பாசுபைட்டு எசுத்தர்

பாசுபைட்டு எசுத்தர் (phosphite ester) என்பது P(OR)3 என்ற பொது கட்டமைப்பை உடைய கரிமப் பாசுபரசு சேர்மமாகும். பாசுபரசு அமிலத்தின் (H3PO3,) எசுத்தர்களாக இவை கருதப்படுவதால் கரிமப் பாசுபைட்டுகள் என்ற பெயராலும் அழைக்கப்படுகின்றன. மும்மெத்தில் பாசுபைட்டு அல்லது டிரைமெத்தில் பாசுபைட்டு P(OCH3)3. என்ற சேர்மம் இவ்வகையின் மிக எளிய ஒரு சேர்மமாகும்.

பாசுபைட்டு எசுத்தரின் பொதுவமைப்பு, பாசுபரசின் மீது தனி இணை எலக்ட்ரான்களைக் காட்டுகிறது.

தொகுப்புமுறை தொகு

பாசுபரசு முக்குளோரைடு அல்லது பாசுபரசு முப்புரோமைடை ஆல்ககால் ஒன்றுடன் சேர்த்து வினைப்படுத்துவதால் பாசுபைட்டு எசுத்தர்களைத் தயாரிக்க முடியும். அணுக்கரு கவர்பொருள் அல்லாத பொருத்தமான மூவிணைய அமீன் போன்ற ஒரு கார வினையூக்கியின் முன்னிலையில் வினை நிகழவேண்டும். இவ்வினையூக்கி HCl அல்லது HBr சேர்மத்தை ஒரு உடன் விளைபொருளாக வெளியேற்றுகிறது.

 

கட்டமைப்பும் பிணைப்பும் தொகு

பாசுபரசின் மீது தனி இணை எலக்ட்ரான்கள் இருப்பதால், முக்கோணப் பட்டைக்கூம்பு மூலக்கூற்று வடிவத்தை பாசுபைட்டு எசுத்தர்கள் ஏற்கின்றன. இந்த காரணத்தால் இவை C3v சீரொழுங்கை வெளிப்படுத்துகின்றன.

வினைகள் தொகு

பெர்கோவ் வினையில் வினைல் பாசுபோனேட்டுகள் உற்பத்தியிலும், மைக்கேலிசு-அர்புசோவ் வினையில் பாசுபோனேட்டுகள் உற்பத்தியிலும் பாசுபைட்டு எசுத்தர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதைத்தவிர குறிப்பாக இவை ஒடுக்கும் முகவராகவும் செயல்படுகின்றன. உதாரணமாக, தன்னாக்சிசனேற்ற வினையின் [1] முதலாவது திட்டத்தில் மூவெத்தில் பாசுபைட்டு சில ஐதரோபெராக்சைடுகளை ஆல்ககால்களாக குறைக்கின்றன. இச்செயல்முறையில் பாசுபைட்டானது பாசுப்பேட்டு எசுத்தராக மாற்றப்படுகிறது.

 
Scheme 1. Autoxidation of a keto steroid with oxygen to the hydroperoxide (not depicted) followed by reduction with triethylphosphite to the alcohol

மேலும் இவ்வினை வகை வெந்தெர் டாக்சால் ஒட்டுமொத்த தொகுப்பு வினையிலும் பயன்படுத்தப்படுகிறது.

ஒருங்கிணைவு வேதியியல் தொகு

பாசுபைட்டு எசுத்தர்கள் இலூயிக் காரம் என்பதால் இவை பல்வேறு உலோக அயனிகளுடன் வினைபுரிந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகின்றன. ஒருங்கிணைவின்போது இவற்றின் முக்கோணப் பட்டைக்கூம்பு மூலக்கூற்று வடிவமானது, ஈனிக்கூம்பு கோணத்தை வெளிப்படுத்துகிறது. இதனாலேயே இவை ஈந்தணைவி என அழைக்கப்படுகின்றன. இருப்பினும், கட்டமைப்புடன் தொடர்புடைய பாசுபீன் ஈந்தணைவி குடும்பத்தில் இவை அதிகமுக்கியத்துவம் பெறவில்லை.

மேற்கோள்கள் தொகு

  1. J. N. Gardner, F. E. Carlon and O. Gnoj (1968). "One-step procedure for the preparation of tertiary α-ketols from the corresponding ketones". J. Org. Chem. 33 (8): 3294–3297. doi:10.1021/jo01272a055. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசுபைட்டு_எசுத்தர்&oldid=3939893" இலிருந்து மீள்விக்கப்பட்டது