறை. பறவையியலின் பல அம்சங்கள், இதுபோன்ற பிற துறைகளிலிருந்தும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. பறவைகள் எளிதில் கண்ணால் காணத்தக்கதாக இருப்பதும், அவற்றின் அழகியல் கவர்ச்சியும் இதற்கான முக்கிய காரணங்கள். பெருமளவிலான தொழில்சாரா ஆய்வாளர்கள் இறுக்கமான அறிவியல் வழிமுறைகளுக்கு அமைய ஆய்வுகள் செய்திருப்பது இதனைக் குறித்து நிற்பதாகக் கருதமுடியும்.

பறவையியல் என்னும் அறிவியல் நீண்டகால வரலாற்றைக் கொண்டது. பறவைகள் குறித்த ஆய்வுகள், கூர்ப்பு, நடத்தை, சூழல் ஆகிய துறைகளைச் சார்ந்த கருத்துருக்களான இனங்களின் வரையறுப்பு, சிறப்பாக்க வழிமுறைகள், உள்ளுணர்வு, கற்றல், சூழ்நிலைக் கூறுகள், தீவு உயிர்ப்புவியியல் போன்றவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளது. தொடக்ககாலப் பறவையியல் இனங்களின் விவரிப்பு அவற்றின் பரம்பல் என்பன பற்றியே முக்கியமாகக் கவனத்தில் கொண்டிருந்தது. இன்றைய பறவையியலாளர்கள் குறிப்பான கேள்விகளுக்கு விடைகாண முயல்கின்றனர். அவர்கள், கோட்பாடுகளின் அடிப்படையிலான எடுகோள்களையும், எதிர்வுகூறல்களையும் சோதித்துப் பார்ப்பதற்குப் பறைவைகளை மாதிரிகளாகப் பயன்படுத்துகின்றனர்.

பெரும்பாலான தற்கால உயிரியல் கோட்பாடுகள், வகைப்பாட்டுக் குழுக்கள் பலவற்றுக்கும் பொருந்தக்கூடியனவாக அமைவதனால், தம்மைப் பறவையியலாளர் என்று தனியாக அடையாளம் காட்டிக்கொள்பவர்களின் தொகை குறைந்துவிட்டது. பறவையியலில் பலவகையான கருவிகளும், நுட்பங்களும் பயன்படுவதுடன், தொடர்ந்து அவற்றில் முன்னேற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

வரலாறு தொகு

பறவையியலின் வரலாறு, உயிரியலின் வரலாற்றுப் போக்குகளைக் காட்டுவதாக அமைகின்றது. இப்போக்குகள், வெறும் விவரிப்பில் இருந்து தொடங்கி, கோலங்களை அடையாளம் காண்பதனூடாக, அக்கோலங்களை உருவாக்கும் வழிமுறைகளை விளக்குவதுவரை மாற்றம் அடைந்து வந்துள்ளன.

தொடக்ககால அறிவும் ஆய்வுகளும் தொகு

மனிதர்கள் மிகப் பழைய காலத்திலிருந்தே பறவைகளைக் கவனித்து வந்துள்ளனர். கற்காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் பல அக்காலத்தில் பறவைகள் தொடர்பாக இருந்த ஆர்வத்தைக் காட்டுவனவாக உள்ளன. பறவைகள் ஒரு முக்கியமான உணவாகப் பயன்பட்டிருக்கக்கூடும். தொடக்கக் கற்காலக் குடியிருப்புகளின் அகழ்வாய்வுகளில், எண்பதுக்கு மேற்பட்ட பறவை இனங்களின் எலும்புகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

உலகின் பல பண்பாடுகளில் பறவைகள் தொடர்பான பல சொற்களைக் காணமுடிகின்றது. மரபுவழியான பறவைப் பெயர்கள் பெரும்பாலும் பறவைகளின் நடத்தை பற்றிய விவரமான அறிவை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுட் பல பெயர்கள் ஒலிக்குறிப்புச் சொற்கள் ஆகவும் உள்ளன. நாட்டு மருத்துவத்திலும் பறவைகள் தொடர்பான அறிவு இருந்திருக்கக்கூடும். அத்துடன் இவற்றைப்பற்றிய அறிவு வாய்வழி அறிவாகப் பிந்திய தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்டது. காட்டுப் பறவைகளை வேட்டையாடுவதற்கும், அவற்றைப் பழக்கி வீடுகளில் வளர்ப்பதற்கும் அவற்றைப்பற்றிய அறிவு குறிப்பிடத்தக்க அளவில் தேவைப்பட்டிருக்கும். பறவைப் பண்ணைகளும், வல்லூறு வளர்ப்பும், உலகின் பல நாடுகளில் பழைய காலம் தொட்டே வழக்கத்தில் உள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பறவையியல்&oldid=2742852" இலிருந்து மீள்விக்கப்பட்டது