பாஸ்கலின் பந்தயம்

பாஸ்கலின் பந்தயம் (Pascal's Wager) விளக்க மெய்யியல் வாதங்களில் ஒன்று. இது பிரெஞ்சு மெய்யியலாளர் பிலைசு பாஸ்கலால் முன்வைக்கப்பட்டது. இறைவன் இருக்கிறாரா இல்லையா என்ற பந்தயத்தில் அனைத்து மக்களும் தங்கள் வாழ்வைப் பணயம் வைக்கின்றனர் என்கிறது பாஸ்கலின் பந்தயம்.[1]

பிலைசு பாஸ்கல்

பகுத்தறிவுடைய மக்கள் இறைவன் உள்ளாரெனக் கொண்டே தங்கள் வாழ்வை வாழ வேண்டும். ஏனெனில் இறைவன் உணமையில் இருந்தால், அவர் மேல் நம்பிக்கை கொண்டவருக்கு அளவில்லாப் பலனும் (அல்லது சொர்க்கம் செல்லும் வாய்ப்பு), இறைமறுப்பாளருக்கு அளவில்லா நட்டமும் (அல்லது நரகம் செல்லும் வாய்ப்பு) கிடைக்கும். இறைவன் இல்லையெனில் இறை நம்பிக்கையுடன் வாழ்பவருக்கு குறைந்த அளவு நட்டமே (சில இன்பங்களை இழக்கிறார்). இதனால் எப்படி நோக்கினும், இறைவன் உள்ளார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வதே ஒருவருக்கு லாபகரமானது என்கிறது பாஸ்கலின் வாதம்.

பாஸ்கல் தனது பந்தயத்தை கிறித்தவ இறையியலின் சட்டகத்துள் தான் உருவாக்கினார். அவர் இறந்தபின் வெளியான அவரது “நினைவுகள்” நூலின் 233 பகுதியில் இது குறிப்பிடப்பட்டிருந்தது. பாஸ்கலின் பந்தயம் நிகழ்தகவுக் கோட்பாட்டில் பல புதிய களங்களை அறிமுகப்படுத்தியத்துடன், முடிபு கோட்பாட்டின் முதல் பயன்பாடாகவும் விளங்கியது. பிற்காலத்தில் தோன்றிய இருத்தலியல், பயனீட்டுவாதம், உளவுறுதியியம் போன்ற மெய்யியல் களங்களைக் கோடிட்டுக் காட்டியது.[2]

பந்தயம் தொகு

பாஸ்கலின் பந்தயம் அவரது “நினைவுகள்” (Pensées) நூலில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது (பிரிவு 3, பகுதி 233):

  1. இறைவன் உள்ளார் அல்லது இல்லை
  2. ஒரு விளையாட்டு ஆடப்படுகிறது... ஒரு நாணயம் சுண்டப்படுகிறது, தலை விழலாம் அல்லது பூ விழலாம்
  3. பகுத்தறிவின் துணை கொண்டு இரு நிகழ்வுகளையும் நியாயப்படுத்தக்கூடாது
  4. கண்டிப்பாகப் பந்தயம் கட்ட வேண்டும் (வேறு வழி இல்லை)
  5. கிடைக்கும் லாபத்தையும் நட்டத்தையும் இறைவன் உள்ளார் எனக் கொண்டு ஆராய்வோம். வென்றால் அளவில்லாத லாபம், தோற்றால் அளவான நட்டம்.
  6. எனவே தயக்கமின்றி இறைவன் இருக்கிறார் என்று வாழ்வை வாழ வேண்டும்.
  7. எனினும் சிலரால் (இறைவனை) நம்ப முடியாது. அவர்கள் தங்களது இயலாமையை உணர்ந்து நம்ப முயல வேண்டும்.

விளக்கம் தொகு

ஒருவர் தனது வாழ்வில் இறை நம்பிக்கையுடன் வாழலாம். அல்லது இறை நம்பிக்கையற்று வாழலாம். இரு சாத்தியக்கூறுகள் எழுகின்றன. இறைவன் உண்மையில் இருந்தால், நம்பிக்கையுடன் வாழ்பவருக்கு அளவற்ற லாபம் கிடைக்கும் (சொர்க்கம் முதலியன); நம்பிக்கையற்று வாழ்பவருக்கோ அளவற்ற நட்டம் கிட்டும் (நரகம் முதலியன). இறைவன் இல்லையெனில் நம்பிக்கையுடன் வாழ்பவருக்கு அளவான நட்டம் (சில சொகுசுகளையும் இன்பங்களையும் இழக்கிறார்); நம்பிக்கையற்று வாழ்பவருக்கோ அளவான லாபமே கிட்டுகிறது (சில சொகுசுகளும் இன்பங்களும்)

முடிபுக் கோட்பாட்டின் படி, பாஸ்கலின் பந்தயத்தைப் பின்வரும் முடிபு அணி (decision matrix) கொண்டு சித்தரிக்கலாம்:

இறைவன் இருக்கிறார் (இ) இறைவன் இல்லை (¬இ)
நம்பிக்கை (ந) +∞ (அளவில்லா லாபம்) −1 (அளவான நட்டம்)
நம்பிக்கையின்மை (¬ந) −∞ (அளவில்லா நட்டம்) +1 (அளவான லாபம்)

இந்த மதிப்புகளை நோக்கும் போது, இறை நம்பிக்கையுடன் வாழும் தெரிவு (ந), நம்பிக்கையற்று வாழும் தெரிவை (¬ந) விட அதிக லாபகரமானது என்பது புலனாகின்றது. முடிபுக் கோட்பாட்டின் படி மேலுள்ள பட்டியலில் +∞ (அளவற்ற லாபம்) தெரிவு மட்டுமே மதிக்கத்தக்கது. ஏனைய தெரிவுகள் மதிப்பற்றவை..[3]

விமர்சனங்கள் தொகு

பாஸ்கலின் காலத்திலேயே இறை மறுப்பாளர்களும் நம்பிக்கையாளர்களும் அவரது பந்தயம் குறித்து பல விமர்சனங்களை முன் வைத்தனர். இறைமறுப்பாளர்கள் பகுத்தறிவுக்குப் புலனாகாத இறைவனால் “லாபம்” கிடைக்கும் என்பதை விமர்சித்தனர். நம்பிக்கையாளர்கள் “இறைவன் இருந்தால்” என்று ஐயத்துடன் இருப்பதால் இதில் அறியவியலாமையின் சாயல் அடிப்பதாக விமர்சித்தனர். பாஸ்கலின் பந்தயம், இறைவன் இருக்கிறாரா இல்லையா என்பதை ஐயமின்றி நிறுவாமல், எந்த சமயம் போதிக்கும் இறைவனை நம்ப வேண்டும் என்றும் கூறாது விடுகிறது என்ற விமர்சனமும் உண்டு.[4]

பிரெஞ்சு மெய்யியலாளர் வோல்ட்டயர், பாஸ்கலின் பந்தையத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இறைவன் இருக்கிறார் என்பதை பாஸகலின் பந்தயம் நிறுவுகின்றது என்ற வாதம் ”சிறுபிள்ளைத்தனமானது என்றும் தான் ஒன்றை நம்பினால் தனக்கு நல்லது என்று வாதிடுவது, அது இருக்கிறது என்பதற்கு சான்றாகாது என்றும் கருதினார்.[5] மற்றொரு மெய்யியலாளரான எட்டியேன் சூரியாவ், பாஸ்கலின் வாதத்தை ஒருவர் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், பந்தயம் கட்டுபவர் இறைவனும் அப்பந்தய விதிகளின் படி நடப்பார் என்று நம்பவேண்டும் என்று விளக்குகிறார். பந்தயம் கட்டுபவர், இறைவன் அப்பந்தயத்தை ஏற்றுக் கொண்டார் என்றும் நம்ப வேண்டும். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேலும், பந்தயம் கட்டுபவர் ஆற்று வெள்ளத்தில் மிதக்கும் ஒரு இலையைக் கொண்டு தானாகவே பந்தயம் கட்டும் ஒரு முட்டாளைப் போன்றவன் என்கிறார் சூரியாவ். ஒரு கல்லின் அருகில் ஆடிக்கொண்டிருக்கும் இலையைக் காணும் அந்த முட்டாள், ”அந்த இலை கல்லுக்கு இடப்புறமாகத்தான் செல்லும் என்று நான் [பெரும் பணக்காரர்] ரோத்சைல்டிடம் ஒர் மில்லியன் பந்தயம் கட்டுகிறேன்” என்று கூறுகிறான். அந்த இலை இடப்புறமாகவே போனாலும் ரோத்சைல்ட் பந்தயத்தை ஏற்கவில்லையாததால் அந்த முட்டாளின் பந்தய வெற்றி அர்த்தமற்றதாகின்றது. ரோத்சைல்ட் ஏற்றுக்கொள்வாரா என்று தெரியாமல் தானே பந்தயம் கட்டும் அந்த முட்டாளை ஒத்தவர் பாஸ்கலின் பந்தயத்தில் இறைவனின் நிலை அறியாமல் அவர் மீது நம்பிக்கை கொள்பவர் என்கிறார் சூரியாவ்.[6]

உலகில் பல சமயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் இறைவனைப்பற்றி பல்வேறு அளவுகோல்களும் கருத்துகளும் கொண்டுள்ளன. பாஸ்கலின் பந்தயத்தின் “இறைவனை நம்பு” என்று கூறியிருப்பதைப் பின்பற்ற வேண்டுமென்றால், எந்த இறைவனை நம்ப வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. எந்த இறைவன் உண்மையான இறைவன் என்ற கேள்விக்கு முழுமையான பதில் இல்லாமல், பாஸ்கல் சொன்னபடி இறைவனை நம்பி வாழ்வதில் எப்பயனும் இல்லை என்ற விமர்சனங்களும் உண்டு.[7][8]

பாஸ்கலின் பந்தயத்தின் படி அளவில்லா லாபத்துக்காக ஒருவர் இறை நம்பிக்கை கொண்டிருந்தால், அதை இறைவன் கண்டுபிடித்துவிட மாட்டார் என நினைப்பது அபத்தமானது என்று சிலர் விமர்சிக்கின்றனர். அளவில்லாத லாபத்தைத் தரக்கூடிய சர்வ வல்லமை பொருந்திய இறைவன், யார் உண்மையான நம்பிக்கையாளர், தன்னலத்துக்காக நம்பிக்கை கொள்பவர் யார் எனப் பகுத்தறிய இயலாதவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பாஸ்கலின் பந்தயம் செயல்படுகிறது. இது ஒன்றுக்கொன்று முரணானது என்பது அவர்களது வாதம்.[4][9]

மேற்கோள்கள் தொகு

  1. "Blaise Pascal," Columbia History of Western Philosophy, page 353.
  2. Alan Hájek,Stanford Encyclopedia of Philosophy
  3. Alan Hájek,Stanford Encyclopedia of Philosophy
  4. 4.0 4.1 Dawkins, Richard (May 21, 2007). "Chapter 3: Arguments for God's existence". The God Delusion. Black Swan. pp. 130–132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-552-77331-7. {{cite book}}: |access-date= requires |url= (help)
  5. Remarques sur les Pensees de Pascal XI
  6. l'admirable analyse du pari de Pascal in Souriau, L'ombre de Dieu, p. 47 sq.) – La Philosophie, Tome 2 (La Connaissance), Denis Huisman, André Vergez, Marabout 1994, pp.462-63
  7. Diderot, Denis (1875–77) [1746]. J. Assézar (ed.). Pensées philosophiques, LIX, Volume 1 (in French). p. 167.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  8. Mackie, J. L. (1982). The Miracle of Theism, Oxford, pg. 203
  9. The End of Pascal's Wager: Only Nontheists Go to Heaven
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்கலின்_பந்தயம்&oldid=3169434" இலிருந்து மீள்விக்கப்பட்டது